Published : 17 Feb 2020 10:33 AM
Last Updated : 17 Feb 2020 10:33 AM
மாணவர்களுக்கு சத்துணவு வழங்கும் பொறுப்பை தமிழக அரசே ஏற்க வேண்டும் என, மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, வைகோ இன்று (பிப்.17) வெளியிட்ட அறிக்கையில், "நீதிக்கட்சி அரசால் சென்னை மாநகராட்சிப் பள்ளி மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டு, காமராஜரால் விரிவுபடுத்தப்பட்ட மதிய உணவுத் திட்டம், எம்ஜிஆர் காலத்தில், சத்துணவுத் திட்டமாக வளர்ச்சி பெற்றது.
இந்த நிலையில், சென்னை மாநகராட்சியின் 24 பள்ளிகளில், 5,785 மாணவர்களுக்கு மட்டும், காலை சத்துணவு கொடுக்கும் திட்டத்தை, தமிழ்நாடு அரசு நேற்று தொடங்கி இருக்கின்றது.
ஆனால், இந்தத் திட்டத்தை தமிழ்நாடு அரசு நடத்தப்போவது இல்லை. அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு, 'ஹரே ராமா ஹரே கிருஷ்ணா' இயக்கத்தை நடத்தி வருகின்ற 'இஸ்கான்' என்ற இந்துத்துவ அமைப்பிடம் ஒப்படைத்துவிட்டார்கள். அதற்காக, சென்னை மாநகரின் மையமான கிரீம்ஸ் சாலையில் 20 ஆயிரம் சதுர அடி, பெரம்பூர் பேரக்ஸ் பகுதியில் 35 ஆயிரம் சதுர அடி நிலத்தை, அந்த அமைப்புக்கு அதிமுக அரசு தாரை வார்த்துக் கொடுத்துவிட்டது. இந்த இடங்களின் மதிப்பு, இன்றைய நிலையில் 500 கோடிக்கும் மேல் ஆகின்றது.
இந்தத் திட்டம் குறித்து தமிழக அரசு எந்த முன்னறிவிப்பும் வெளியிடவில்லை. வேறு அமைப்புகள் விண்ணப்பம் தர எந்த வாய்ப்பும் அளிக்கவில்லை. எல்லாமே ரகசியமாகவே நடைபெற்று இருக்கின்றது. இது சட்டத்திற்கு எதிரானது. யாருடைய கட்டாயத்திற்கோ அதிமுக அரசு அடிபணிந்து இருக்கின்றது.
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் 5 கோடி நிதி அளித்து இருக்கின்றார். இவ்வாறு அரசுப் பணத்தை ஒரு தனியார் அமைப்புக்கு அள்ளிக்கொடுக்கும் அதிகாரம், ஆளுநருக்கு இருக்கின்றதா?
லட்சக்கணக்கான சத்துணவுப் பணியாளர்களின் உழைப்பில் வெற்றிகரமாகச் செயல்பட்டு, இன்று இந்தியாவுக்கே வழிகாட்டிக் கொண்டு இருக்கின்ற சத்துணவுத் திட்டத்தை, முழுமையும் தனியாரிடம் ஒப்படைப்பதற்கான தொடக்கம்தான், இந்தப் புதிய திட்டம்.
இந்த 'இஸ்கான்' அமைப்பு, ஏற்கெனவே கர்நாடகாவில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கி வருகின்ற சத்துணவில், வெங்காயம், பூண்டு கலக்காத சாம்பாரைக் கொடுத்தது. அதனால் மாணவர்கள் சாப்பிட முடியாமல் வாந்தி எடுத்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. தமிழ்நாட்டில் சத்துணவில் முட்டை வழங்கப்பட்டு வருகின்றது. 'இஸ்கான்' அமைப்பு சைவ உணவை வலியுறுத்துவது ஆகும். முன்னேறிய நாடுகளிள், பள்ளி மாணவர்களுக்கு இறைச்சியும் வழங்கப்படுகின்றது.
இந்த நிலையில், இந்த அமைப்பு, தமிழர்களின் உணவுப் பழக்கத்திற்கு எதிராகவே செயல்படும். எனவே, இனி சத்துணவுத் திட்டம், எம்ஜிஆரின் சத்துணவுத் திட்டம் ஆக இருக்காது; மனுதர்ம சத்துணவுத் திட்டம் ஆகிவிடும். தமிழக அரசின் இந்த நடவடிக்கையை வன்மையாக எதிர்க்கின்றேன். மாணவர்களுக்கு சத்துணவு வழங்கும் பொறுப்பை தமிழக அரசே ஏற்க வேண்டும்" என வைகோ வலியுறுத்தியுள்ளார்.
தவறவிடாதீர்!
தமிழகத்தில் 3 ஆண்டில் 300 ஆண்டுக்கான வளர்ச்சி திட்டங்கள்: அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பெருமிதம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT