Published : 12 Feb 2020 10:14 AM
Last Updated : 12 Feb 2020 10:14 AM

தொண்டர்களை அரவணைத்து செல்லுங்கள்: அதிமுக நிர்வாகிகளுக்கு ஓபிஎஸ், இபிஎஸ் அறிவுரை

மாவட்டவாரியாக அதிமுக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் 2-வது நாளாக நேற்று நடைபெற்றது. இதில், திருவண்ணாமலை வடக்கு, தெற்கு, நீலகிரி, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி வடக்கு, தெற்கு மாவட்டத்துக்கான நிர்வாகிகள் பங்கேற்றனர். படம்: பு.க.பிரவீன்

சென்னை

தொண்டர்களின் கருத்துகளை கேட்டு அவர்களை அரவணைத்துச் செல்லுங்கள் என்று சென்னையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகளுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் ஓபிஎஸ், இபிஎஸ் அறிவுரை வழங்கினர்.

மாவட்டவாரியாக அதிமுக நிர்வாகிகள் உடனான ஆலோசனைக் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. 2-ம் நாளான நேற்று, திருவண்ணாமலை வடக்கு, தெற்கு, நீலகிரி, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி வடக்கு, தெற்கு, மாலையில் கன்னியாகுமரி கிழக்கு, மேற்கு, கடலூர் கிழக்கு, மத்தியம், மேற்கு, திருவள்ளூர் கிழக்கு, மேற்கு மாவட்டங்களின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர். மாவட்ட வாரியாக அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள், தலைமை நிர்வாகிகளும் கூட்டத்தில் பங்கேற்றனர்.

காலை 10.20 மணிக்கு தொடங்கிய முதல் கூட்டம் மாலை 3 மணிவரை நீடித்தது. இதில் திருவண்ணாமலை வடக்கு, தெற்கு மாவட்டத்துக்கான நிர்வாகிகள், செய்யாறு எம்எல்ஏ தூசி மோகன் மீது பல்வேறு புகார்களை அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தைப் பொறுத்தவரை, அனைத்து ஊரக உள்ளாட்சிகளையும் திமுக கைப்பற்றியுள்ளதால், அந்த மாவட்டத்தில் அதிமுகவினர் கவனமாக பணியாற்றும்படி ஒருங்கிணைப்பாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் 6 நிர்வாகிகள் மட்டுமே வந்திருந்ததால், ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களோடு இணைத்து ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற நிர்வாகிகளுடன், மக்களவை தேர்தல், ஊரக உள்ளாட்சித் தேர்தல் குறித்து ஒருங்கிணைப்பாளர்கள் விரிவாக விவாதித்துள்ளனர்.

விரைவில் நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு முன், மக்கள் மத்தியில் அரசின் திட்டங்களைக் கொண்டு செல்ல வேண்டும். தொண்டர்களை அரவணைத்து அவர்களுக்கு தேவையானவற்றை செய்து தரவேண்டும். தேர்தலின்போது அவர்களின் கருத்துகளைக் கேட்கும் வகையில் செயல்வீரர்கள் கூட்டத்தை நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தினர்.

மேலும், புதியதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாகவும் நிர்வாகிகள் தெரிவித்தனர். அதேநேரம், புகாருக்கு உள்ளான நிர்வாகிகளை ஓபிஎஸ், இபிஎஸ் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.

ஏற்கெனவே, நிர்வாகிகள், தொண்டர்களிடம் இருந்து வந்த புகார்கள் குறித்தும் சில நிர்வாகிகளிடம் விளக்கம் கேட்டு, அவர்களுக்கு அறிவுரையும் வழங்கி உள்ளனர்.

இதைத் தொடர்ந்து மாலை 6 மணிக்கு கன்னியாகுமரி கிழக்கு, மேற்கு, கடலூர் கிழக்கு, மத்தியம், மேற்கு, திருவள்ளூர் கிழக்கு, மேற்கு மாவட்டங்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இன்றைய கூட்டமும் தள்ளிவைப்பு

தமிழக அரசின் பட்ஜெட் வரும் 14-ம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளதால், 13-ம் தேதி நடைபெறுவதாக இருந்த ஆலோசனைக் கூட்டம் 15-ம் தேதிக்கு ஏற்கெனவே தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில், இன்று (பிப்.12) நடைபெற இருந்த கூட்டம் வரும் 16-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுவதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது.

திடீர் பரபரப்பு

இதற்கிடையே, கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, அலுவலக வளாகத்தில் கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகிகள் சிலர், டெல்லி சிறப்பு பிரதிநிதியும், முன்னாள் அமைச்சருமான தளவாய் சுந்தரத்துக்கு எதிராகக் கோஷமிட்டனர்.

அவர் ஒருதலைபட்சமாக நடந்து கொள்வதாகவும், நிர்வாகிகளை அரவணைத்துச் செல்வதில்லை என்றும் குற்றம்சாட்டினர். அவர்களை, அனைத்துலக எம்ஜிஆர் மன்ற செயலாளர் தமிழ்மகன் உசேன் மற்றும் மூத்த நிர்வாகிகள் சிலர் சமாதானப்படுத்தினர். இதனால், அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x