Published : 15 Feb 2020 07:34 AM
Last Updated : 15 Feb 2020 07:34 AM
நாட்டிலேயே உத்தரப் பிரதேசத்துக்கு அடுத்து தமிழகத்தில் 50 ஆயிரம் மாற்றுத் திறனாளிகளுக்குத் தேவையான விலைமதிப்புள்ள உபகரணங்களை இலவசமாக வழங்கும் மத்திய அரசின் சிறப்பு முகாம், மதுரை மாவட்டத்தில் பிப். 18-ம் தேதி முதல் 7 நாட்கள் நடைபெற உள்ளதாக மதுரை எம்பி. சு. வெங்கடேசன் தெரிவித்தார்.
இதுகுறித்து சு.வெங்கடேசன் ‘இந்துதமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறியதாவது: மாற்றுத் திறனாளிகளுக்காக மத்திய அரசு சிறப்புத் திட்டத்தின்கீழ், அனைத்து உபகரணங்களையும் வழங்கும் சிறப்பு முகாமை நடத்துகிறது. இந்த முகாமின் பலன் மதுரை மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காக 4 மாதங்களாக தீவிர முயற்சி எடுத்தேன். சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் தாவார்சந்த் கெலாட்டை சந்தித்தும், கடிதம் மூலமும் பலமுறை வலியுறுத்தினேன். எனது கோரிக்கையை ஏற்று, மதுரையில் சிறப்பு முகாம் நடத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
பிப். 18-ம் தேதி கிழக்கு ஒன்றியத்தில் தொடங்கும் முகாம் பிப். 25-ல் மதுரை மேற்கு மண்டலத்தில் நிறைவடைகிறது. மாவட்டம் முழுவதும் 13 இடங்களில் இம்முகாம்கள் நடைபெற உள்ளன.
இந்த முகாமில் மாவட்டத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகள் அனைவரும் பங்கேற்கலாம். இவர்களுக்குத் தேவையான நவீன உபகரணங்கள் இலவசமாக வழங்கப்படும். இம்முகாம்களுக்காக மத்திய அரசு பல கோடி ரூபாய் செலவிடுகிறது. மாநில அரசின் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை திட்டப் பலன்களையும் ஒரே இடத்தில் பெற முடியும்.
இம்முகாம்களில் பங்கேற்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு தேவையான உபகரணங்கள் அளவு எடுக்கப்படும். பின்னர், கான்பூரில் உள்ள நிறுவனம் உபகரணங்களை தயாரிக்கும். அதன்பிறகு ஒரு மாத இடைவெளியில் அவர்களுக்கு உபகரணங்கள் வழங்கப்படும்.
உத்தரப்பிரதேச மாநிலம், அலகாபாத்தில் பிப்.20-ம் தேதி நடக்கும் விழாவில் 24 ஆயிரம் மாற்றுத் திறனாளிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி உபகரணங்களை வழங்குகிறார்.
மதுரை மாவட்டத்தில் தற்போது 50 ஆயிரம் மாற்றுத் திறனாளிகள் வரை இருப்பர். இவர்களில் உபகரணங்கள் தேவைப்படுவோர் அனைவரையும் முகாமில் பங்கேற்கச் செய்ய வேண்டும். மத்திய அரசின் 7 துறைகளின் அதிகாரிகள், மாநில அரசு அதிகாரிகள் பங்கேற்பர். மாவட்ட நிர்வாகம் முழு ஒத்துழைப்பு அளிக்கிறது. எம்பி நிதியிலிருந்தும் உதவிதேவைப்பட்டால் வழங்கத் தயார். அந்தந்த பகுதி இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள் இணைந்து மாற்றுத் திறனாளிகள் அனைவரையும் முகாம்களுக்கு அழைத்துவரும் பணியை சவாலாக ஏற்று செய்யவேண்டும். இதுவே மாற்றுத் திறனாளிகளுக்கு நாம் ஆற்றும் பேருதவி என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT