Published : 13 Feb 2020 02:03 PM
Last Updated : 13 Feb 2020 02:03 PM
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரிய மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக நேற்று (பிப்.12) மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், "தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி நடத்தும் தேர்வுக்கு கடந்த பல ஆண்டுகளாக கட்டமைப்பு வசதிகள் செய்து கொடுப்பதில்லை. இந்தத் தேர்வை கண்காணிக்க மண்டல அளவில் டிஎன்பிஎஸ்சி அலுவலகமும் இல்லை. இதனால் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு வருவாய்த்துறை அதிகாரிகள், போலீஸார் மற்றும் ஆசிரியர்களையே டிஎன்பிஎஸ்சி முழுமையாக நம்பியுள்ளது.
டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான வினாத்தாள் அச்சடிப்பது, அவற்றை தேர்வு மையங்களுக்குப் பாதுகாப்பாக எடுத்துச் செல்வது வருவாய்த்துறை ஊழியர்கள், போலீஸார் மற்றும் டிஎன்பிஎஸ்சி ஊழியர்களின் பணி. இப்பணியை கோட்டாட்சியர்கள், சார் பதிவாளர்கள் கண்காணிக்க வேண்டும்.
டிஎன்பிஎஸ்சி தேர்வில் வருவாய் மற்றும் காவல்துறை மட்டத்திலிருந்து முறைகேடு தொடங்குகிறது. தேர்வு மைய ஊழியர்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகமும், வட்டாட்சியர்களும் தேர்வு செய்கின்றனர். இதுவே முறைகேடு செய்ய காத்திருப்பவர்களுக்குச் சாதகமாக அமைகிறது. இதனால் டிஎன்பிஎஸ்சி தேர்வில் முறைகேடுகள் நடைபெறுகின்றன.
சமீபத்தில் டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப் 4 தேர்வி்ல் முறைகேடு நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர். விசாரணையில் குரூப் 1 மற்றும் 2 தேர்விலும் முறைகேடு நடைபெற்றிருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் கடந்த 15 ஆண்டுகளாக நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும்.
குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக தமிழக அரசின் கீழ் உள்ள சிபிசிஐடி, முறைகேட்டில் தொடர்புடைய அரசு அதிகாரிகளை நியாயமாக விசாரிக்கமாட்டார்கள்.
எனவே குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இந்த விசாரணையை உயர் நீதிமன்றம் நேரடியாக கண்காணிக்க வேண்டும்.
மத்திய அரசுப் பணியாளர் தேர்வில் கடைபிடிக்கப்படுவது போல் தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளை 4 முதல் 5 நிலைகளில் நடத்தி, அனைத்து நிலைகளிலும் வெற்றிப்பெற்றவர்களை மட்டுமே அரசு பணிக்கு தேர்வு செய்ய உரிய வழிகாட்டுதல்களை உருவாக்கவும் உத்தரவிட வேண்டும்"
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் எம்.துரைசுவாமி, டி.ரவீந்திரன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் மத்திய உள்துறை செயலரை ஒரு எதிர்மனுதாரராக சேர்த்துள்ளார். அவருக்கும் மத்திய பணியாளர் தேர்வாணையத்துக்கும் தொடர்பு இல்லை. எனவே முதல் எதிர்மனுதாரரை நீக்க வேண்டும். டிஎன்பிஎஸ்சி தேர்வுக்காக மத்திய அரசு புதிய வழிகாட்டுதல்களை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் நீக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து மனுவை திரும்பp பெறுவதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையேற்று புதிதாக மனு தாக்கல் செய்ய உரிமை வழங்கி, முந்தைய மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT