Published : 17 Feb 2020 06:55 AM
Last Updated : 17 Feb 2020 06:55 AM
குடியுரிமைச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தை திமுகதான் தூண்டி விடுகிறது என பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் குற்றம்சாட்டிஉள்ளார்.
பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரும், மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர் இல.கணேசனின் 75-வது பிறந்த நாள் விழாவும், அவரது பொதுவாழ்வில் 50 ஆண்டுகளைக் கடந்து 51-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் விழாவும் சென்னை தியாகராய நகர், ராமகிருஷ்ணா பள்ளி வளாகத்தில் நேற்று நடைபெற்றது.
பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, சென்னை விவேகானந்தா கல்லூரி முன்னாள் முதல்வர் வ.வே.சுப்பிரமணியன், பாஜக நிர்வாகி டால்பின் ஸ்ரீதரன், விழாவை நடத்தும் பாரத மண் வாசனை அமைப்பி்ன் தலைவர் வீர.திருநாவுக்கரசு உள்ளிட்டோர் இல.கணேசனின் 50 ஆண்டுகால பொதுவாழ்க்கை பணிகளை பாராட்டிப் பேசினர்.
முன்னதாக செய்தியாளர்களிடம் இல.கணேசன் கூறியதாவது:
எனது குடும்பத்தில் சிலர் ஆர்எஸ்எஸ் அமைப்பில் இருந்ததால் 9-வது வயதிலேயே நானும் ஆர்எஸ்எஸ்ஸில் இணைந்தேன். அப்போது ஆர்எஸ்எஸ் மாநில அமைப்பாளராக இருந்த ராம.கோபாலன் அவர்களின் அழைப்பை ஏற்று அரசுப் பணியை ராஜினாமா செய்து விட்டு ஆர்எஸ்எஸ் முழுநேர ஊழியராக வந்தேன். 1970-ல் நாகர்கோவிலில் எனது பொதுவாழ்க்கை தொடங்கியது.
20 ஆண்டுகள் ஆர்எஸ்எஸ்ஸில் முழுநேர ஊழியராக பணியாற்றிய பிறகு 1991-ல் பாஜக மாநில அமைப்பு பொதுச்செயலளராக அரசியல் பணிக்கு அனுப்பினார்கள். கடந்த 30 ஆண்டுகளாக பாஜகவில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி வருகிறேன். பொதுவாக பிறந்த நாள் கொண்டாடும் வழக்கம் எனக்கு இல்லை. எனது பெயரைப் பயன்படுத்தி மக்களுக்கு உதவி செய்கிறார்கள் என்பதால் விழாவுக்கு ஒப்புக் கொண்டேன். பொதுவாழ்வில் 50 ஆண்டுகளை கடந்து விட்டேன் என்பது ஆச்சரியமாக இருக்கிறது.
1947-ல் மதத்தின் அடிப்படையில் நாடு பிளக்கப்பட்டது. அதனால் பாதிக்கப்பட்டு பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 3 அறிவிக்கப்பட்ட முஸ்லிம் நாடுகளில் இருந்து வந்த 6 சிறுபான்மை மதத்தினருக்கு குடியுரிமை வழங்கவே குடியுரிமைச் சட்டத்தில் பாஜக அரசு திருத்தம் கொண்டு வந்துள்ளது.
ஆனால், இதனால் சிறுபான்மையினருக்கு குறிப்பாக முஸ்லிம்களுக்கு பாதிப்பு என்பதைப் போல காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பீதியை கிளப்பி வருகின்றன. குடியுரிமைச் சட்டத்தால் இந்திய முஸ்லிம்களில் ஒருவருக்கு கூட பாதிப்பு இல்லை. இந்திய குடிமக்களில் ஒருவர் கூட நாட்டைவிட்டு வெளியேற்றப்பட மாட்டார் என்று மத்திய அரசு பலமுறை தெளிவுப்படுத்தி விட்டது.
ஆனாலும், அரசியல் ஆதாயத்துக்காக, சிறுபான்மையினர் வாக்குகளை ஓட்டுமொத்தமாக அறுவடை செய்வதற்காக போராட்டங்களை தூண்டி விடுகிறார்கள். சென்னை வண்ணாரப்பேட்டையில் நடைபெற்ற போராட்டத்துக்கு பின்னால் திமுக இருக்கிறது. குடியுரிமைச் சட்டத்துக்கு எதிரான போராட்டங்களை திமுகதான் தூண்டி விடுகிறது.
பாகிஸ்தானை விட இந்தியாவில் முஸ்லிம்கள் மகிழ்ச்சியோடு, பாதுகாப்பாக வாழ்கிறார்கள். பாகிஸ்தானில் ஒரு இந்து எந்த பதவிக்கும் வர முடியாது. ஆனால், இங்கு முஸ்லிம்கள் குடியரசுத் தலைவராக இருந்துள்ளனர்.
முஸ்லிம்களில் பெரும்பான்மையினர் நாட்டுப் பற்று மிக்கவர்கள். சிறுபான்மையினரில் சிறுபான்மையினர் தான் இப்போது தெருவில் இறங்கி போராடி வருகின்றனர். குடியுரிமைச் சட்டத்தை திரும்பப் பெறுவதற்கு வாய்ப்பே இல்லை.
இவ்வாறு இல.கணேசன் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT