Published : 10 Feb 2020 05:21 PM
Last Updated : 10 Feb 2020 05:21 PM

ரஜினிக்கு ஒரு நியாயம் விஜய்க்கு ஒரு நியாயமா?- ஐடி ரெய்டு குறித்து மக்களவையில் தயாநிதி மாறன் கேள்வி

நடிகர் விஜய் வீட்டில் ரெய்டு நடந்த விவகாரம் மக்களவையில் எதிரொலித்தது. திமுக எம்.பி. தயாநிதி மாறன் பேசும்போது, ''ரஜினிக்கு வரிச்சலுகை விஜய்க்கு ரெய்டா?'' எனக் கேள்வி எழுப்பினார்.

நடிகர் ரஜினிகாந்த் மீதான வருமான வரித்துறை வழக்கை சமீபத்தில் வருமான வரித்துறை வாபஸ் வாங்கியது. அப்போது ரஜினி, ''தான் வட்டிக்கு சிலருக்குப் பணம் கொடுத்தேன்’’ என வட்டிக்குக் கடன் கொடுத்த விவகாரத்தில் பதில் அளித்திருந்தார். இந்நிலையில் அவருக்கு வரிச்சலுகை அளிக்கப்பட்ட விவகாரம் சர்ச்சைக்குள்ளானது.

இந்நிலையில் 'பிகில்' பட விவகாரத்தில் தயாரிப்பாளர், விநியோகஸ்தர், பைனான்ஸியர் மற்றும் நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு நடத்தியது. நடிகர் விஜய் நடிக்கும் படப்பிடிப்புத் தளத்திற்கே சென்று அவரை சென்னை அழைத்து வந்தனர். இது எதிர்க்கட்சிகளால் விமர்சிக்கப்பட்டது.

சீமான், காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, முத்தரசன் உள்ளிட்டோர் இதைக் கண்டித்தனர். விஜய் மிரட்டப்படுவதாக சிலர் தெரிவித்தனர். இந்நிலையில் இதுகுறித்து திமுக மட்டுமே கருத்து சொல்லாமல் இருந்தது.

இந்நிலையில் இன்று மக்களவையில் விவாதத்தில் பேசிய திமுக மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன் இதுகுறித்துக் கேள்வி எழுப்பினார். பல்வேறு விஷயங்களைப் பேசிய தயாநிதி மாறன் தனது பேச்சின் ஊடே விஜய் வீட்டில் நடந்த ரெய்டு குறித்து கேள்வி எழுப்பினார். விஜய் குறித்துப் பேசிய அவர் ரஜினியையும் இந்த விவகாரத்தில் குறிப்பிட்டார்.

மக்களவையில் பேசிய தயாநிதிமாறன், “ தமிழகத்தில் அடுத்த ஆண்டு தேர்தல் வருகிறது. ரஜினிக்கு ரூ.1 கோடி வரிச்சலுகை அளிக்கப்படுகிறது. மிகச்சிறப்பு, உங்கள் நடவடிக்கை. ஆனால், நடிகர் விஜய் மீது ரெய்டு, அவர் படப்பிடிப்புத் தளத்திலிருந்து வலுக்கட்டாயமாக அழைத்து வரப்படுகிறார்.

படப்பிடிப்பு நிறுத்தப்படுகிறது. அவர்களுக்கு இதனால் நஷ்டம். இது என்ன நியாயம்” என அவர் மேலும் பேச முயல, சபாநாயகர் இருக்கையில் இருந்த ரமாதேவி குறுக்கிட்டு நிறுத்தினார்.

பின்னர் தயாநிதி மாறன் மற்ற விவகாரங்களைப் பேசினார்.

ரஜினியின் அடுத்த படம் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளிவர உள்ள நிலையில், விஜய் வீட்டில் ரெய்டு நடந்தது குறித்து திமுக வாய் திறக்கவில்லை என்று கூறப்பட்ட நிலையில், தயாநிதி மாறன் பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தவறவிடாதீர்!

ஓடவும் முடியாது; ஒளியவும் முடியாது: சென்னையில் நம்பர் பிளேட்டை படமெடுக்கும் சிசிடிவி கேமராக்கள் அதிகரிப்பு

விஜய் எங்களுக்கு ஒரு பொருட்டே கிடையாது: ஹெச்.ராஜா

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x