Published : 15 Feb 2020 08:23 AM
Last Updated : 15 Feb 2020 08:23 AM
தூத்துக்குடியில் ரூ.634 கோடி மதிப்பில் கடல்நீரை சுத்திகரிக்கும் ஆலை அமைக்கப்படுகிறது.
இதுதொடர்பாக தமிழக பட் ஜெட்டில் கூறியிருப்பதாவது:
சென்னையில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான முன்சாத்தியக்கூறு ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டு, விமான நிலையத்துக்கான ஆயத்த வேலைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. புதுமை முயற்சிகளை தொடக்க நிலையிலேயே ஊக்குவிக்க, தமிழ்நாடு புதுமை முயற்சிகள் திட்டத்தின் கீழான நிதியுதவியுடன் ரூ.53.44 கோடி செலவில் பெரும்புதூர் மற்றும் ஓசூரில் தொழில் புதுமைமுயற்சி மையங்களை நிறுவும்பணிகளை தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு நிறுவனம் மேற்கொள்ளும். ரூ.34.81 கோடி மதிப்பீட்டுச் செலவில் வர்த்தக எளிதாக்குதல் மையம் ஒன்று சிறுசேரியில் உருவாக்கப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி தொழிற்பூங்கா மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அமைந்துள்ள தொழில் நிறுவனங்களின் தேவைகளை நிறைவு செய்யும் வகையில், நாளொன்றுக்கு 60 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல்நீரை சுத்திகரிக்கும் ஆலையை, ரூ. 634 கோடி செலவில், தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு நிறுவனம் நிறுவும். தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகமும், ஹெச்.எல்.எல் லைஃப் கேர் நிறுவனமும் இணைந்து ரூ.205 கோடி முதலீட்டில் செங்கல்பட்டுக்கு அருகில் ஒரு மருத்துவப் பூங்காவை நிறுவ உத்தேசித்துள்ளன. மொத்தம் 10 லட்சம் மெட்ரிக் டன் உற்பத்தித் திறன் கொண்ட புதிய சிமென்ட் ஆலையை அரியலூரில் தமிழ்நாடு சிமென்ட் நிறுவனம் தொடங்கி, தற்போதைய உற்பத்தித் திறனை இரட்டிப்பாக்கியுள்ளது. 2020-21-ம்ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தில் தொழில் துறைக்கான ஊக்கத் தொகை வழங்குவதற்காக ரூ.2,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தொழில்முனைவோர் மானியம்
படித்த வேலையில்லா இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டத்தின்கீழ் வழங்கப்படும் பயன்களை விரிவுபடுத்தும் வகையில், தற்போதுள்ள திட்ட முதலீட்டுக்கான வரம்பு ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.15 லட்சமாக உயர்த்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் தகுதி வாய்ந்த மானியத்தின் வரம்பும் ரூ.1.25 லட்சத்தில் இருந்து ரூ.2.5 லட்சமாக உயர்த்தப்படும்.
இதனால், ஆயிரக்கணக்கான வளர்ந்து வரும் தொழில் முனைவோர் ஊக்கம் பெறுவார்கள். 2020-21-ம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், இத்திட்டத்துக்கான நிதிஒதுக்கீடு ரூ.33 கோடி உயர்த்தப்பட்டுள்ளது.
புதிய தொழில்முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம் பாட்டுத் திட்டத்தின்கீழ் தற்போது வழங்கப்படும் அதிகபட்ச மூலதன மானியத்தை ரூ.30 லட்சத்தில் இருந்து ரூ.50 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும். இத்திட்டத்துக்கான ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் நவீனமயமாக்கல் திட்டம் மற்றும் கடன் உத்தரவாத நிதிக்குழுமத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் வட்டி மானியம் 3 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக உயர்த்தப்படும். சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன் பாளையம் வட்டம் உமையாள்புரம், புத்திரகவுண்டன் பாளையம் கிராமங்களில் ரூ.4.50 கோடி செலவில் புதிய தொழிற்பேட்டை நிறுவப்படும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT