Published : 15 Feb 2020 01:24 PM
Last Updated : 15 Feb 2020 01:24 PM

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றுவதே தீர்வு: மார்க்சிஸ்ட்

சிஏஏ எனும் குடியுரிமைச் சட்டத்தை திரும்பப் பெறவும், தமிழகத்தில் அமல்படுத்த மாட்டோம் என சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றுவது ஒன்றே வழி. போராட்டத்துக்கு அனுமதி கொடுத்துவிட்டு அமைதியாகப் போராடும் பொதுமக்கள் மீது தடியடி நடத்துவது வன்மையாக கண்டிக்கத்தக்கது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இன்று விடுத்துள்ள அறிக்கை:

“நேற்று மாலையில் சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை கண்டித்தும், அதைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

அமைதியாக ஆர்ப்பாட்டத்தை நடத்தியவர்கள் மீது காவல்துறை தடியடி தாக்குதல் நடத்தியுள்ளது. காவல்துறையின் இந்த அராஜகத் தாக்குதலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

மத்திய பாஜக அரசு மதத்தின் அடிப்படையில் மக்களைப் பிளவுபடுத்தும் வகையில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை நிறைவேற்றியது. தேசிய மக்கள்தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேட்டை அமல்படுத்த முயல்கிறது.

இதனை எதிர்த்து நாடு முழுவதும் பொதுமக்கள், மாணவர்கள், பெண்கள், அரசியல் கட்சிகள் மற்றும் மதச்சார்பற்ற ஜனநாயக அமைப்புகள் உள்பட அனைத்துப் பகுதி மக்களும் ஒன்றுபட்டு திரளாக வீதிக்கு வந்து அமைதியான முறையில் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகத்திலும் இந்தச் சட்டத்தை எதிர்த்து அனைத்துப் பகுதி மக்களும் தங்களது எதிர்ப்பினை தெரிவிக்கும் வகையில் ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம், பேரணி, மனிதச் சங்கிலி போன்ற வடிவில் போராடி வருகின்றனர்.

நேற்று நடைபெற்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் குடியுரிமைச் சட்டத்தைத் திரும்பப் பெறவும், தேசிய மக்கள்தொகை பதிவேடு மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை அமல்படுத்த மாட்டோம் எனவும் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என எதிர்பார்த்திருந்த நிலையில் தமிழக அரசு இதுபற்றி எந்த அறிவிப்பையும் சட்டப்பேரவையில் வெளியிடவில்லை.

இதன் காரணமாக சென்னை, வண்ணாரப்பேட்டையில் மக்கள் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறையினர் தடியடித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனைக் கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக பொதுக்கூட்டங்கள், பேரணி நடப்பதற்கு அனுமதியளிக்கும் தமிழக காவல்துறை, இச்சட்டத்தை எதிர்த்துப் போராடுபவர்கள் மீது தடியடி தாக்குதல், கைது, சிறை, வழக்குப் பதிவது என தாக்குதல் தொடுப்பது கண்டனத்திற்குரியது.

மக்கள் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையிலும், மதவெறி சக்திகளின் தூண்டுதலுக்கு இரையாகாமலும், மக்கள் ஒற்றுமை, மத நல்லிணக்கம், மதச்சார்பின்மை கோட்பாட்டை கடைப்பிடிக்கும் வகையிலும், 13 மாநிலங்கள் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் எனத் தெரிவித்துள்ளன.

கேரளம், புதுச்சேரி, பஞ்சாப், மேற்கு வங்க மாநில அரசுகள் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என சட்டப்பேரவைகளில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளன. இதேபோல் தமிழக அரசும் நடைபெறும் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது”.

இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x