Published : 14 Feb 2020 12:33 PM
Last Updated : 14 Feb 2020 12:33 PM
தமிழக பட்ஜெட் வரலாற்றிலேயே தொல்லியல் துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்த தமிழக முதல்வருக்கு மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. சு.வெங்கடேசன் நன்றி தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் 2020-21-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை சட்டப்பேரவையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்தார்.
பட்ஜெட்டில், தொல்லியல் துறைக்காக 31.93 கோடி ரூபாய் ஒதுக்கப்படுவதாகவும், கீழடி அகழ்வாராய்ச்சியில் கிடைக்கப் பெற்ற பொருட்களை காட்சிப்படுத்துவதற்காக உலகத்தரம் வாய்ந்த ஒரு புதிய அகழ்வைப்பகம் அமைத்திட 12.21 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்வதாகவும் அறிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக மதுரை மார்க்சிஸ்ட் எம்.பி. சு.வெங்கடேசன் இந்து தமிழ் திசைக்கு அளித்த பேட்டியில், "தமிழக பட்ஜெட் வரலாற்றிலேயே தொல்லியல் துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்திருப்பது இதுவே முதல்முறை. கிட்டத்தட்ட 100 மடங்கு அதிகம் என்றே கூறலாம்.
கீழடியில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்று 4 ஆண்டுகளாக நான் கோரிக்கை விடுத்துவந்தேன்.
இதனையேற்று, கடந்த 6 மாதங்களுக்கு முன்னரே முதல்வர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். தற்போது பட்ஜெட்டில் அதற்கும் வடிவம் கொடுக்கப்பட்டு ரூ.12.21 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே மானுடவியல், தொல்லியலின் கலைக் களஞ்சியமாக விளங்கும் மாநிலம் தமிழகம். தமிழகத்தில் தொல்லியல் ஆய்வுகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்வது மிகமிக அவசியம்.
அதனை உணர்ந்து தொல்லியல் துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்திருப்பதற்காக தமிழக முதல்வருக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT