Published : 17 Feb 2020 01:01 PM
Last Updated : 17 Feb 2020 01:01 PM
ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுக்கு வரத்து அதிகரித்துள்ள நிலையில், தேவை குறைவாக இருப்பதால் தக்காளி விலை வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால் தக்காளி பறிக்கும் கூலி கூட கட்டுப்படியாகாத நிலையில் விலை உள்ளதால் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல், தேனி, திருப்பூர் மாவட்டங்களில் உள்ளூர் தேவைக்குப் போக மீதமுள்ள தக்காளிகள் முழுவதும் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் உள்ள மெகா காய்கறி மார்க்கெட்டுக்குக் கொண்டு வரப்படுகிறது. இங்கிருந்து சென்னை உள்ளிட்ட பிற நகரங்கள் மற்றும் கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
கடந்த வாரம் முதலே சந்தைக்கு தக்காளி வரத்து படிப்படியாக அதிகரித்தது. இதனால் கடந்த வாரம் முதலே தக்காளி விலை படிப்படியாக வீழ்ச்சியைச் சந்தித்தது.
ஒட்டன்சத்திரம் மொத்த மார்க்கெட்டில் 14 கிலோ கொண்ட ஒரு தக்காளிப் பெட்டி இன்று (பிப்.17) ரூ.70-க்கு விற்பனையானது. மொத்த விலையில் ஒரு கிலோ தக்காளி ரூ.5-க்கு விற்கப்பட்டது. இதை வாங்கிச் செல்லும் சிறுவியாபாரிகள் வெளி மார்க்கெட்டில் ஒரு கிலோ ரூ.7 முதல் ரூ.10 வரை விற்பனை செய்கின்றனர்.
தக்காளி பயிரிட்டுள்ள விவசாயிகள் கூறுகையில், "தக்காளியைத் தோட்டத்தில் பறிக்க கூலி ஆட்களுக்குச் சம்பளம் கொடுத்து, அவற்றைப் பெட்டிகளில் சேகரித்து ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுக்குக் கொண்டு வர வாகன வாடகை கொடுக்கிறோம். இதையடுத்து கமிஷன் கடையில் தக்காளியைக் கொடுத்தால், விற்கும் விலையில் கமிஷன் போக அவர்கள் தரும் தொகை மிகவும் சொற்பமாகவே உள்ளது.
தக்காளியை விற்பதன் மூலம் கிடைக்கும் தொகை பறிக்கும் கூலிக்குக் கூட கட்டுப்படியாகாத நிலைதான் உள்ளது. வாகன வாடகையை தனியாகத் தர வேண்டிய நிலை. இதற்கு தக்காளியைத் தோட்டத்திலேயே பறிக்காமல் விட்டுவிட்டால் நடவு செய்த தொகை மட்டுமே இழப்பாகும். தக்காளியை விற்பனைக்குக் கொண்டுவந்து மேலும் செலவு செய்ய வேண்டியதில்லை. லாபத்தைத் தரும் என எதிர்பார்த்த தக்காளி தற்போது இழப்பைத் தருகிறது" என்றனர்.
இதுகுறித்து ஒட்டன்சத்திரம் தக்காளி கமிஷன் மண்டி உரிமையாளர் ஆறுமுகம் கூறுகையில், "தக்காளி விளைச்சலுக்கு ஏற்ப தட்பவெப்பநிலை உள்ளது. மழையால் சேதமடைந்து விளைச்சல் குறைய வாய்ப்பில்லை. மேலும் அளவான தண்ணீர் கிடைக்கிறது. இதனால் விளைச்சல் அனைத்துப் பகுதிகளிலும் அதிகரித்துள்ளது. உள்ளூர் தேவைகள் போக மார்க்கெட்டுக்குத் தக்காளி வரத்து அதிகரித்துள்ளது.
ஆனால், விஷேசங்கள் பெரிய அளவில் ஒன்றும் இல்லை என்பதால் தேவை குறைவாகவே உள்ளது. இதனால் தக்காளி விற்பனை மந்தமாக உள்ளதால் விலை குறைந்துவிட்டது. இந்த நிலை மார்ச் 15 வரை நீடிக்கும் என்றே தெரிகிறது. இதன்பின் வறட்சி அதிகரிப்பால் தக்காளி விளைச்சல் குறைய வாய்ப்புள்ளதால் வரத்து குறைந்து விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது. தற்போதைய நிலையில் விவசாயிகளுக்கு இழப்புதான்" என்றார்.
தவறவிடாதீர்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT