Last Updated : 11 Feb, 2020 09:03 PM

 

Published : 11 Feb 2020 09:03 PM
Last Updated : 11 Feb 2020 09:03 PM

தூத்துக்குடி இஎஸ்ஐ மருத்துவமனையின் பணி பொதுப்பணித்துறைக்கு அளிக்கப்பட்டுள்ளது –மக்களவையில் மத்திய இணை அமைச்சர் சந்தேஷ்குமார் தகவல்

புதுடெல்லி

தூத்துக்குடியில் இஎஸ்ஐ மருத்துவமனை அமைக்கும் பணி பொதுப்பணித்துறைக்கு வழங்கப்பட்டுள்ளதாக இன்று மத்திய தொழிலாளர், வேலைவாய்ப்பு நலத்துறை அமைச்சர் சந்தோஷ்குமார் கெங்குவார் தெரிவித்தார். மக்களவையின் திமுக துணைத்தலைவர் கனிமொழி எழுப்பிய கேள்விக்கு அவர் எழுத்துமூலம் பதில் அளித்துள்ளார்.

இது குறித்து மத்திய இணை அமைச்சரான சந்தீஷ் கெங்குவார் அளித்த பதிலில் கூறியதாவது:

முதலில் 2014 ஆம் ஆண்டு இந்த திட்டம் மத்தியப் பொதுப்பணித் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் தூத்துக்குடி பகுதியில் இஎஸ்ஐ. திட்டத்தின் கீழ் காப்பீடு செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்துக்கும் குறைவாக உள்ளது.

எனவே, மருத்துவமனைக்கான கட்டிடப் பணிகள் தொடங்கப்படவில்லை. இதையடுத்து மத்திய பொதுப்பணித்துறையிடம் இருந்து பணிக்கான ஆணை திரும்பப் பெறப்பட்டது. பின்னர் 2016 ஆம் ஆண்டு இந்தப் பணி இஎஸ்ஐ நிறுவனத்தால், இன்ஜினியரிங் ப்ராஜக்ட் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது.

ஆனால் அதற்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்படாத நிலையில், இந்த பணி ஆணையும் ரத்து செய்யப்பட்டது. இப்போது தூத்துக்குடியில் இஎஸ்ஐ காப்பீட்டு தாரர்கள் 50 ஆயிரம் பேருக்கு மேல் இருப்பதால், இஎஸ்ஐ மருத்துவமனை அமைக்கும் பணி மீண்டும் மத்திய பொதுப்பணித்துறைக்கே வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்

முன்னதாகவே தூத்துக்குடி எம்.பியான கனிமொழி எழுப்பிய கேள்வியில், 2014 ஆம் ஆண்டு தூத்துக்குடியில் தொடங்கப்பட்ட 100 படுக்கைகள் கொண்ட இஎஸ்ஐ மருத்துவமனை திட்டத்துக்கு மத்திய அரசு இதுவரை நிதி ஒதுக்கீடு ஏதேனும் செய்திருக்கிறதா? இந்த மருத்துவமனைத் திட்டத்தை நிறைவு செய்வதற்கு கால வரம்பு ஏதேனும் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறதா?” எனக் கேட்டிருந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x