Published : 13 Feb 2020 11:03 AM
Last Updated : 13 Feb 2020 11:03 AM

தீவிரமடைகிறது அத்திக்கடவு-அவிநாசி திட்டப் பணிகள்: 6 நீரேற்று நிலையங்களுக்கான 48 பம்புகள் புணேயில் உற்பத்தி

திருப்பூர்

அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தில் 6 நீரேற்று நிலையங்களுக்கான 48 பம்புகள் புணேயில் உற்பத்தி செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த மக்களின் 60 ஆண்டு கால வாழ்வாதார கோரிக்கையான ‘அத்திக்கடவு - அவிநாசி நிலத்தடி நீர் செறிவூட்டும்’ திட்டத்துக்கு, கடந்த பட்ஜெட்டில் ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கடந்த ஆண்டு பிப்ரவரி 29-ம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டது. தமிழகத்தில் பவானிஆறும், மாயாறும் சேரும் இடத்தில்கீழ்பவானி அணைக்கட்டு (பவானிசாகர் அணை) 1948- 1955-ம் ஆண்டு கால கட்டத்தில் கட்டப்பட்டு, கீழ்பவானி பாசனம் மற்றும் அரக்கன்கோட்டை, தடப்பள்ளி, காளிங்கராயன் வாய்க்கால் போன்ற பாசனத் திட்டங்களுக்கும், பிற குடிநீர் திட்டங்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது. இவற்றின் தேவை போக உபரியாக உள்ள தண்ணீரை பயன்படுத்துவதே அத்திக்கடவு - அவிநாசி திட்டம்.

ஈரோடு காளிங்கராயன் அணைக்கட்டின் கீழே, 200 மீட்டர் தள்ளி பவானி ஆற்றிலிருந்து தண்ணீர் எடுத்து குழாய் மூலம் ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களில் வறட்சிப் பகுதிகளில் உள்ள 32 பொதுப்பணித்துறை ஏரிகள், 42 ஊராட்சி ஒன்றிய குளங்கள், 974 குட்டைகள் நீர் நிரப்பி பாசனம்மற்றும் நிலத்தடி நீரை செறிவூட்டும் திட்டமாகும். இதற்கு தேவைப்படுவது மழைக் காலங்களில் உபரியாக வெளியேறும் நீரில் 1.5 டி.எம்.சி. மட்டுமே. காளிங்கராயன் அணைக்கட்டின் கீழே உள்ள பகுதியிலிருந்து உயரமான பகுதிகளுக்கு உபரி நீரை மட்டுமே நீரேற்று முறையில் எடுத்துச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. உபரி நீர் வெளியேறும் நாட்களில் நாள் ஒன்றுக்கு 250 கனஅடி வீதம் 70 நாட்களில் 1.5 டி.எம்.சி. நீரை திட்டத்துக்காக எடுக்கும் வகையில் திட்டமிட்டுள்ளனர்.

அவிநாசி வட்டம் சேவூர் பந்தம்பாளையம் பகுதியில் அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தின் ஒப்பந்த நிறுவனமான எல் அண்டு டி நிறுவன கிடங்கு வளாகத்தில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள இரும்புக் குழாய்களை அத்திக்கடவு - அவிநாசி திட்ட கண்காணிப்பு பொறியாளர் சு. சிவலிங்கம் பார்வையிட்டு ஆய்வு செய்து கூறியதாவது:

இத் திட்டத்துக்காக காளிங்கராயன், நல்லாம்பாளையம், திருவாச்சி, போளநாயக்கன்பாளையம், எம்மாம்பூண்டி மற்றும் அன்னூர் ஆகிய 6 இடங்களில் அமைய உள்ள நீரேற்று நிலையங்களுக்கு பம்பு உற்பத்தி, புணேயில் தொடங்கப்பட்டுள்ளது. ஒரு நீரேற்று நிலையத்துக்கு 8 பம்புகள் வீதம், மொத்தம் 48 பம்புகள் பயன்படுத்தப்பட உள்ளன. இதில் 5 நீரேற்று நிலையங்கள், ஈரோடு மாவட்டத்திலும், 6-வது நீரேற்று நிலையம் கோவை மாவட்டம் அன்னூரிலும் அமைய உள்ளது.

சூரிய மின்சக்தி உற்பத்திக்கூடம்

கடந்த டிசம்பர் 19-ம் தேதி மாநில அரசின் சுற்றுச்சூழல் அனுமதி பெறப்பட்ட நிலையில் பணிகள் தற்போது தீவிரமடைந்துள்ளன. பவானி கூடுதுறையில் தொடங்கி அன்னூர் வரை 105 கிலோ மீட்டரும், திட்டம் பயன்பெறும் பகுதிகள் 950 கிலோ மீட்டருக்கு தேவையான குழாய்கள் தயாரிக்கும் பணி பெருந்துறை, ஹைதராபாத், கும்மிடிப்பூண்டியில் நடைபெற்று வருகிறது. இந்த திட்டத்துக்காக சூரிய ஒளி மூலம் மின் உற்பத்தி செய்யவும் திட்டமிட்டுள்ளோம். இதற்காக நம்பியூர் அருகே 120 ஏக்கரில் 33 மெகாவாட் மின் உற்பத்தி செய்யக்கூடிய சூரிய மின் சக்தி உற்பத்திக்கூடமும் தயாராக உள்ளது. இதற்கான பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன. இதன் மதிப்பு சுமார் ரூ. 143.5 கோடியாகும். திட்டத்தின் மொத்த மதிப்பு ரூ. 1652 கோடி ஆகும். இதன்மூலம் 24468 ஏக்கர் நிலம் பயன்பெறும், என்றார்.

ஈரோடு, கோவை மற்றும் திருப்பூர் ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு உட்பட்ட, அவிநாசி,திருப்பூர் வடக்கு, பெருந்துறை, காங்கயம், கோபி செட்டிபாளையம், பவானிசாகர், கவுண்டம்பாளையம், தொண்டாமுத்தூர், மேட்டுப்பாளையம் ஆகிய 9 சட்டப்பேரவைத் தொகுதிகள் உட்பட சுமார் 50 லட்சம் மக்கள் பல்வேறு வழிகளில் பயனடையும் வகையில், இத்திட்டத்தை நிறைவேற்ற பொதுப்பணித்துறை திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. நீரேற்று நிலையங்களில் கட்டுமானப் பணிகள் வேகமாக நடைபெற்று வருவதால், பல்வேறு தரப்பினரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x