Published : 12 Feb 2020 10:49 AM
Last Updated : 12 Feb 2020 10:49 AM
குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என புதுச்சேரி சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக நியமன எம்எல்ஏக்கள் மூவரும் வெளிநடப்பு செய்தனர். எதிர்க்கட்சிகளான என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக எம்எல்ஏக்கள் முற்றிலும் சட்டப்பேரவை நிகழ்வுகளைப் புறக்கணித்தனர்.
புதுச்சேரி சட்டப்பேரவை இன்று (பிப்.12) கூடியதும் மறைந்த எம்எல்ஏக்கள் புருஷோத்தமன், ராமநாதன் உள்ளிட்டோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அதையடுத்து புதுச்சேரி சரக்குகள் மற்றும் சேவைகள் வரி சட்ட முன்வரைவு நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தை எதிர்க்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக எம்எல்ஏக்கள் புறக்கணித்தனர். பாஜக நியமன எம்எல்ஏக்கள் பங்கேற்றனர்.
குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேடுகளைத் திரும்பப் பெற வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக நியமன எம்எல்ஏக்கள் சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகியோர் பேசினர். இதனால் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. அப்போது அமைச்சர் கமலக்கண்ணன், "இந்தியாவின் ஆன்மாவைக் கொன்றவங்கள் நீங்கள்" என்று குறிப்பிட்டார்.
"இது ஜனநாயகப் படுகொலை. குடியரசுத் தலைவர் கையெழுத்திட்டதை எப்படி எதிர்க்க முடியும்" என்று தெரிவித்து பாஜக நியமன எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். பேரவை வளாகத்தில் மூவரும் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
அதையடுத்து தீர்மானத்தை முன்மொழிந்து முதல்வர் நாராயணசாமி சட்டப்பேரவையில் பேசியதாவது:
"நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட குடியுரிமைத் திருத்தச் சட்டம் மக்கள் அனைவரிடமும் வேதனையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியது. இச்சட்டத்துக்கு எதிராகப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்திய அரசியலமைப்புச் சட்ட அடிப்படையாக திகழ்வது மதச்சார்பின்மை. அதை இச்சட்டம் சிதைக்கிறது.
மத அடிப்படையிலான பிரிவினையை எதிர்த்து தன் உயிரைத் தியாகம் செய்த காந்தியை தேசப்பிதாவாகக் கொண்ட நாடு நம் இந்தியா. அவரது எண்ணங்களுக்கும், வழிகாட்டுதல்களுக்கும் எதிரான இந்தக் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ஏற்பது அவரது தியாகத்துக்கு மிகப்பெரிய இழுக்கு.
அதேபோல் குடியுரிமைச் சட்டத் திருத்தத்தில் இலங்கைத் தமிழர்கள் இடம் பெறவில்லை. நாட்டின் மதச்சார்பின்மைக்கு எதிரான குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை மத்திய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும்".
இவ்வாறு நாராயணசாமி தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து சட்டப்பேரவை உறுப்பினர்கள் விவாதித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
முன்னதாக, இத்தீர்மானத்தை சட்டப்பேரவையில் நிறைவேற்றக்கூடாது என்று பாஜகவினர் ஆளுநர் கிரண்பேடியிடம் மனு தந்தனர். நாடாளுமன்றத்தில் இத்தீர்மானம் கொண்டு வந்ததை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றக்கூடாது என்று கிரண்பேடி முதல்வருக்கு கடிதம் அனுப்பியிருந்தார். இதைக் குறிப்பிட்டு கிரண்பேடியை விமர்சித்து அரசு கொறடா அனந்தராமன் பேசிய வார்த்தைகள் அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்பட்டன.
குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து, ஏற்கெனவே கேரள சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT