Published : 23 May 2014 08:00 AM
Last Updated : 23 May 2014 08:00 AM
தொண்டு நிறுவனங்கள் பெரும்பாலும் அயல்நாடுகளில் நிதி வாங்குகின்றன. ஆனால், ’’125 கோடி மக்கள் இருக்கும்போது அந்நிய நாட்டிலிருந்து நிதி பெறுவது இந்த தேசத்துக்கு இழுக்கு’’ என்கிறார் ரங்கநாதன்.
பொள்ளாச்சி அருகே ஆனைமலையில் 1968-ல் ரங்கநாதன் தொடங்கிய மகாத்மா காந்தி ஆசிரமம் இயற்கையோடு இயைந்து பயணித்துக் கொண்டிருக்கிறது. ஆதரவற்றவர்கள், ஆதரவற்ற குழந்தைகள், கொத்தடிமை தொழிலாளர்களின் குழந்தைகள், தண்டனை பெற்ற கிரிமினல் குற்றவாளிகளின் குழந்தைகள் இத்தனை பேருக்கும் நிழல் தரும் மரம் இந்த ஆசிரமம். ஒரு சிறிய அறையில் தொடங்கப்பட்ட இந்த ஆசிரமம் இன்று 6 ஏக்கரில் விருட்சமாய் வளர்ந்திருப்பது குறித்து நமக்கு விளக்கினார் ரங்கநாதன்.
’’பத்தாம் வகுப்பு படிக்கும்போது காந்தியின் சத்திய சோதனை புத்தகம் வாசித்தேன். அதுதான் என்னை இங்கே கொண்டு வந்து நிறுத்திவிட்டது. டிகிரி முடித்துவிட்டு நான் ஆசிரமம் தொடங்கியபோது சத்துணவுத் திட்டம் இல்லை. அப்போது, ஆனைமலை அருந்ததியர் தெருவில் கைக்குழந்தைகளுடன் பெண்கள் பிச்சை எடுத்ததைப் பார்த்தேன். அவர்களுக்காகவே பொதுமக்களுடன் இணைந்து அருந்ததியர் காலனியில் ஒரு ‘காந்தி மகான் பாலர் பள்ளி’யை கட்டிமுடித்தோம். ஆசிரியரும் தயார். ஆனால், வருகின்ற குழந்தைகளுக்கு சோறுபோட வழி தெரியவில்லை.
கொஞ்சமும் யோசிக்காமல், வீட்டுக்கு வீடு ஒருபிடி அரிசியையும் பொள்ளாச்சி சந்தையில் காய்கனிகளையும் யாசகம் கேட்டு வாங்கினோம். சமைத்துக் கொடுக்க நான் வருகிறேன் என்று எனது தாயார் வந்தார். எல்லாம் கைகூடியது. அருந்ததியர் பிள்ளைகளுக்கு படிப்பும், உணவும் கொடுத்தோம். பிறகு, தாழ்த்தப்பட்ட, பின்தங்கிய குழந்தைகளுக்காக இலவசமாக மாலை நேர பயிற்சி வகுப்புகளை தொடங்கினோம்.
20 கிராமங்களை தத்தெடுத்து மது மற்றும் பாட்டிலில் அடைக்கப்பட்ட குளிர்பானங்களின் தீமைகள் குறித்துப் பிரச்சாரம் செய்தோம். அந்த மக்களுக்காக மருத்துவ முகாம்களையும் இயற்கை வாழ்வியல் முறை குறித்த பயிற்சி வகுப்புகளையும் நடத்தத் தொடங்கினோம்.
திருமணத்திற்கு பிறகு எனது மனைவி வசந்தாவும் ஆசிரமப் பணிகளில் தன்னை இணைத்துக் கொண்டார். எங்களது ஆசிரமும் வளர ஆரம்பித்தது. ஆசிரமத்தில் இயற்கை விவசாயத்தில் விளை பொருட்களை உற்பத்தி செய்கிறோம். இயந்திரங்களை பயன்படுத்தாமல் மனித உழைப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம்.
2000 ரூபாயில் இயந்திரம் செய்யும் வேலையை ரூ.15,000 செலவில் மனிதர்களைக் கொண்டு முடிக்கிறோம். ஆசிரமத்தில் நச்சைக் கக்கும் மோட்டார் வாகனங்கள் ஏதும் கிடையாது. வெளியில் செல்ல மாட்டு வண்டிப் பயணம்தான். இதற்காகவே 3 வண்டிகளை வைத்திருக்கிறோம்.
டவுன் பஞ்சாயத்தில் உள்ள கிராமங்களில் மாதம் ஒரு கூரை வீட்டை ஓட்டு வீடாக மாற்றித் தருகிறோம். கோவை பி.எஸ்.ஜி. கல்லூரி பேராசிரியர் கந்தசாமி தலைமையில், கிராமங்களில் சிதிலமடைந்த நிலையில் உள்ள வீடுகளுக்கு மராமத்து பணிகளையும் செய்து கொடுக்கிறோம். இந்தப் பகுதியில் ஆதரவற்றவர்கள் யாராவது இறந்தால் அவர்களை நாங்களே அடக்கம் செய்கிறோம். ஏழைக் குடும்பங்களில் யாராவது இறந்தால் 1000 ரூபாயையும் 25 கிலோ அரிசியையும் ஆசிரமத்திலிருந்து அனுப்பி வைப்போம்.
ஆசிரமத்தில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில் குழந்தை களுக்கு உணவு, உடை, படிப்பு அனைத்தும் இலவசம். அதனால் இந்த வயதிலேயே அவர்களுக்கு இயற்கையின் அருமை புரிந்துவிடும். அடுத்ததாக, ‘ஒரு கல்லூரி - ஒரு குடில்’ என்ற திட்டத்தில் 1.25 லட்சம் செலவில் ஒவ்வொரு கிராமத்திலும் ஏழைகளுக்கு ஒரு வீடு கட்டிக் கொடுக்க தீர்மானித்திருக்கிறோம்.
இந்த ஆசிரமத்தை நடத்த மாதம் மூன்றரை லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது. இது முழுவதுமே பொதுமக்கள், விவசாயிகள், பேராசிரியர்கள் தரும் கொடைதான். இத்தனை நல்ல உள்ளங்கள் இருக்கையில் வெளி நாட்டில் கையேந்துவது தேசத்துக்கு அவமானம். அரசிடம் நிதி பெற்றால் நாம் சுதந்திரமாக செயல்பட முடியாது. இதுமட்டுமல்ல மதுபான வியாபாரிகள், வன்முறை, ஆபாசத்தை பரப்பும் சினிமா துறையினர், இறைச்சி வியாபாரிகள் இவர்களிடமிருந்தும் நாங்கள் நிதி பெறுவதில்லை’’ அழுத்தமாய் சொன்னார் ரங்கநாதன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT