Published : 12 Feb 2020 10:30 AM
Last Updated : 12 Feb 2020 10:30 AM

தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயில் கலசத்துக்கு தங்க முலாம் பூச வீட்டை அடமானம் வைத்த கோவை தொழில்முனைவர்

பெரிய கோயில் குடமுழுக்குக்காக தங்க முலாம் பூசப்பட்ட கலசங்கள் | அடுத்தப் படம்: எஸ்.ஸ்ரீகுமார்

கோவை

தஞ்சை பெரிய கோயில் கலசத்துக்கு தங்க முலாம் பூசும் திருப்பணிக்காக கோவையைச் சேர்ந்த தொழில்முனைவர் குமார், தனது வீட்டையே அடமானம் வைத்துள்ளார்.

தஞ்சை பெரிய கோயிலின் குடமுழுக்கு விழா திருப்பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டவர்களில் ஒருவரான கோவை குமார்(42), விமானக் கலசத்துக்கு பொன்முலாம் பூசும் திருப்பணியை ஏற்றதுடன், வெவ்வேறு சேவைகளிலும் ஈடுபட்டுள்ளார். இதற்காக தனது வீட்டையே இவர் அடமானம் வைத்துள்ளார்.

கோவை சாய்பாபா காலனி என்.எஸ்.ஆர். சாலையில் மோட்டார் கியர்பாக்ஸ் விநியோகம் செய்யும் தொழிலில் ஈடுபட்டுள்ள குமார் `இந்து தமிழ்' செய்தியாளரிடம் கூறியதாவது: எங்களது பூர்வீகம் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம். பெற்றோர் சிவசங்கரன் நாயர்-லஷ்மிகுட்டி. பணி நிமித்தமாக பலஆண்டுகளுக்கு முன்பே கோவைக்கு வந்தோம். அப்பா கோவையில் டெய்லராக பணிபுரிந்தார்.

கோவை சி.ஐ.டி. கல்லூரியில் மெக்கானிக்கல் டிப்ளமோ படித்துவிட்டு, தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தேன். கடந்த 2000-ம் ஆண்டில் சென்னை சென்று, தனியார் கியர்பாக்ஸ் நிறுவனப் பணியில் சேர்ந்தேன். 2005-ல் மீண்டும் கோவைக்கு வந்து, 2008-ல் கியர்பாக்ஸ் விநியோகத் தொழிலைத் தொடங்கினேன். தற்போது கோவை ரத்தினபுரியில் வசித்து வருகிறேன்.

2012-ல் குடும்பத்தில் பெரிய இழப்பை சந்தித்தேன். மனம் தளர்ந்த நிலையில் இருந்த நான்,ஆன்மிகத்தில் கவனம் செலுத்தினேன். 2018-ல் தஞ்சை பிரகதீஸ்வரர் கோயிலுக்குச் சென்றபோது, பெருவுடையார் மீதும், பெரிய கோயிலைக் கட்டிய ராஜராஜ சோழன் மீதும் மிகுந்த பற்று ஏற்பட்டது. அக்கோயிலுக்கு ஏதாவது செய்ய வேண்டுமென்ற எண்ணம் உருவானது.

ஐப்பசி பவுர்ணமி நாளன்று நடைபெறும் அன்னாபிஷேகத்துக்காக இரண்டரை டன் (2,500 கிலோ)அரிசி வழங்குவதாக வேண்டிக்கொண்டேன். ஆனால், ஒரு டன்அரிசியே போதுமானதாக இருந்ததால், அதை வாங்கிக் கொடுத்தேன். 2019-ம் ஆண்டும் ஒரு டன் அரிசி வாங்கிக் கொடுத்தேன்.

இந்த ஆண்டு கும்பாபிஷேக விழா ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தபோது, எழுத்தாளர் ஆர்.ஞானசேகருடன் பெருவுடையாரை தரிசித்தபோது, கும்பாபிஷேக திருப்பணியில் ஈடுபடுவது என முடிவு செய்தேன்.

பெருவுடையார் கலசத்துக்கு தங்க முலாம் பூசுவது தொடர்பாகஅறநிலையத் துறை அதிகாரிகளிடம் விசாரித்தேன். அப்போது, தஞ்சை அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லேவுடன் செல்போனில் பேச வாய்ப்பு கிடைத்தது. விமான கலசத்துக்கு தங்க முலாம் பூசும் திருப்பணியில் ஈடுபட விருப்பமுள்ளதா என்று கேட்டார். உடனடியாக ஒப்புக் கொண்டேன். விமானத்தில் உள்ள பெருவுடையார் கலசத்துக்கு தங்க முலாம் பூசுவதற்குத் தேவையான தங்கம் குறித்தும் அறிந்து கொண்டேன்.

ரூ.20 லட்சம் அடமான கடன்

கோவையில் உள்ள எனது வீட்டை அடமானம் வைத்து, தேவையான தங்கம் வாங்க முடிவு செய்தேன். வங்கியில் ரூ.20 லட்சம், வீட்டு அடமானக் கடன் கிடைத்தது. எனது சேமிப்பு மற்றும் பி.எஃப். சேமிப்பு தொகையைக் கொண்டு, கலசத்துக்குத் தேவையான தங்கம் வாங்கிக் கொடுத்தேன். சுமார் 12.50 அடி உயரம் கொண்ட கலசத்துக்கு, ஸ்தபதிகள் செல்வராஜ், தங்கதுரை உள்ளிட்டோர் தங்க முலாம் பூசினர்.

பின்னர், குஜராத்தில் இருந்து மீட்டுவரப்பட்ட ராஜராஜன்-லோகமாதேவி சிலைகளுக்கு பட்டாடைகளை வாங்கி அணிவித்தேன். 10 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கினேன். இதற்கு சோழர்கள் வரலாற்று ஆய்வாளர்கள் மிகுந்த உதவியாக இருந்தனர். வீட்டை அடமானம் வைக்க, மனைவி கே.திவ்யா மற்றும் எனது பெற்றோர் எந்த தடையும் கூறவில்லை. 2017-ல் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள பழமையான துர்க்கை கோயிலில் திருப்பணிகள் செய்துள்ளேன் என்றார்.

202 கிராம் தங்கம் தந்த மற்றொரு பக்தர்

தஞ்சை பெரிய கோயில் விமான கலசம் திருப்பணி நன்கொடையாளர்களில் குமாரை தவிர மற்றொருவர் மதுரையைச் சேர்ந்த சிவில் காண்ட்ராக்டர் கார்த்திகேயன். கார்த்திகேயன் 202 கிராம் தங்கமும், குமார் 134 கிராம் தங்கமும், திருப்பணிக்கான ஸ்தபதி கூலி ரூ.5.50 லட்சத்தை இருவரும் இணைந்து வழங்கியுள்ளதாகவும், கோயிலில் 10 ஆயிரம் பேருக்கு அன்னதானத்தை குமார் வழங்கியுள்ளதாகவும் தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x