Published : 13 Feb 2020 07:55 AM
Last Updated : 13 Feb 2020 07:55 AM

திராவிடர் கழகத்தினர் போராட்ட திட்டம்: திருப்பனந்தாளில் பல்லக்கில் செல்வதை கைவிட்டார் தருமபுரம் ஆதீனகர்த்தர்

திருச்சி

மனிதர்கள் தூக்கும் பல்லக்கில் செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து திராவிடர் கழகத்தினர் போராட்டம் நடத்தத் திரண்டதால் திருப்பனந்தாளில் தருமபுரம் ஆதீனகர்த்தர் நேற்று பல்லக்கில் செல்வதை கைவிட்டு, கோயிலுக்கு நடந்தே சென்றார்.

நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஆதீனத்தின் புதிய ஆதீனகர்த்தராக பொறுப்பேற்றுள்ள ல மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், ஆதீனத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கோயில்களுக்கு சென்று வழிபாடு நடத்தி வருகிறார். அப்போது பக்தர்கள் அவரை ‘பட்டினப் பிரவேசம்’ எனப்படும் பல்லக்கில் வைத்து திருவீதிகளை சுற்றி கோயிலுக்கு அழைத்துச் சென்று வருகின்றனர்.

இதற்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அண்மையில் எதிர்ப்பு தெரிவித்து, பல்லக்கில் தூக்கிச் சென்றால் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தார். அதன்படி திக மாவட்ட பொதுச் செயலாளர் ஜெயக்குமார் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் திருப்பனந்தாள் கடைவீதியில் நேற்று திரண்டிருந்தனர். இவர்களுடன் நீலப்புலிகள் இயக்கம், விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் திரண்டிருந்தனர்.

இந்நிலையில், திருப்பனந்தாளில் உள்ள அருணஜடேஸ்வரர் கோயிலுக்கு புதிய ஆதீனகர்த்தர் ல மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் நேற்று மாலை வருகை தந்தார். கோயிலுக்கு அருகிலுள்ள விநாயகர் சந்நிதி அருகே காசிமடம் சார்பில் முத்துக்குமாரசுவாமி தம்பிரான் சுவாமிகள் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

தொடர்ந்து, கோயிலில் தரிசனம் செய்துவிட்டு, காசி மடத்துக்கு வந்த ஆதீனகர்த்தருக்கு மடத்தின் வாசலில் சிவஞான கொலுக்காட்சி நடத்தப்பட்டு, புஷ்ப ஆரத்தி எடுக்கப்பட்டு, ஆதீன கட்டளைத் தம்பிரான்கள் குருவணக்கம் செலுத்தினர்.

அப்போது, திராவிடர் கழகத்தினரின் போராட்டம் குறித்து ஆதீனகர்த்தருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பல்லக்கை தவிர்த்து நடந்தே கோயிலுக்குச் சென்றார்.

ஆதீனகர்த்தர் பல்லக்கில் செல்லவில்லை என்ற தகவலை போராட்டத்துக்கு திரண்டிருந்தவர்களிடம் போலீஸார் தெரிவித்தனர். அப்போது, அவர்கள் பெரியார் வாழ்க, அம்பேத்கர் வாழ்க, தருமபுரம் ஆதீனத்துக்கு நன்றி என முழக்கங்களை எழுப்பிவிட்டு கலைந்து சென்றனர்.

இதுகுறித்து திராவிடர் கழக துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் வெளியிட்ட அறிக்கை: மனிதனை மனிதன் சுமப்பது மனித உரிமைக்கு எதிரானது. அவ்வாறு ஆதீனகர்த்தரைப் பல்லக்கில் வைத்து மனிதர்கள் தூக்கிச் சென்றால் போராட்டம் நடத்தப்படும் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிவித்திருந்தார்.

அதன்படி திருப்பனந்தாளில் திராவிடர் கழகத்தினர் திரண்டு மறியல் செய்ய திட்டமிட்டிருந்தனர். இதை அறிந்த தருமபுரம் ஆதீனகர்த்தர், “பல்லக்கில் செல்லவில்லை, நடந்தே செல்கிறேன்” என காவல்துறையினர் மூலம் தகவல் தெரிவித்ததன் அடிப்படையில் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

எனவே, காவல் துறைக்கும், ஒத்துழைத்த தருமபுரம் ஆதீனகர்த்தருக்கும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி நன்றியையும், பாராட்டுதலையும் தெரிவித்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x