Published : 13 Feb 2020 02:40 PM
Last Updated : 13 Feb 2020 02:40 PM
என்னை சிறையில் வைத்த முதல்வர் பழனிசாமிக்கு நன்றி. 100 முறை சிறை வைத்தாலும் நான் அதிமுககாரன்தான் என, முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி தெரிவித்தார்.
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட பிறகும், இரட்டை இலை சின்னத்தைப் பயன்படுத்துவதாகவும் போலி இணையதளம் நடத்துவதாகவும் முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி மீது முத்துக்கவுண்டன்புதூர் ஊராட்சி மன்றத் தலைவர் கந்தவேல் புகார் அளித்திருந்தார்.
இதையடுத்து, சூலூர் போலீஸார் 17 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கே.சி.பழனிசாமியை கடந்த ஜனவரி 25-ம் தேதி கைது செய்தனர். இந்த நிலையில், கே.சி.பழனிசாமிக்கு நேற்று முன்தினம் (பிப்.11) நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது.
இந்நிலையில், கோவை மத்திய சிறையில் இருந்து கே.சி.பழனிசாமி இன்று (பிப்.13) காலை ஜாமீனில் வந்தார். சிறைவாசலில் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது கே.சி.பழனிசாமி கூறியதாவது:
"நேற்று முன்தினம் நீதிமன்றம் பெயில் கொடுத்தாலும் என்னை அதிகாரிகள் விடவில்லை. ஊடகங்களில் வருவதை வைத்து என்னை வெளியில் விட முடியாது எனத் தெரிவித்தனர்.
அதிமுகவில் இருந்து என்னை நீக்கியதாக ஊடகத்தில் மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளது. என்னைக் கட்சியில் இருந்து நீக்கியதாக கடிதம் எதுவும் கொடுக்கவில்லை. இதுவரை என்னைக் கட்சியை விட்டு நீக்கியதாக அதிமுகவில் இருந்து எழுத்துபூர்வமாகவோ, தபால் மூலமாகவோ, எனக்கோ, எனது விலாசத்திற்கோ அதிமுகவில் இருந்து கடிதம் எதுவும் கொடுக்கப்படவில்லை. என்னைக் கட்சியில் இருந்து நீக்கியதாக என் விலாசத்திற்கு கடிதம் அனுப்பியதற்கு ஆதாரம் அதிமுகவிடம் இருக்கின்றதா?
கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் பொதுச் செயலாளரைத் தேர்வு செய்யும் உரிமையைப் பறிப்பது தவறு. அடிப்படை உறுப்பினர்கள் பொதுச்செயலாளரைத் தேர்வு செய்யும் உரிமையைப் பெற்றுக்கொடுக்கவே போராடுகிறேன். அடிப்படை உறுப்பினர்களுக்கு உரிமையை பெற்றுக் கொடுக்கும் வரை ஓயமாட்டேன்
சிறை வைத்தது என்னை அல்ல. எம்ஜிஆர், ஜெயலலிதா கொள்கைகளையே சிறை வைத்தனர். அதிமுக உருவாக்கியதில் இருந்து கடைப்பிடிக்கும் கொள்கைகளை சிறை வைத்தனர். என்னைச் சிறை வைத்தன் மூலம் என்னுடைய எண்ணம், கொள்கைகளில் இன்னும் உறுதியாக இருப்பேன். என்னை சிறையில் வைத்த முதல்வருக்கு நன்றி. அவர் என் மன உறுதியை அதிகப்படுத்தியுள்ளார்.
நான் என்றைக்கும் அதிமுககாரன்தான். இதுபோன்று செய்தால் கோபித்துக்கொண்டு வேறு கட்சிக்குப் போய் விடுவேன் என நினைக்கின்றனர். வேறு கட்சிக்கு எல்லாம் செல்ல மாட்டேன். கொள்கையில் இருந்து பின்வாங்கவும் மாட்டேன். 100 முறை என்னை சிறை வைத்தாலும் நான் அதிமுககாரன்தான்.
முன்பை விட அதிக உத்வேகத்துடன் இந்த வழக்குகளை நடத்துவேன்".
இவ்வாறு கே.சி.பழனிசாமி தெரிவித்தார்.
தினமும் காலை, மாலை சூலூர் நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என கே.சி.பழனிசாமிக்கு நிபந்தனை விதிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
தவறவிடாதீர்!
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேடு: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT