Published : 13 Feb 2020 05:14 PM
Last Updated : 13 Feb 2020 05:14 PM
‘‘மதுரை மாநகராட்சியின் 100 வார்டுகளிலும் விரைவில் நீர் மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது, ’’ என்று மாநகராட்சி ஆணையாளர் எஸ்.விசாகன் தெரிவித்தார்.
இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் மதுரையின் குடிநீர் ஆதாரம் குறித்த கலந்தாய்வு கூட்டம், பாண்டியன் ஹோட்டலில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் மதுரையின் குடிநீர் பற்றாக்குறை, அதை எப்படி தீர்க்கலாம் என்பன குறித்து, கூட்டமைப்பு நிர்வாகிகள், நீர் மேலாண்மை வல்லுநர்களுடன் விவாதித்தனர்.
இந்திய தொழில் கூட்டமைப்பு துணைத் தலைவர் ஹரி தியாகராஜன், மதுரை மண்டல தலைவர் நாகராஜ், முன்னாள் தலைவர் ராஜ்மோகன், நிர்வாகி சத்தீஷ் தேவதாஸ் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மாநராட்சி ஆணையாளர் விசாகன் கலந்தாய்வு கூட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.
அவர் பேசியதாவது:
குடிநீர் மேம்பாட்டிற்காக மாநகராட்சி நிறைய திட்டங்களை மேற்கொண்டுள்ளது. தண்ணீர் பாதுகாப்பையும், சுகாதாரத்தையும் தனித்தனியாக பிரித்துப் பார்க்கக் கூடாது. மாநகராட்சி ஒரு புறம், வைகை ஆறு, கண்மாய்கள், நீர் வரத்து கால்வாய்கள், மழைநீர் கால்வாய்கள், கழிவு நீர் கால்வாய்களை சுத்தம் செய்து கொண்டிருக்கிறது.
மற்றொரு புறம் அவற்றில் பொதுமக்கள் குப்பைகளை கொட்டுகின்றனர். கழிவு நீரை திறந்துவிடுகின்றனர்.
மாநகராட்சிக்கு பொதுமக்களும் ஒத்துழைத்தால் மட்டுமே நீர் மேலாண்மையும், குப்பை பராமரிப்பையும் சிறப்பாக மேம்படுத்த இயலும்.
தற்போது, மதுரை மாநகராட்சியின் 100 வார்டுகளில் உள்ள ஏரி, கண்மாய்கள், குளங்கள், அதன் இணைப்புக் கால்வாய்களை கணக்கெடுத்து, அதன் நீர் ஆதாரம், எங்கிருந்து தண்ணீர் வருகிறது உள்ளிட்டவற்றைப் பற்றி ஆய்வு செய்துள்ளோம்.
இதை விரிவான அறிக்கையாக தயார் செய்து, மத்திய அரசுக்கு அனுப்பினால் ஜல்சக்தி இயக்கத்தில் நிதி ஒதுக்குவதாக அவர்கள் உறுதியளித்துள்ளனர்.
அதற்கான முயற்சிகளில் மாநகராட்சி ஈடுபட்டுள்ளது. முல்லைப்பெரியாறு குடிநீர் திட்டத்தின் 2-வது ‘பேக்கேஜ்’ திட்டத்திற்கு ஒர்க் ஆர்டர் வழங்கியுள்ளது. 1-வது, 3-வது ‘பேக்கேஜ்’ திட்டங்கள் ஒப்புதல் பெறும்நிலையில் உள்ளது.
ஏற்கெனவே வைகை அணை, காவிரி கூட்டுக்குடிநீ்ர திட்டங்கள் மூலம் 150 எம்எல்டி குடிநீர் கிடைக்கிறது. தற்போது முல்லைப் பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் 125 எம்எல்டி குடிநீர் கிடைக்கும். அதனால், மாநகராட்சிக்கு 275 எம்எல்டி குடிநீ்ர கிடைக்க வாய்ப்புள்ளது.
இந்த குடிநீரில் 20 சதவீதம் தண்ணீர் வீணாகும். மற்ற 80 சதவீதம் தண்ணீரை பொதுமக்கள் பயன்படுத்தியபிறகு மறுசுழற்சி முறையில் சுத்திகரித்து வேளாண்மைக்கு பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம்.
மதுரையில் வற்றாத ஜீவ நதிகள் என்று எதுவும் இல்லை. ஆனாலும், அக்கால மன்னர்களின் சிறப்பான நீர் மேலாண்மையால் மதுரையில் விவசாயம் செழிப்பாக நடந்துள்ளது. தற்போது நீர் மேலாண்மையில் கோட்டை விட்டதால் கோடை காலத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுகிறது.
அதனால், இருக்கின்ற நீர்நிலைகளைத் தூர்வாரி நீர் மேலாண்மை திட்டத்தை மேம்படுத்த வேண்டும்.
வைகை ஆற்றில் கலக்கும் கழிவுநீரைத் தடுக்க ஆழ்வார்புரத்தில் கட்டப்படும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் 3 மாதத்தில் நிறைவடையும். அதன்பிறகு வைகை ஆற்றில் கழிவு நீர் கலக்காது.
இவ்வாறு அவர் பேசினார்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT