Published : 15 Feb 2020 07:17 AM
Last Updated : 15 Feb 2020 07:17 AM

பறவைகள் வலசையில் ‘வெளிநாட்டு விருந்தாளிகள்’ குறைவு: நீர்நிலைகள் அழிக்கப்படுவதால் சுற்றுச்சூழலுக்கு அச்சுறுத்தல்

ராமேசுவரம் கோதண்டராமர் கோயில் கடற்பகுதியில் குவிந்துள்ள பூநாரை பறவைகள்.

மதுரை

நடப்பாண்டு பறவைகள் வலசையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை குறைந்தே காணப்படுகிறது. நீர்நிலைகள் அழிக்கப்படுவதால் பறவைகள் வாழ்விடங்களை இழப்பதோடு சுற்றுச்சூழலுக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் பறவைகள் வலசைக் காலம் செப்டம்டர் தொடங்கி மார்ச் மாதம் வரை நீடிக்கும். இக்காலத்தில் குளிர்காலம் தொடங்கியதன் அறிகுறியாக வெளிநாட்டு, உள்நாட்டுப் பறவைகள், வெப்ப மண்டல பகுதியான தமிழகத்துக்கு அதிகளவு வலசை வந்து செல்லும்.

கடந்த காலங்களை ஒப்பிடும்போது இந்த ஆண்டு உள்நாட்டுப் பறவைகள் தென் தமிழகத்தில் மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு அதிகம் வந்துள்ளன. ஆனால், பரவலாக வெளிநாட்டுப் பறவைகள் வருகை குறைவாகவே உள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் பறவைகள் வலசையை ஆய்வு செய்த மதுரையைச் சேர்ந்த பறவையியல் ஆர்வலர் ரவீந்திர நடராஜன் கூறியதாவது:

கடந்த 3 மாதங்களாக ராமநாதபுரம் மாவட்டம் சித்திரக்குடி, காஞ்சிரங்குளம், சக்கரக்கோட்டை, கீழ, மேலசெல்வனூர், திருத்தங்கல் ஆகிய 5 பறவைகள் சரணாலயங்களைக் கண்காணித்தோம். இந்த ஆண்டு இங்கு உள்நாட்டுப் பறவைகள் வருகை வழக்கத்தை விட அதிகமாக உள்ளன. இவை இங்கு கூடுகள் கட்டி குஞ்சுகள் பொறிக்கின்றன.

இதேபோல், வேட்டங்குடி, கூந்தன்குளம், வேடந்தாங்கல், உதய மார்த்தாண்டபுரம் உள்ளிட்ட தமிழகத்தின் பிற பறவைகள் சரணாலயங்களிலும் உள் நாட்டுப் பறவைகள் வருகை அதிகமாக இருந்தன. ஆனால், வெளிநாட்டுப் பறவைகள் வருகை குறைந்து காணப்பட்டது.

ராமேசுவரம் கோதண்டராமர் கோயில் கடற்பகுதிக்கு பூ நாரைகள் என்னும் நாரையினங்கள் மட்டும் சுமார் 7 ஆயிரம் வரை குவிந்துள்ளன. சங்கு வலை நாரை என்னும் மஞ்சள் மூக்கு நாரை, கூழைக்கடா, நத்திகொத்தி நாரை ஆகிய பெரிய நாரைகளும், அன்றில் பறவைகளில் கருப்பு அன்றில், கருந்தலை அன்றில், ஒளிரும் அன்றில் ஆகியனவும், கொக்கு இனங்களில் பெரிய கொக்கு, சின்ன கொக்கு, உன்னி கொக்கு போன்றவை அதிகமாக தமிழக சரணாலயங்களில் கூடு கட்டி குஞ்சுகள் பொறிக்கின்றன.

மிக அழகான பறவைப் பட்டியலில் கரண்டி வாய் பறவையினம் இங்கு அதிகமாக கூடு கட்டிக் கொண்டிருக்கிறது. நீர் காகங்கள் வகையில் சின்ன நீர் காகம், இந்திய நீர் காகம், நீர் கோழி இனங்கள் போன்றவை அதிகம் தென்படுகின்றன.

ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் இந்த ஆண்டு 160 வகை உள்நாட்டு, வெளிநாட்டுப் பறவையினங்கள் வந்துள்ளன. பறவைகளை வைத்துதான் இயற்கையின் சூழல் அமையும். இந்த ஆண்டு பெய்த மழையில் வறட்சிக்கு இலக்கான ராமநாதபுரம் மாவட்டம் நல்ல செழுமையில் இருப்பதற்கும், இயற்கையோடு இயைந்த நல்ல பல்லுயிர் சூழல் பெற்றுள்ளதற்கும் இங்கு வலசை வந்த எண்ணிடலடங்கா பறவைகளே உதாரணம்.

கிழக்கு ஐரோப்பிய நாடுகள், மத்திய ஆசியாவில் இருந்து வரக்கூடிய காட்டு வாத்துகள் மிக மிகக் குறைவாக வந்துள்ளன. இந்த ஒரு பறவையினம் தமிழகத்தில் சில இடங்களைத் தவிர மற்ற இடங்களில் வரவே இல்லை. கஜா புயல் பாதிப்புகூட ஒரு காரணமாக இருக்கலாம்.

ராமேசுவரம் அரிச்சல் முனைப் பகுதிக்கு மக்கள் அதிகம் அனுமதிக்காத பாதுகாப்பான இடமாக இருந்தபோது வலசையில் அதிகமான வெளிநாட்டுப் பறவைகள் வரும். ஆனால், இன்று இந்த இடத்தை சுற்றுலாப் பயணிகளைப் பார்க்க அனுமதிப்படுகிறது.

கடந்த காலங்களில் கடல் ஆமைகள் அதிகளவு முட்டையிடக்கூடிய கடற்கரையாக இருந்தது. தற்போது கடல் ஆமை முட்டைகள் 10 சதவீதம்கூட இல்லை. நாய் உள்ளிட்ட மற்ற விலங்கினங்களும் இங்கு வரத்தொடங்கிவிட்டதால் வெளிநாட்டுப் பறவைகளும் இந்த கடற்கரைப்பகுதிக்கு பெரியளவில் வரவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x