Published : 13 Feb 2020 05:43 PM
Last Updated : 13 Feb 2020 05:43 PM

கொடைக்கானலில் ஏப்ரல் 1 முதல் குடிநீர், குளிர்பான பிளாஸ்டிக் கேன்களுக்குத் தடை

கொடைக்கானல்

கொடைக்கானலில் வருகிற ஏப்ரல் 1-ம் தேதி முதல், குடிநீர் மற்றும் குளிர்பானங்கள் விற்பனையாகும் பிளாஸ்டிக் கேன்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

தடையை மீறி விற்பனை செய்பவர்கள், கொண்டு வருபவர்களுக்குக் கடுமையான அபராதம் விதிக்கவும் நகராட்சியில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகராட்சிப் பகுதியில் பிளாஸ்டிக் தடை இருந்தும் முழுமையாக அமல்படுத்தாத நிலையில் மலைப்பகுதியில் இயற்கையையும், வனவிலங்குகளையும் பாதிக்கும் வகையில் பாலித்தீன் பயன்பாடு அதிகரித்துவந்தது.

இவற்றை முழுமையாக கட்டுப்படுத்தும் வகையிலும் குப்பையில்லா, பாலித்தீன் இல்லா கொடைக்கானலை உருவாக்கும் விதமாகவும் இன்று கொடைக்கானல் நகராட்சி அலுவலகத்தில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

முன்னதாக, மாசில்லா கொடைக்கானல் விழிப்புணர்வு ஊர்வலத்தை மூஞ்சிக்கல்லில் கோட்டாட்சியர் சுரேந்திரன் தொடங்கிவைத்தார். நகரின் முக்கிய சாலைகள் வழியாகச் சென்ற ஊர்வலம் நகராட்சி அலுவலகத்தை அடைந்தது.

ஊர்வலத்தில் மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு பதாதைகள் ஏந்தி பங்கேற்றனர். கொடைக்கானல் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு கோட்டாட்சியர் சுரேந்திரன் தலைமை வகித்தார். நகராட்சி ஆணையாளர் நாராயணன் முன்னிலை வகித்தார்.

பல்வேறு தன்னார்வ அமைப்புக்கள், வனத்துறை, சுற்றுலாத்துறை உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளைச் சார்ந்த அலுவலர்கள் கூட்டத்தில் பங்கேற்று ஆலோசனைகளை வழங்கினர்.

கூட்ட முடிவில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் ஒரு லிட்டர், 2 லிட்டர் குடிநீர் பாட்டில்கள் கொடைக்கானல் நகரில் விற்பனை செய்யவும், சுற்றுலாப் பயணிகள் கொண்டுவரவும் தடைசெய்வது என முடிவு செய்யப்பட்டது. இதேபோல் பிளாஸ்டிக் பாட்டில்களில் விற்பனை செய்யப்படும் குளிர்பானங்களுக்கும் தடைவிதிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ளதுபோல 14 விதமான பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதற்கும், விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டது.

இதுகுறித்து கோட்டாட்சியர் சுரேந்திரன், நகராட்சி ஆணையாளர் நாராயணன் கூறுகையில், ”கொடைக்கானல் மலைப்பகுதி முழுவதும் ஒரு லிட்டர், இரண்டு லிட்டர் தண்ணீர் கேன்கள் மற்றும் பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைக்கப்பட்ட குளிர்பானங்கள் விற்பனைசெய்யவும், சுற்றுலாப் பயணிகள் கொண்டு வருவதற்கும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னோட்டமாக மார்ச் 15-ம் தேதி முதல் இதனை பயன்படுத்துபவர்களுக்கும் விற்பனை செய்பவர்களுக்கும் அறிவுரை வழங்கப்படும்.

அதன்பின்னர் பயன்படுத்துபவர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும். இதேபோல் நகர்முழுவதும் தூய்மையாக வைப்பதற்காக ஏற்கனவே 14 விதமான பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை விதிக்கப்பட்ட நிலையில் தற்போது கூடுதலாக 7 பொருட்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இதனை மீறி விற்பைனை செய்பவர்கள், பயன்படுத்துபவர்கள் கடுமையான அபாரதம் செலுத்த வேண்டியிருக்கும். கொடைக்கானல் மலையடிவாரப் பகுதிகளில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு செய்யப்படும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x