Published : 11 Feb 2020 10:26 AM
Last Updated : 11 Feb 2020 10:26 AM
திருச்சி விமான நிலையத்திலிருந்து தோஹா, அபுதாபி, டெல்லி மற்றும் மதுரைக்கு விரைவில் விமான சேவையை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் தொடங்க உள்ளது.
திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் சிங்கப்பூர், துபாய், சார்ஜாவுக்கும், ஏர் ஏசியா, மலிண்டோ ஏர் ஆகிய நிறுவனங்கள் மலேசியாவுக்கும், இன்டிகோ, ஸ்கூட் ஆகிய நிறுவனங்கள் சிங்கப்பூருக்கும், லங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் இலங்கைக்கும் தினசரி விமான சேவையை அளித்து வருகின்றன. இதுதவிர அலையன்ஸ் ஏர், இன்டிகோ ஆகிய நிறுவனங்கள் திருச்சியிலிருந்து சென்னை, ஹைதராபாத், பெங்களூருவுக்கு உள்நாட்டு விமான சேவைகளை அளித்து வருகின்றன.
மாநிலத்தின் மையப் பகுதியில் இருப்பதாலும், சுற்றுவட்டார மாவட்டங்களில் இருந்து அதிகளவிலானோர் பணி நிமித்தமாக சென்று வருவ தாலும் இங்கிருந்து குவைத், அபுதாபி, தோஹா உள்ளிட்ட இடங்களுக்கு நேரடி விமான சேவை அளிக்க வேண்டும் என பல்வேறு அமைப்பினர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் தனது இணையதளத்தின் முன்பதிவு பகுதியில், திருச்சியிலிருந்து விமான சேவைகள் அளிக்கப்படும் இடங்களின் பெயர்களில் ஏற்கெனவே இருந்த துபாய், சார்ஜா, சிங்கப்பூர் ஆகியவற்றுடன் தற்போது அபுதாபி, தோஹா, டெல்லி, மதுரை ஆகிய இடங்களையும் புதிதாகச் சேர்த்து பட்டியலிட்டுள்ளது.
அபுதாபிக்கு வாரம் 4 சேவை
இதனடிப்படையில், திருச்சி யிலிருந்து நள்ளிரவு 1.30 மணிக்கு புறப்படும் விமானம் அதிகாலை 4.35 மணிக்கு அபுதாபி சென்றடைவதாகவும், பின்னர் அதிகாலை 5.35 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு முற்பகல் 11.05 மணிக்கு திருச்சிக்கு வந்தடையும் எனவும், வாரத்தில் ஞாயிறு, திங்கள், புதன், வெள்ளி ஆகிய 4 நாட்கள் இயக்கப்படும் எனவும் முன்பதிவு பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது. மார்ச் 30-ம் தேதி முதல் இச்சேவை தொடங்கப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. தோஹா, டெல்லி, மதுரை ஆகிய இடங்களுக்கான நேரம், சேவைகள் குறித்து இன்னும் அறிவிக்கப்படவில்லை.
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு விமானநிலைய அதிகாரிகள், பயணிகள் மற்றும் ஆர்வலர்களிடம் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோடைகால அட்டவணை
இதுகுறித்து திருச்சி விமானநிலைய இயக்குநர் குணசேகரனிடம் கேட்டபோது, “திருச்சியில் இருந்து தோஹா, அபுதாபி, டெல்லி, மதுரை ஆகிய இடங்களுக்கு விமான சேவை அளிப்பது குறித்து இந்திய விமானநிலைய ஆணையக் குழுமத்திடம் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் ஆலோசித்து வந்தது. இதுகுறித்த கருத்துருவும் அளிக்கப்பட்டிருந்தது. இப்புதிய விமான சேவை அளிக்கப்படும் நாட்கள், நேரம் உள்ளிட்ட விவரங்கள் வரும் கோடைகால அட்டவணையில் இடம் பெறும் என எதிர்பார்க்கிறோம்” என்றார்.
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவன வட்டாரத்தில் விசாரித்தபோது, “புதிய விமான சேவைகளின் பயண கால அட்டவணை, வாரத்துக்கு எத்தனை சேவை என்பது குறித்த விவரங்கள் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்” என்றனர்.
குவைத்துக்கும் இயக்க வேண்டும்
இதுகுறித்து விமான சேவைகள் குறித்த தன்னார்வலர் உபயதுல்லா விடம் கேட்டபோது, “தோஹா, அபுதாபி, குவைத்தில் பணிபுரியக்கூடிய இந்தியர்களில் மலையாளிகளுக்கு அடுத்து அதிகளவில் இருப்பவர்கள் தமிழர்கள்தான். இவர்களில் பெரும்பாலோனார் திருச்சியைச் சுற்றியுள்ள மத்திய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். எனவே அவர்களின் வசதிக்காக கடந்த 30.4.2009 முதல் 27.10.2012 வரை திருச்சியிலிருந்து அபுதாபிக்கு நேரடி விமான சேவை அளிக்கப்பட்டு வந்தது. அதன்பின் நிறுத்தப்பட்ட இந்த சேவையை மீண்டும் தொடங்க ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் முன்வந்துள்ளது வரவேற்கத்தக்கது. இதேபோல குவைத்துக்கும் விமானசேவை அளித்தால் மிகவும் பயனளிப்பதாக இருக்கும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT