Published : 11 Feb 2020 04:01 PM
Last Updated : 11 Feb 2020 04:01 PM
ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்துப் போராடிய நெடுவாசல் உள்ளிட்ட கிராம மக்கள், விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெறுவது குறித்து முதல்வர் பரிசீலிப்பார் என, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
காவிரி டெல்டாவைப் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றுவதற்கு உரிய சட்டம் இயற்றப்படும் என, முதல்வர் பழனிசாமி நேற்று முன்தினம் அறிவித்தார்.
இந்நிலையில், இந்த அறிவிப்புக்காக சென்னை, பசுமை வழிச்சாலையில் உள்ள முதல்வர் பழனிசாமி இல்லத்தில் நெடுவாசல் போராட்டக் குழுவினர் முதல்வரைச் சந்தித்து நன்றி தெரிவித்தனர். அப்போது, அமைச்சர் விஜயபாஸ்கரும் உடன் இருந்தார்.
இந்தச் சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், "விவசாயிகளின் நலனுக்காக, மண்ணின் பெருமைக்காகப் போராடிய மாவட்டம் புதுக்கோட்டை மாவட்டம். உலக அளவில் நெடுவாசல் என்ற பெயரை அறியாதவர்கள் யாருமல்ல. தொடர் போராட்டங்களை அந்த கிராம மக்கள் மேற்கொண்டிருந்தாலும், தமிழக முதல்வர் தான் ஒரு விவசாயி என்ற தன் அடையாளத்தை முன்னிறுத்திக் கொண்டே இருக்கிறார்.
அந்த உணர்வுதான், யாரும் எதிர்பார்க்காத நிலையில், இந்தக் கோரிக்கையே முன் வைக்கப்படாத காலகட்டத்தில், இன்ப அதிர்ச்சியாக சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நெடுவாசல் கிராமத்தின் பெயரை உச்சரித்தார். நெடுவாசல் உள்ளிட்ட அனைத்து கிராமங்களும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக வரலாற்றுச் சிறப்புமிக்க மகிழ்ச்சியான செய்தியை அறிவிக்கப் போகிறேன் எனக் கூறி, சிறப்பு வேளாண் மண்டல அறிவிப்பை முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்" என விஜயபாஸ்கர் கூறினார்.
அதன் பின்னர் ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்துப் போராடிய நெடுவாசல் உள்ளிட்ட கிராம மக்கள், விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகள் திரும்பப் பெறப்படுமா என்பது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, "நெடுவாசல் போராட்டக் குழுவினர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர். முதல்வரும் அதனைக் கனிவோடு பரிசீலனை செய்வதாகச் சொல்லியிருக்கிறார்" என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
தவறவிடாதீர்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT