Published : 15 Feb 2020 02:36 PM
Last Updated : 15 Feb 2020 02:36 PM

ரஜினிக்குச் சமமான நடிகர் அஜித் மட்டுமே; அவர் 'மலை', இவர் 'தல': அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி

ரஜினி - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி - அஜித்: கோப்புப்படம்

சென்னை

அஜித், ரஜினி இருவரும் ஜல்லிக்கட்டுக் காளைகள் எனவும், அஜித் 'தல', ரஜினி 'மலை' எனவும், தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இன்று (பிப்.15) விருதுநகரில் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

ஒவ்வொரு தமிழன் தலையிலும் ரூ.57,000 கடன் சுமத்தப்பட்டுள்ளதாக பட்ஜெட் குறித்து விமர்சிக்கப்படுகிறதே?

நிதிப் பற்றாக்குறை பிரச்சினை காலம் காலமாக இருக்கிறது. திமுக ஆட்சியிலும் கடன் இருந்தது. ஒவ்வொரு ஆட்சியிலும் கடன் சுமை இருந்திருக்கிறது. சமூக நலத்திட்டங்கள் கொண்டு வரும் நேரத்தில், வரிச்சுமை இல்லாமல் பட்ஜெட்டை உருவாக்கும் போது கடன் சுமை இருக்கும். மக்கள், சமூக ஆர்வலர்கள், பொருளாதார மேதைகளுக்கு இதுகுறித்து தெரியும். இந்த பட்ஜெட் யாருக்கும் வரியில்லாத பட்ஜெட். யாரையும் பாதிக்காத பட்ஜெட். இந்த பட்ஜெட் பட்டான, முத்தான பட்ஜெட்.

திமுக, அதிமுக இரு கட்சிகளுக்கும் பட்ஜெட் போடத் தெரியவில்லை என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் விமர்சித்துள்ளாரே?

அதிமுக, திமுக இரண்டுக்கும் பட்ஜெட் போடத் தெரியவில்லை என்று சொல்லி விட்டாரா? பஞ்சாயத்தில் கமல்ஹாசன் பட்ஜெட் போடட்டும். அதைப் பார்த்து விட்டுத்தான் அவரின் கருத்தை ஏற்கலாமா என்பதை முடிவு செய்ய முடியும். தமிழகத்தில் 6 கோடி பேருக்கு மேல் வாக்காளர்களே இருக்கின்றனர். 8 கோடிக்கும் மேல் மக்கள்தொகை இருக்கிறது. மிகப்பெரிய நாட்டுக்கு இணையான ஒரு மாநிலம் தமிழ்நாடு. அதற்கு முதல்வராக எடப்பாடி பழனிசாமி இருக்கிறார்.

இது இந்த ஆட்சியின் கடைசி பட்ஜெட், 10-வது பட்ஜெட். அடுத்த ஆட்சியின் அறிமுக பட்ஜெட்டாக இதனைக் கருத வேண்டும். திமுகவுக்கு மக்கள் வாய்ப்பளிக்கத் தயாராக இல்லை. அதிமுக ஆட்சியில் உள்ள பிரச்சினைகள் யாரால் உருவாக்கப்பட்டன என்பது மக்களுக்குத் தெரியும். காவிரி டெல்டாவைப் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்ததால், டெல்டா மாவட்ட மக்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றனர். அதற்கு சட்ட ரீதியான நடவடிக்கைகளை முதல்வர் ஆய்வு செய்து கொண்டிருக்கிறார். தூத்துக்குடியில் பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலை அமைக்கப்பட்டு வருகிறது. விருதுநகர் மாவட்டத்திலும் பல திட்டங்களை முதல்வர் தொடங்கி வைக்க இருக்கிறார்.

இதனைப் பொறுக்க முடியாமல், அவர்கள் ஆட்சியில் பாலும் தேனும் ஓடியது போன்று ஸ்டாலின் பேசுகிறார். அவர்கள் ஆட்சியில் மின்சாரமே கிடையாது. 16 மணிநேரம் மின்சாரம் இல்லாத ஆட்சிதான் திமுக ஆட்சி. கிராமங்களுக்குள் திமுக அமைச்சர்கள் நுழைய முடியாமல் மக்கள் விரட்டினர். அதிமுக ஆட்சியில் மக்களுக்கு எந்தவித பிரச்சினையும் இல்லை. மக்கள் சுபிட்சமாக இருக்கின்றனர். பிரச்சினையில்லாத நல்லாட்சியை முதல்வர் நடத்துகிறார். நல்லவர்கள் இந்த பட்ஜெட்டை வாழ்த்துகிறார்கள். எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வசைபாடாமல் பட்ஜெட்டை வாழ்த்தவா செய்வார்?

அரசியல் காரணங்களுக்காகவே விஜய் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டதாகவும், ரஜினிக்கு இணையாக விஜய் வளர்வதை தடுக்க முயற்சிகள் நடப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளதே?

வருமான வரித்துறை அதிமுகவினர் வீடுகளில் கூடத்தான் சோதனை நடத்தியது. அதற்கு குற்றம் சாட்ட முடியுமா? கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் சோதனை செய்கின்றனர். அதில் ஏதாவது கிடைத்தால் நடவடிக்கை எடுக்கின்றனர். வருமான வரித்துறை தன்னாட்சி பெற்ற அமைப்பு. இதில் அரசியல் தலையீடு கிடையாது. ரஜினிக்குச் சமமாக இப்போதுள்ள எந்த நடிகரும் கிடையாது. ரஜினிக்குச் சமமான நடிகர் என்றால் அஜித் ஒருவர்தான் இருக்கிறார். இருவரும் ஜல்லிக்கட்டு காளைகள். அஜித் 'தல', ரஜினி 'மலை'.

இவ்வாறு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

தவறவிடாதீர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x