Published : 17 Feb 2020 06:46 AM
Last Updated : 17 Feb 2020 06:46 AM

பட்ஜெட்டில் சென்னை மேம்பாட்டுக்கு ரூ.500 கோடி; ரூ.50 கோடியில் 55 பூங்காக்களை அமைக்க மாநகராட்சி திட்டம்: இணைக்கப்பட்ட பகுதிகளுக்கு முக்கியத்துவம்

சென்னை

தமிழக பட்ஜெட்டில் சென்னை மாநகர மேம்பாட்டு திட்டங்களுக்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்த நிதியிலிருந்து சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.49 கோடியே 97 லட்சம் செலவில் 55 பூங்காக்கள் மற்றும் 2 விளையாட்டு திடல்கள் அமைக்கப்பட உள்ளன.

சென்னையில் ஏழை எளிய மற்றும் நடத்தர மக்களின் முக்கிய பொழுதுபோக்கு இடமாக சென்னை மாநகராட்சி பூங்காக்கள் உள்ளன. நாள் முழுவதும் தொலைக்காட்சி, ஸ்மார்ட் கைபேசிகளில் பொழுதை செலவிடும் குழந்தைகளின் கவனத்தை திருப்ப இந்த பூங்காக்கள் பேருதவியாக உள்ளன. மேலும் இப்பூங்காக்களில் குழந்தைகள் விளையாடும்போது உடல் இயக்கம் ஏற்பட்டு ஆரோக்கியத்தை பெறுகின்றனர். குழந்தைகளை கவரும் வகையில் தற்போது பல்வேறு விளையாட்டு உபகரணங்களை மாநகராட்சி நிறுவி வருகிறது.

இந்த பூங்காக்களில் தற்போது மகளிர், எளிய உடற்பயிற்சி செய்ய ஏதுவாக, அவர்களுக்கு உகந்த உபகரணங்களும் நிறுவப்பட்டு வருகின்றன. இது பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

சென்னை மாநகராட்சியில் தற்போது 632 பூங்காக்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. மத்திய அரசின் அடல் புனரமைப்பு மற்றும் நகர்புற திட்டம் (அம்ரூத்) மூலம் கடந்த 4 நிதியாண்டுகளில் ரூ.37 கோடியே 74 லட்சத்தில் 55 பூங்காக்கள் அமைக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ளன. அதே திட்டத்தின் கீழ் 2018-19ஆம் நிதியாண்டின் ஊக்க நிதி மூலம் மாதவரம், நுங்கம்பாக்கம், வேளச்சேரி ஆகிய பகுதிகளில் தலா ஒரு பூங்கா அமைக்கப்பட உள்ளது.

இதற்கிடையில் கடந்த வெள்ளிக்கிழமை தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில், சென்னை மாநகர மேம்பாட்டுக்கு ரூ.500 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியிலிருந்து ரூ.49 கோடியே 97 லட்சம் செலவில் மாநகராட்சி சார்பில், மாநகரப் பகுதிகளில் உள்ள திறந்தவெளி நிலங்களில் 55 புதிய பூங்காக்கள் மற்றும் விளையாட்டு திடல்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட மணலி, மாதவரம், அம்பத்தூர், வளசரவாக்கம், ஆலந்தூர், பெருங்குடி, சோழிங்கநல்லூர் ஆகிய மண்டலங்களில் அதிக அளவில் பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x