Published : 17 Feb 2020 02:57 PM
Last Updated : 17 Feb 2020 02:57 PM
வண்ணாரப்பேட்டையில் சிஏஏ எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டதால் தங்கள் பிள்ளைகளின் திருமணத்தையும் தள்ளி வைக்க பெற்றோர் முடிவு செய்த நிலையில், அப்படிச் செய்யவேண்டாம் என போராட்டக் களத்திலேயே திருமணம் செய்து வைக்கப்பட்டது.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு வலுத்து வருகிறது. தமிழகத்தில் கடந்த 2 மாதங்களாக பல்வேறு மாவட்டங்களில் போராட்டம் நடந்து வருகிறது. திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும், சட்டப்பேரவையில் எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் எனப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
திமுக சார்பில் 2 கோடி கையெழுத்துகள் பெறப்பட்டு குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டுள்ளது. மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமிய அமைப்பினர் நடத்திய போராட்டத்தில் பிரச்சினை ஏற்பட்டது. தடியடி நடத்தப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.
இந்நிலையில் போராட்டத்தில் இஸ்லாமியர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்தும், சிஏஏவை எதிர்த்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றக் கோரியும் தொடர்ந்து வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். நூற்றுக்கணக்கான இஸ்லாமியப் பெண்கள் அங்கேயே இரவு பகல் பாராமல் தங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு அங்கேயே சமையல் செய்து உணவும் வழங்கப்படுகிறது.
தமிழகத்தின் ஷாகின் பாக் என அழைக்கப்படும் இந்தப் போராட்டம் நடக்கும் பகுதியில் போராட்டத்தில் கலந்துகொண்ட இரண்டு இஸ்லாமியக் குடும்பத்தினர் தங்கள் பிள்ளைகளுக்கு இன்று திருமணம் நடத்த முன்கூட்டியே திட்டமிட்டு இருந்தனர்.
இன்று வண்ணாரப்பேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் விமரிசையாக திருமணம் நடக்கவிருந்த நிலையில், சிஏஏவுக்கு எதிரான போராட்டம் நடந்து வருவதால், தமது பிள்ளைகளுக்குத் தற்போது திருமணம் வேண்டாம் என அந்தத் திருமணத்தைத் தள்ளி வைத்துவிட்டனர்.
இந்தத் தகவல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள், தலைமையேற்றுள்ளவர்கள் ஆகியோரின் கவனத்திற்குச் சென்றது. ஏன் திருமணத்தைத் தடை செய்யவேண்டும். ஊரே இங்கு கூடியுள்ளது. திட்டமிட்டபடி போராட்டக் களத்தில் மேடையிலேயே உங்கள் பிள்ளைகளுக்கு நிக்காஹ் செய்யலாம் என பெரியவர்கள் கூற, நெகிழ்ச்சியுடன் இரு வீட்டாரும் சம்மதித்தனர்.
இதையடுத்து இருவீட்டார் புடைசூழ, உறவினர்கள் குழுமியிருக்க மணமகன் ஷயின்ஷா, மணமகள் சுமையா அலங்கரித்து அழைத்து வரப்பட்டனர். பெண்கள் பக்கத்தில் மணமகள் அமர்த்தப்பட்டு, மேடையில் மணமகன் அமர்த்தப்பட அங்குள்ள ஆலிம் அவர்களுக்கு நிக்காஹ்வை நடத்தினார். போராட்டத்தில் கலந்துகொண்ட அனைவரும் நிக்காஹ் பிரார்த்தனையில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
போராட்டக்காரர்களால் சமைக்கப்பட்ட மதிய உணவு திருமண விருந்தாக அனைவருக்கும் பரிமாறப்பட்டது. உறவினர், உறவினர் அல்லாதோர் கலந்துகொண்ட திருமணத்தைக் கண்டு பெற்றோர் நெகிழ்ச்சியுடன் அனைவருக்கும் நன்றி தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT