Published : 11 Feb 2020 08:38 AM
Last Updated : 11 Feb 2020 08:38 AM

வருமானவரித் துறை அலுவலகத்தில் நடிகர் விஜய் இன்று ஆஜர்? - நுங்கம்பாக்கத்தில் போலீஸ் பாதுகாப்பை அதிகரிக்க முடிவு

சென்னை

வருமானவரித் துறை அதிகாரி களின் விசாரணைக்காக நடிகர் விஜய் இன்று நேரில் ஆஜராகலாம் என்று எதிர்பார்க்கப்படுவதால், நுங்கம்பாக்கம் வருமானவரித் துறை புலனாய்வு பிரிவு அலு வலகத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

நடிகர் விஜய் நடித்த ‘பிகில்’ திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்தது. இந்தப் படம் ரூ.300 கோடி வருமானம் ஈட்டியதாக செய்திகள் பரவின. இதைத் தொடர்ந்து வருமானவரித் துறை யினர், ஏஜிஎஸ் நிறுவனத்துக்கு சொந்தமான திரையரங்குகள், அலுவலகங்கள், வீடுகள், நடிகர் விஜய்யின் பண்ணை வீடு, நீலாங்கரை மற்றும் சாலிகிராமம் வீடுகள், சினிமா பைனான்சியர் அன்புச்செழியனின் சென்னை மற்றும் மதுரை வீடுகள், அலுவல கங்கள் ஆகியவற்றில் சோதனை நடத்தினர்.

விஜய்யிடம் விசாரணை

இதற்கிடையே, நெய்வேலி நிலக்கரி சுரங்கப்பகுதியில் படப் பிடிப்பில் இருந்த விஜய்யை சென்னைக்கு அழைத்து வந்து வருமானவரித் துறையினர் விசா ரணை நடத்தினர்.

அன்புச்செழியன் வீட்டில் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

3 பேருக்கு சம்மன்

மேலும் ஏராளமான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. இதுகுறித்து நடிகர் விஜய், பைனான்சியர் அன்புச்செழியன், ஏஜிஎஸ் நிறுவன அதிபர் கல்பாத்தி அகோரம் ஆகியோரிடம் நடத்தியவிசாரணையில், 3 பேரும் முரண்பட்ட தகவல்களை தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

மேலும், சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் பணப்பரிவர்த்தனை ஆதாரங்கள், சொத்து மதிப்புகள் குறித்து விசாரணை நடத்துவதற்காக, நேரில் ஆஜராகும்படி நடிகர் விஜய் உட்பட 3 பேருக்கும் வருமானவரித் துறை சம்மன் அனுப்பியது.

படப்பிடிப்பு முடிந்தது

நடிகர் விஜய் நேற்று விசாரணைக்கு ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நெய்வேலியில் படப்பிடிப்பு நேற்றுடன் முடிவடைந்ததால், இன்று (பிப்.11) அவர் நேரில் ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நுங்கம்பாக்கம் வருமானவரித் துறை புலனாய்வுப் பிரிவு அலுவலகத்தில் விஜய் ஆஜராகிறார் என்ற தகவல் பரவி உள்ளதால், அவரது ரசிகர்கள் பெருமளவில் அங்கு குவிவதற்கு வாய்ப்பு உள்ளது.

எனவே, முன்கூட்டியே பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்க போலீஸார் தயாராக உள்ளனர். மேலும், விஜய்யின் வருகையை ரகசியமாக வைக்கவும் போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x