Published : 17 Feb 2020 06:40 AM
Last Updated : 17 Feb 2020 06:40 AM
போதிய நிதி கிடைக்காததால் தமிழகத்தில் புதிய ரயில் பாதை உட்பட பல்வேறு ரயில் திட்டப் பணிகளில் தொய்வு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
தெற்கு ரயில்வே மூலம் தமிழகத்தில் 11 புதிய பாதைகள், 10 அகலப் பாதை மற்றும் இரட்டைப் பாதை போன்ற பல வழித்தடங்கள் உருவாக்குவது உட்பட 18-க்கும் மேற்பட்ட ரயில் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதற்கிடையே, தற்போது மத்திய பட்ஜெட்டில் ரயில்வே துறைக்கு ஒதுக்கியுள்ள ரூ.70 ஆயிரம் கோடியில் தெற்கு ரயில்வேக்கு பல்வேறு திட்டங்களுக்காக ரூ.2,876 கோடி நேரடியாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுதவிர, சில முக்கிய திட்டங்களுக்கு கடன், கடன் பத்திரம் வெளியீடு உள்ளிட்டவை மூலம் ரூ.840 கோடி பெற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
திட்டங்கள் முடங்கும் அபாயம்
தமிழகத்தில் சென்னை - மாமல்லபுரம் - கடலூர் (179 கி.மீ), திண்டிவனம் - செஞ்சி - திருவண்ணாமலை (70 கி.மீ), அத்திப்பட்டு - புத்தூர் (88 கி.மீ), ஈரோடு - பழநி (91 கி.மீ), ஸ்ரீபெரும்புதூர் - இருங்காட்டுக்கோட்டை - கூடுவாஞ்சேரி (60 கி.மீ), மதுரை - அருப்புக்கோட்டை - தூத்துக்குடி, மொரப்பூர் - தருமபுரி உட்பட மொத்தம் 10 புதிய ரயில் திட்டங்கள் முக்கியமானதாக இருக்கின்றன.
மத்திய பட்ஜெட்டில் ரயில்வேதிட்டங்களுக்கு சிறிய அளவிலாவது நிதி ஒதுக்கப்படுவது வழக்கம். ஆனால், இந்த பட்ஜெட்டில் ஒவ்வொரு திட்டத்துக்கும் வெறும் ரூ.1,000 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால், இந்த ரயில் திட்டங்கள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து ரயில்வே துறையைச் சார்ந்தவர்கள் கூறியதாவது:
டிஆர்இயு துணைப் பொதுச் செயலாளர் மனோகரன்: தமிழகத்தில் ரயில்களின் தேவையை உடனடியாக பூர்த்தி செய்ய இரட்டை பாதை திட்டப் பணிகள் அவசியம். குறிப்பாக, தமிழகத்தில் பிரதானமான சென்னை - கன்னியாகுமரி இரட்டை ரயில் பாதை திட்டம் கடந்த 1998-ம் ஆண்டு தொடங்கியது. சிறுக, சிறுக பணி நடந்து, தற்போது மதுரை வரை இரட்டைப்பாதை முடிந்துள்ளது. அடுத்தகட்டமாக மதுரை - கன்னியாகுமரி வரை இரட்டைப்பாதை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த திட்டப் பணிக்கு நிலம் கையகப்படுத்த அவசியம் இல்லை. இருக்கும் தண்டவாளங்களின் அருகிலேயே போதிய அளவில் இட வசதி இருக்கிறது. எனவே, போதிய அளவில் நிதி ஒதுக்கினாலே, பணிகளை விரைந்து முடிக்க முடியும். கடன், கடன் பத்திரம் மூலம் நிதி திரட்டுவது உறுதியாக கிடைக்கும் என்று கூறமுடியாது. எனவே, ரயில்வே நேரடியாக நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை விரைவுபடுத்த வேண்டும்.
திருநின்றவூர் ரயில் பயணிகள் பொதுநலச் சங்க செயலாளர் எஸ்.முருகையன்: மற்ற மாநிலங்களைவிட தமிழகத்தில் பயணிகள் ரயில் போக்குவரத்து தேவை அதிகரித்துவிட்டது. கடந்த சிலஆண்டுகளாக ரயில் நிலையங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வருவது வரவேற்கத்தக்கது. ஆனால், கூடுதல் ரயில்களை இயக்க தண்டவாளங்கள் அமைத்தல் போன்ற கட்டமைப்பு பணிகளுக்கு கூடுதல் நிதி வேண்டும்.
தமிழக ரயில் திட்டங்கள் சுறுசுறுப்பாக முடிக்கப்படாமல் நீண்ட நாட்களுக்கு இழுக்கப்பட்டு வரும் நிலை கடந்த 10 முதல் 15 ஆண்டுகளாகவே உள்ளது. போதிய நிதி ஒதுக்கப்படாததால் பணிகளில் தொய்வு ஏற்படுகிறது. எனவே, பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு தெற்கு ரயில்வேக்கு நேரடியாக ஒதுக்கீடு செய்து பணிகளை துரிதப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறி யுள்ளனர்.
இதுபற்றி ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘இந்திய ரயில்வேயில் தெற்கு ரயில்வே போல 17 மண்டலங்கள் உள்ளன. அதனால், தெற்கு ரயில்வேக்கு மட்டும் ஒரே நேரத்தில் பெரிய அளவில் நிதி ஒதுக்க முடியாது. இருப்பினும், தமிழகத்தில் பிரதான ரயில் திட்டங்களை இணைக்கும் வகையில் மதுரை - மணியாச்சி - தூத்துக்குடி, மணியாச்சி - நாகர்கோவில் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு கடன்பத்திரம் வெளியீடு உள்ளிட்டவை மூலம் ரூ.1,181 கோடி திரட்டிக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிதியை திரட்டி, ரயில் திட்டப் பணிகள் விறுவிறுப்பாக நிறைவேற்றப்படும்’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT