Published : 10 Feb 2020 09:37 PM
Last Updated : 10 Feb 2020 09:37 PM
கேரளம், பஞ்சாப் மாநில அரசுகளைப் போல, தமிழக அரசும், குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்தும், தேசிய மக்கள்தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேட்டை அமல்படுத்த மாட்டோம் என சட்டமன்றக் கூட்டத் தொடரில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றவேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அறிக்கை:
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யின் தமிழ்நாடு மாநிலக்குழுக் கூட்டம் பிப்ரவரி 10,11 ஆகிய தேதிகளில் சென்னையில், மத்தியக்குழு உறுப்பினர் சவுந்தரராசன் தலைமையில் நடைபெறுகிறது.
இக்கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் கே. வரதராசன், பி. சம்பத், உ. வாசுகி மற்றும் மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.
குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுக:
இந்தியாவில் குடியுரிமை பெறுவதில் எவரொருவருக்கும் மதம், சாதி, வகுப்பு அல்லது பாலினத்தின் அடிப்படையில் வித்தியாசமோ அல்லது பாகுபாடோ காட்டக்கூடாது என இந்திய அரசியல் சாசனம் தெளிவாக வரையறுத்துள்ளது.
ஆனால் தற்போது மத்திய பாஜக அரசால் நிறைவேற்றப்பட்டுள்ள குடியுரிமை திருத்தச்சட்டம் சுதந்திர இந்தியாவில் குடியுரிமை பெறுவதற்கு மதம் என்ற தகுதியை இணைத்துள்ளது மிகவும் ஆபத்தானதாகும். தேசிய மக்கள்தொகை பதிவேடும், அதன் அடிப்படையில் தயாரிக்கப்படவிருக்கும் தேசிய குடிமக்கள் பதிவேடும் நாட்டிலுள்ள கோடிக்கணக்கான ஏழைகள், தலித்துகள், வீடு இல்லாதவர்கள், விளிம்புநிலை மக்கள் மற்றும் குறிப்பாக மூஸ்லீம் சமுதாயத்தினர் ஆகியோரைக் கடுமையாக பாதிக்கும்.
மத்திய பாஜக அரசின் குடியுரிமை திருத்தச்சட்டத்தை எதிர்த்தும், தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேட்டை எதிர்த்தும் நாடு முழுவதும் அரசியல் கட்சிகள், ஜனநாயக இயக்கங்கள், இளைஞர்கள், மாணவர்கள், தொழிற்சங்கங்கள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் அமைதியான முறையில் போராடி வருகின்றன.
குடியுரிமை திருத்தச்சட்டத் திருத்தத்தை 13 மாநில அரசுகள் எதிர்த்துள்ளன. கேரளம், பஞ்சாப் மாநிலங்கள் தங்கள் மாநிலங்களில் தேசியக் குடிமக்கள் பதிவேட்டுப் பணிகளை நடத்த மாட்டோம் என்று அறிவித்திருக்கிறார்கள்.
எனவே, கேரளம், பஞ்சாப் மாநில அரசுகளைப் போல, தமிழக அரசும், மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்தும், தேசிய மக்கள்தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேட்டை அமல்படுத்த மாட்டோம் என நடக்கவிருக்கும் சட்டமன்றக் கூட்டத் தொடரில் சிறப்பு தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.
காவிரி டெல்டா மாவட்டங்கள் வேளாண் மண்டலங்களாக அறிவிப்பு. நடப்பு சட்டமன்றக் கூட்டத்தில் தனிச் சட்டம் இயற்றுக:
விவசாய வளம் கொழிக்கும் காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்; ஹைட்ரோகார்பன் - மீத்தேன் திட்டங்களை எக்காரணம் கொண்டும் அனுமதிக்கக் கூடாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உட்பட பல அரசியல் கட்சிகள், விவசாய அமைப்புகள், தொழிலாளர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் ஒன்றுபட்டு பலகட்ட போராட்டங்களை நடத்தினர்.
இப்போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறையினர் தடியடி, கைது, சிறை, பொய் வழக்கு என பல அடக்குமுறைகளை கட்டவிழ்த்துவிட்டது; பல நூற்றுக்கணக்கானோர் மீது பொய்வழக்கு போடப்பட்டு நீதிமன்றத்திற்கு இன்றும் அலைந்து கொண்டுள்ளனர்.
மக்களின் பரவலான எதிர்ப்பின் விளைவாக தமிழக முதலமைச்சர், காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்துள்ளதுடன், அதற்குரிய சட்டமும் நிறைவேற்றப்படும் என்று அறிவித்திருப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் வரவேற்கிறது.
அதே வேளையில், மத்திய அரசின் எல்லா திட்டங்களையும் அதிமுக அரசு தீவிரமாக ஆதரித்து வரும் நிலையில், முதலமைச்சரின் இந்த அறிவிப்பு உறுதிப்படுத்தப்பட்ட அறிவிப்பாக செயலாக்கும் விதத்தில் நடப்பு சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே “காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக” அறிவிக்கும் வகையில் தனிச்சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.
தங்களின் மண்ணையும், வாழ்வாதாரத்தையும் பாதுகாத்து கொள்வதற்காக போராடியவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகள் அனைத்தையும் திரும்பப் பெற வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது.
இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT