Published : 12 Feb 2020 05:44 PM
Last Updated : 12 Feb 2020 05:44 PM
அரசியல் பிரச்சாரம், பிறந்த நாள் வாழ்த்து போஸ்டர்களால் கிறுக்கல்களாகக் காணப்படும் குடிசை மாற்று வாரியக் குடியிருப்புகள் வண்ண ஓவியங்களால் அலங்கரிக்கப்பட்டால் எப்படி இருக்கும்?
அத்தகைய காட்சிகளை தற்போது கண்ணகி நகரில் அமைந்துள்ள குடிசை மாற்று வாரியத்தின் கட்டிடங்களில் பார்க்கலாம்.
சென்னை மாநகராட்சி மற்றும் குடிசை மாற்று வாரியத்தின் அனுமதியுடன் 'ஸ்ட்ரீட் ஆர்ட் இந்தியா பவுண்டேஷன்' (சென்னை மட்டும் அல்லாது இந்தியாவின் முக்கிய நகரங்களில் உள்ள குடிசைப் பகுதிகளில் ஓவியம் வரையும் பணியைச் செய்து வருகிறது) என்ற தன்னார்வ அமைப்பின் ஓவியர்கள் கண்ணகி நகரின் கட்டிங்களில் வண்ண ஓவியங்களை வரைந்து வருகின்றனர்.
உயர்ந்த கட்டிடங்களில் சிரிக்கும் மழலைகளின் சிரிப்பு அக்கட்டிடத்தைக் கடந்து செல்லும் அனைவரது முகத்திலும் புன்னகை பூக்க வைக்கிறது. கிரேன்களில் கையில் தூரிகையுடன் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஓவியர்கள் தீட்டும் ஓவியங்களைக் காண்பதற்கு சிறு கூட்டம் அங்கு கூடிவிடுகிறது.
இந்த நிலையில் சென்னையைக் கலை மாவட்டமாக மாற்றும் பணி கண்ணகி நகரிலிருந்து தொடங்கியுள்ளது என்கிறார் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்.
கண்ணகி நகரில் ‘ஸ்ட்ரீட் ஆர்ட் இந்தியா பவுண்டேஷன்’ என்ற தன்னார்வ அமைப்பின் சார்பில் வரைப்படும் ஓவியங்கள் குறித்து அவர் கூறும்போது, “கட்டிங்களில் ஓவியங்கள் வரைவது தொடர்பான திட்டம் சுமார் 3 மாதங்களுக்கு முன்னரே தொடங்கப்பட்டது. தற்போது இதனை 'ஸ்ட்ரீட் ஆர்ட் இந்தியா பவுண்டேஷன்’ மாநகராட்சி அனுமதியுடன் செயல்படுத்தி வருகிறது. இப்பணியில் பல்வேறு நாடுகளைச் சார்ந்த ஓவியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்.
என்னைப் பொறுத்தவரை கலைகளுக்கு அதன் சூற்றுச் சூழலை மாற்றும் தன்மை உண்டு. கலைகள் நிச்சயம் மனிதர்களுக்கு நம்பிக்கையை விதைக்கும் என்று நம்புகிறேன். அதுமட்டுமல்லாது குடிசை மாற்று வாரியக் குடியிருப்புகள் என்றால் இவ்வாறுதான் இருக்கும் என்ற பொதுப்புத்தியில் மாற்றம் வர வேண்டும்.
ஓவியங்கள் வரைவதை முதலில் நொச்சிக் குப்பத்திலிருந்துதான் தொடங்க வேண்டும் என்று எண்ணினோன். ஆனால், கண்ணகி நகரில் ஆரம்பிக்கும்படி அமைந்துவிட்டது. ஓவியங்கள் வரைவதற்குப் பெரிய அளவில் செலவு செய்யப்படவில்லை. ஓவியங்களுக்கான பெயிண்ட்டுகளுக்கு ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனம் பெரிதும் உதவியது.
கண்ணகி நகர் மட்டுமல்லாமல் இம்மாதிரி மற்ற இடங்களிலும் இதனைத் தொடர இருக்கிறோம். கண்ணகி நகரை அடுத்து நொச்சிக் குப்பத்தில் ஓவியங்கள் வரையப்பட உள்ளன. அடுத்து இது அப்படியே சென்னையிலுள்ள பிற இடங்களிலும் தொடரும்.
சென்னை மெட்ரோ அமைந்துள்ள பல சுவர்களில் எல்லாம் ஓவியங்கள் வரைய நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். சென்னையைக் கலை மாவட்டமாக மாற்றுவதே எங்கள் இலக்கு” என்று ஆணையர் பிரகாஷ் தெரிவித்தார்.
கட்டிடங்களில் வரையப்பட்டுள்ள கண்ணைக் கவரும் ஓவியங்கள் தங்களுக்குப் புதிய அனுபவத்தை அளிப்பதாகத் தெரிவித்துள்ள கண்ணகி நகர் வாசிகள், அப்பகுதியில் நிலவும் அடிப்படைப் பிரச்சினைகளையும் தீர்க்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சிக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
தொடர்புக்கு : indumathy.g@hindutamil.co.in
படங்கள்: எல்.சீனிவாசன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT