Published : 11 Feb 2020 04:18 PM
Last Updated : 11 Feb 2020 04:18 PM
புதுச்சேரியில் நாளை சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. அதில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்ற பாஜக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஆளுநர் இது தொடர்பாக முதல்வருக்குக் கடிதம் எழுதியுள்ள சூழலில், அவருக்கு சட்டப்பேரவையில் பதில் தரப்படும் என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.
புதுச்சேரியில் நாளை (பிப். 12) சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டம் கூடுகிறது. அதில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராகத் தீர்மானம் கொண்டு வர ஆளும் கட்சியான காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. இதனை பாஜகவைச் சேர்ந்த நியமன எம்எல்ஏக்கள் எதிர்த்து குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராகத் தீர்மானத்தை நிறைவேற்றக்கூடாது என்று துணைநிலை ஆளுநர் கிரண்பேடியிடம் மனு தந்தனர்.
அதைத் தொடர்ந்து துணைநிலை ஆளுநர் கிரண்பேடி முதல்வர் நாராயணசாமிக்கு அனுப்பிய கடிதத்தில், "புதுச்சேரி சட்டப்பேரவையின் அதிகாரத்தின் அடிப்படையில் குடியுரிமைத் திருத்தச் சட்டம் தொடர்பாக விவாதம் உள்ளிட்டவை செய்வது நாடாளுமன்றத்துக்கு எதிரானது. அத்துடன் உச்ச நீதிமன்றத்தின் கீழ் இவ்விவகாரம் உள்ளது. புதுச்சேரி சட்டப்பேரவை விதிகளின் கீழ் நாட்டின் எப்பகுதியிலும் உள்ள நீதிமன்றத்தில் கீழ் இருக்கும் விவகாரத்தை தீர்மானமாக இயற்றவோ, விவாதிக்கவோ அனுமதிக்க இயலாது என்று உள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.
கிரண்பேடி அனுப்பியுள்ள கடிதம் தொடர்பாக இன்று (பிப்.11) செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த முதல்வர் நாராயணசாமி, "சட்டப்பேரவை மரபு காரணமாக நாளை கூடும் சட்டப்பேரவையில் பதில் தரப்படும்" என்று குறிப்பிட்டார்.
இதன் மூலம் புதுச்சேரி சட்டப்பேரவையில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக அரசு தீர்மானம் கொண்டு வருவது உறுதியாகியுள்ளது.
தவறவிடாதீர்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT