Last Updated : 14 Feb, 2020 11:15 AM

2  

Published : 14 Feb 2020 11:15 AM
Last Updated : 14 Feb 2020 11:15 AM

ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா கடைகள் மற்றும் உரிமையாளர்களின் வீடுகளில் விடியவிடிய நடந்த வருமானவரித் துறை சோதனை

ஸ்ரீவில்லிபுத்தூர்

ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரபல பால்கோவா கடைகள் மற்றும் அதன் உரிமையாளர்கள் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

நேற்றிரவு தொடங்கி இன்று அதிகாலை வரை ஒரே நேரத்தில் பல இடங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சுமார் 20-க்கும் மேற்பட்டோர் சோதனையில் ஈடுபட்டனர். இதில் பல முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஸ்ரீவில்லிபுத்தூர் என்றாலே ஆண்டாள் கோயிலுக்குப் பின் நினைவுக்கு வருவது பால்கோவா தான். பிரபலமான இந்த இனிப்பு வகையை (பால்கோவா) தயாரிக்கும் பணியில் ஏராளமானோர் ஈடுபட்டு வருகின்றனர்.

ஒரு காலத்தில் இரண்டு மூன்று கடைகள் மட்டுமே இருந்த நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூரில் தற்போது அதிக அளவில் தெருவுக்கு ஒரு பால்கோவா கடை வியாபார நோக்கத்தில் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூரில் கடந்த 50 வருடங்களுக்கு மேலாக பால்கோவா தயாரிப்பில் ஈடுபட்டு வரும் பிரபல கடைகளில் வரி மோசடி நடப்பதாக வந்த புகாரின் அடிப்படையில் பாரம்பரியமிக்க வெங்கடேஷ்வரா, புளியமரத்தடி கடைகள் மற்றும் பால்கோவா கடையின் உரிமையாளர்கள் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

இதில் கணக்கில் காட்டப்படாத பல லட்சம் மதிப்புள்ள ஆவணங்கள் மற்றும் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆனால், இந்த சோதனை தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரபூர்வ தகவல்கள் எதையும் தெரியப்படுத்தவில்லை.

வீடுகள் மற்றும் கடைகளில் நடைபெற்ற சோதனையில் ஏராளமான ஆவணங்களை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த சோதனையானது தொழில் போட்டி காரணமாக நடைபெற்றதா அல்லது உறவினர்களிடையே இடையேயான பங்குகளை பிரிப்பதில் ஏற்பட்ட மோதலினால் ஏற்பட்டதா என்று தெரியாமல் சம்பந்தப்பட்ட நபர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர் .

பால்கோவாவிற்கு பெயர்பெற்ற கடைகள் மற்றும் உரிமையாளர்கள் வீட்டில் நடைபெற்ற சோதனை பொதுமக்களிடையே அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

நேற்று இரவு தொடங்கி விடிய விடிய சோதனை. இன்று காலை 5.30 மணி வரை நடைபெற்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x