Published : 16 Feb 2020 08:37 AM
Last Updated : 16 Feb 2020 08:37 AM
நீண்ட தொலைவில் இருந்து குழாய் மூலம் குடிநீர் விநியோகிக்கும்போதுமாசுபடும் வாய்ப்பு இருப்பதால், சென்னைக்கு அருகில் உள்ள ரெட்டேரி,அயனம்பாக்கம், பெரும்பாக்கம், பெருங்குடி ஆகிய ஏரிகளின் தண்ணீரைச் சுத்திகரித்து சென்னை மக்கள் பயன்பாட்டுக்கு விநியோகிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
குழாய் வழியாக வழங்கப்படும் குடிநீரின் தரம் வரையறுக்கப்பட்ட அளவில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று மாநில அரசை மத்திய அரசின் நுகர்வோர் நல அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக சென்னை குடிநீர் வாரிய அதிகாரியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:
சென்னையில் குடிநீரால் தொற்றுநோய் ஏற்படவில்லை. சில பகுதிகளில் குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதாக புகார்கள் வரும். அதை உடனடியாக சரிசெய்து விடுவோம்.
குடிநீரில் 54 வகையான குறியீடுகள் இருக்க வேண்டும் என்று அதன் தரத்தை உலக சுகாதார நிறுவனம் வரையறுத்துள்ளது. குறிப்பாக தண்ணீரின் நிறம், மணம் உட்பட அடிப்படையான 7 குறியீடுகள் அவ்வப்போது ஆய்வு செய்யப்படும். தேவைப்படின், 54 குறியீடுகளும் ஆய்வு செய்து தரம் உறுதி செய்யப்படும். உதாரணமாக, கல்குவாரியில் இருந்து தண்ணீர் எடுப்பதற்கு முன்பு 54 குறியீடுகள் வரையறுக்கப்பட்ட அளவில் இருக்கிறதா என்று சென்னை ஐஐடி மூலம் ஆய்வு செய்யப்பட்டது.
சென்னையில் சுமார் 4 ஆயிரத்து 500 கிலோ மீட்டர் தொலைவுக்கு குழாய்கள் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது. குடிநீர் சுத்திகரிக்கும் நிலையத்தில் இருந்து பொதுமக்களின் வீடுகளுக்கு சென்றடையும் தொலைவு (30 கிலோ மீட்டர் முதல் 50 கிலோ மீட்டர் வரை) அதிகமாக இருக்கிறது. இந்த இடைப்பட்ட தொலைவில் குடிநீர் மாசுபடும் வாய்ப்புள்ளது.
மேலும், குடிநீர் வழங்கும் நேரங்கள் தவிர மற்ற நேரங்களில் பொதுமக்கள் கை பம்பு மூலம் குடிநீர் எடுப்பதால், குடிநீர் குழாயின் இணைப்புகள் வலுவிழப்பதுடன், சில நேரங்களில் விரிசலும் ஏற்படுகிறது. அவ்வாறு விரிசல் ஏற்பட்டால், குடிநீரில் கழிவுநீர் கலந்து தண்ணீர் மாசுபடும். எனவே, குடிநீர் விநியோகிக்கும் நேரம் தவிர, மற்ற நேரங்களில் கை பம்பில் தண்ணீர் அடிக்க வேண்டாம் என்று பொதுமக்களுக்கு அவ்வப்போது அறிவுறுத்துகிறோம்.
இதனிடையே, சென்னைக்கு அருகில் உள்ள குளங்களில் சேமிக்கப்பட்டுள்ள தண்ணீரை சுத்திகரித்து மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த 2017-ம் ஆண்டுமுதல் போரூர் ஏரி தண்ணீர், சென்னைமக்கள் பயன்பாட்டுக்காக விநியோகிக்கப்பட்டு வருகிறது.
இதுபோல ரெட்டேரி, அயனம்பாக்கம், பெரும்பாக்கம், பெருங்குடி ஆகிய இடங்களில் உள்ள ஏரிகளின்தண்ணீரைச் சுத்திகரித்து மக்கள் பயன்பாட்டுக்கு அனுப்புவதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த ஏரிகளின் தண்ணீர் முழுமையாக சுத்திகரித்து விநியோகிக்கப்படும்.
சென்னைக்கு அருகிலேயே இருப்பதால், இந்த ஏரிகளில் எடுக்கப்படும் குடிநீரின் தரத்தில்குறைபாடு ஏற்பட்டால் அதற்கான காரணத்தை எளிதாகவும், விரைவாகவும் கண்டறிந்து சரிசெய்ய முடியும். தற்போது சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் தண் ணீரைச் சுத்திகரிக்கும்போது அதில் வரையறுக்கப்பட்ட அளவில் தாதுக்கள் இருப்பதை உறுதி செய்கிறோம். ஆனால், தனியார் குடிநீர் தயாரிப்பு நிறுவனங்களில் பெரும்பாலானவை அதைச் செய்வதில்லை. எனவே சென்னைக் குடிநீர் வாரியம் தரமான தண்ணீரையே விநியோகித்து வருகிறது.
இவ்வாறு குடிநீர் வாரிய அதிகாரி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT