Published : 17 Feb 2020 07:11 AM
Last Updated : 17 Feb 2020 07:11 AM

குடியுரிமை சட்டத்துக்கு எதிராக 3-வது நாளாக போராட்டம்; சமூக வலைதளங்களை தீவிரமாக கண்காணிக்கும் சைபர் கிரைம் போலீஸ்: வதந்திகள் பரப்பினால் நடவடிக்கை என டிஜிபி எச்சரிக்கை

குடியுரிமை சட்டத்துக்கு எதிராக சென்னை வண்ணாரப்பேட்டையில் 3-வது நாளாக நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட முஸ்லிம் பெண்கள்.

சென்னை

குடியுரிமை சட்டத்துக்கு எதிராக சென்னை வண்ணாரப்பேட்டையில் நேற்று 3-வது நாளாக போராட்டம் நடைபெற்ற நிலையில் சமூக வலைதளங்களை சைபர் கிரைம் போலீஸார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். வதந்திகளை பரப்பினால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டம், ஒழுங்கு டிஜிபி ஜே.கே.திரிபாதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

குடியுரிமை சட்டத்துக்கு எதிராக சென்னை வண்ணாரப்பேட்டையில் நேற்று முன்தினம் போராட்டம் நடைபெற்றது. அப்போது போராட்டக்காரர்களுக்கும், போலீஸாருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதில், ஒருவர் உயிர் இழந்ததாக வதந்தி பரவியது. இதன் தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் முஸ்லிம்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், வண்ணாரப்பேட்டையில் நேற்று 3வது நாளாக முஸ்லிம்களின் போராட்டம் தொடர்ந்தது. அதேநேரத்தில் வதந்திகள் பரவி சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விடக்கூடாது என்பதில் போலீஸார் கவனம் செலுத்தி வருகின்றனர்.

அதிகாரிகள் உத்தரவு

முதல் கட்டமாக சமூக வலை தளங்களான வாட்ஸ்அப், பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்டவைகளை தமிழக சைபர் கிரைம் போலீஸார் உன்னிப்பாக கண்காணித்து வருகின்றனர். இதேபோல் சென்னையில் மத்திய குற்றப்பிரிவில் உள்ள சைபர் கிரைம் போலீஸாரும் கண்காணிப்பை முடுக்கி விட்டுள்ளனர்.போராட்டம் நடைபெறும் இடங்கள், போராட்டம் நடைபெற வாய்ப்பு உள்ள பகுதிகளை கண்டறியவும், கண்காணிக்கவும், அதுகுறித்த தகவல்களை உடனுக்குடன் தெரிவிக்கவும் உளவு மற்றும் நுண்ணறிவு பிரிவு போலீஸாருக்கு போலீஸ் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

மேலும், தேவையற்ற வதந்திகளை பரப்பினால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிபி ஜே.கே.திரிபாதியும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுபோக ரோந்து போலீஸாரும் கண்காணிப்பை தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x