Published : 11 Feb 2020 08:46 AM
Last Updated : 11 Feb 2020 08:46 AM

‘நீட்’ தேர்வு ஆள் மாறாட்ட வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை: அதிகாரிகளுடன் சிபிசிஐடி டிஜிபி ஜாபர்சேட் ஆய்வு

விருதுநகர் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆய்வு செய்ய வந்த சிபிசிஐடி டிஜிபி ஜாபர்சேட்.

விருதுநகர்

நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்தவழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுமாறு அதிகாரிகளுக்கு சிபிசிஐடி டிஜிபி ஜாபர்சேட் உத்தரவிட்டார்.

நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து வெற்றி பெற்று தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த உதித் சூர்யா என்கிற மாணவர் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார்.

அவரைத் தொடர்ந்து, இவ்வழக்கில் இந்த மாணவரின்தந்தையும் மருத்துவருமான வெங்கடேசன், மேலும் 5 மாணவர்கள், அவர்களது தந்தை, இடைத்தரகர்கள் இரண்டு பேர் ஆகியோரை சிபிசிஐடி போலீஸார் அடுத்தடுத்து கைது செய்தனர்.

இவ்வழக்கில் தரகர்களுக்கு உதவிய மனோகரன் என்பவரை 3 நாட்களுக்கு முன் சிபிசிஐடி போலீஸார் கிருஷ்ணகிரியில் கைது செய்தனர். அதைத் தொடர்ந்து இவ்வழக்கு விசாரணையில் சிபிசிஐடி போலீஸார் மீண்டும் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தமிழக சிபிசிஐடி டிஜிபி ஜாபர்சேட் விருதுநகரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் நேற்று வருடாந்திர ஆய்வு செய்தார். அப்போது நிலுவையில் உள்ளவழக்குகள் நிலவரம், பேராசிரியை நிர்மலாதேவி வழக்கின் தற்போதைய நிலை ஆகியவற்றை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

அதைத் தொடர்ந்து நீட் தேர்வு ஆள் மாறாட்டம் வழக்கில் விசாரணையை தீவிரப்படுத்துவது குறித்து விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, திருநெல்வேலி ஆகியதென் மாவட்டங்களைச் சேர்ந்தசிபிசிஐடி டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர்களுடன் டிஜிபி ஜாபர்சேட் ஆலோசனை நடத்தினார். சிபிசிஐடி எஸ்.பி.விஜயகுமார் உடனிருந்தார்.

இதுகுறித்து சிபிசிஐடி வட்டாரங்கள் கூறும்போது, நீட் தேர்வு ஆள் மாறாட்டம் வழக்கு விசாரணையை தீவிரப்படுத்தவும், சம்பந்தப்பட்டவர்களை விரைவில்கைது செய்யவும் ஜாபர்சேட்உத்தரவிட்டார். மேலும், இவ்வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x