Published : 12 Feb 2020 11:39 AM
Last Updated : 12 Feb 2020 11:39 AM
காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்தது விவசாயிகளை ஏமாற்ற அரங்கேற்றப்பட்ட நாடகம் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்ற சட்டம் இயற்றப்படும் என, கடந்த 9-ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதனை, விவசாய அமைப்புகள், அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.
இந்நிலையில், இது தொடர்பாக சென்னை, வேலப்பன்சாவடியில் இன்று (பிப்.12) நடைபெற்ற கட்சி நிர்வாகியின் இல்லத் திருமண விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
"நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வி, உள்ளாட்சித் தேர்தலில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காதது ஆகியவற்றால் அடுத்து வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலை மனதில் வைத்து, திட்டமிட்டு விவசாயிகளை ஏமாற்றும் வகையில் ஒரு நாடகத்தை அரங்கேற்றியிருக்கின்றனர். அதனால் தான், காவிரி டெல்டாவைப் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக முதல்வர் அறிவித்துள்ளார்.
உண்மையாக கொண்டு வந்தால் அதனை வரவேற்கக் காத்திருக்கிறோம், தயாராக இருக்கிறோம். நீட் தேர்வுக்கும் இப்படித்தான் சொன்னார்கள். நீட் வரவே வராது என்று சொன்னார்கள். சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி வைத்தனர். ஆனால், நீட் வந்துவிட்டது. மத்திய அரசிடம் குரல் கொடுக்க தமிழக அரசு தயாராக இல்லை.
வேளாண் மண்டலம் அறிவிக்கப்பட்டாலும் அதனை நிறைவேற்றுவது மத்திய அரசு. அதை மத்திய அரசிடம் வலியுறுத்துவதற்கு தமிழகத்தில் உள்ள ஆட்சிக்குத் தைரியமில்லை. ஏனெனில் அடிமை ஆட்சிதான் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறுகிறது. இந்த ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய சூழல் விரைவில் வந்துகொண்டிருக்கிறது. அந்த சூழலில் திமுகவுக்கு சிறப்பான ஆதரவு தர வேண்டும்".
இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.
தவறவிடாதீர்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT