Published : 17 Feb 2020 07:07 AM
Last Updated : 17 Feb 2020 07:07 AM
குடிநீர் வழங்கும் 5 ஏரிகளிலும் கணிசமான நீர்இருப்பு உள்ளதால், இந்தாண்டு சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு வருவதற்கு வாய்ப்பே இல்லை என்று சென்னைக் குடிநீா் வாரிய உயர் அதிகாரிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
சென்னையில் கடந்த ஆண்டு கடும் வறட்சி நிலவியதால் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க திருவள்ளூர் விவசாயக் கிணறுகள், நெய்வேலி கல்குவாரிகள், சிக்கராயபுரம் கல்குவாரி, அரக்கோணத்தில் இருந்து ரயிலில் காவிரி நீர் ஆகியன எடுத்து வரப்பட்டன. பெரும்பாக்கம், நெசப்பாக்கம் ஆகிய இடங்களில் உள்ள ஏரிகளில் இருக்கும் நீரை மூன்றாம் தர நவீன தொழில்நுட்பத்தில் சுத்திகரித்து, தண்ணீர் எடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இதனால் அந்த ஏரிகளில் தண்ணீர் ஆவியாவது தடுக்கப்பட்டு, நிலத்தடி நீரைச் சேமிக்க வழிவகை செய்யப்படுகிறது.
இதனிடையே மேட்டூர் அணை 3 முறை நிரம்பியதால் வடக்குத்து என்ற இடத்தில் காவிரி நீர் சுத்திகரிக்கப்பட்டு, அங்கிருந்து புவிஈர்ப்பு விசை மூலம் சென்னை போரூர் ஏரிக்கு வந்து சேர்கிறது. அதுபோல ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து தேவையான அளவுக்கு கிருஷ்ணா நீர் வந்து சேர்ந்துள்ளது. இதனால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் 4 ஏரிகள் மற்றும் வீராணம் ஏரியில் போதியளவு தண்ணீர் இருப்பு உள்ளதால் இந்தாண்டு சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பே இல்லை என்று சென்னைக் குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் மேலும் கூறியதாவது:-
சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஆகிய 4 ஏரிகளில் பிப்.15-ம் தேதி நிலவரப்படி, 6,281 ஆயிரத்து மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. கடந்தாண்டு இதே நாளில் 883 மில்லியன் கனஅடி நீர் மட்டுமே இருந்தது. இந்தாண்டு இந்த ஏரிகளில் கணிசமான நீர் இருப்பு உள்ளதாலும், பிப்.14-ம் தேதி நிலவரப்படி கடலூர் மாவட்டம், வீராணம் ஏரியில் 1,392 மில்லியன் கனஅடி நீர்இருப்பதாலும், சென்னையில் கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையங்கள் மூலம் தலா 100 மில்லியன் கனஅடி வீதம், 200 மில்லியன் கனஅடி கிடைப்பதாலும், இந்தாண்டு தண்ணீர் தட்டுப்பாடு வருவதற்கான வாய்ப்பு அறவே இல்லை.
சென்னையில் தற்போது வீடுகளுக்கு குழாய் மூலம் தினமும் 650 மில்லியன் கனஅடி தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. குடிநீர் இல்லாத பகுதிகளுக்கு குடிநீர் வாரிய ஒப்பந்த லாரிகள் மூலம் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. ஏரிகளில் போதியளவு நீர் இருப்பதால், இந்தாண்டு சென்னையில் குடிநீர் தட்டுப்பாட்டைச் சமாளிக்க சிறப்புத் திட்டங்கள் முன்னெடுக்கப்படவில்லை. ஏனென்றால், பூண்டி உட்பட சென்னைக்கு குடிநீர் வழங்கும் 4 ஏரிகளில் பிப்.15-ம் தேதி நிலவரப்படி சுமார் 6,300 மில்லியன் கனஅடியும், வீராணத்தில் ஜனவரி 31-ம் தேதி நிலவரப்படி 1452 மில்லியன் கனஅடியும் நீர்இருப்பு உள்ளது. அடுத்த 8 மாதங்களுக்கு தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க வேண்டிய நிலை ஏற்படாது.
சென்னையில் நிலத்தடி நீர்மட்டத்தைப் பொருத்தவரை கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 1.3 மீட்டர் உயர்ந்துள்ளது.
தற்போது சென்னையில் தினமும் 650 மில்லியன் லிட்டர் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. அடுத்த 8 மாதங்களுக்கு குறிப்பாக தென்மேற்கு பருவமழை தொடங்கும் ஜூன் மாதம் வரை தண்ணீர் தட்டுப்பாடு இருக்காது.
கிருஷ்ணா நதி நீர்
11, 257 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட பூண்டி உள்ளிட்ட 4 ஏரிகளில் சுமார் 6 டிஎம்சி தண்ணீர் தொட்டுவிட்டாலே 2 ஆண்டுகளுக்கு சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு வராது. இந்தாண்டு கிருஷ்ணா நதிநீர் பெரியளவில் கைகொடுத்தது. கண்டலேறு அணையில் போதிய இருப்பு இருப்பதால் தொடர்ந்து கிருஷ்ணா நதிநீர் வருகிறது. மேலும், நெசப்பாக்கம், பெருங்குடியில் உள்ள ஏரிகளில் கழிவுநீர் 3-ம் நிலை சுத்திகரிப்பு மூலம் ஏரியில் தண்ணீர் விடப்படும். அது இயற்கையாகவே சுத்திகரிப்பான பிறகு குடிநீராக விநியோகிக்கப்படும். இப்பணி இந்தாண்டு இறுதியில் முடிவடையும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT