Published : 10 Feb 2020 04:07 PM
Last Updated : 10 Feb 2020 04:07 PM
கடலூரில் பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலை தொடங்க அனுமதிக்கக் கூடாது என, காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக பெ.மணியரசன் இன்று (பிப்.10) வெளியிட்ட அறிக்கையில், "தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்திட சட்டம் இயற்றுவோம் என்றும், டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க அனுமதிக்க மாட்டோம் என்றும் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்க நல்ல முடிவு! வல்லுநர்களுடன் கலந்தாய்வு செய்து சட்டம் இயற்ற இருப்பதாக முதல்வர் கூறியிருப்பதும் சரியான முடிவுதான்!
சிறப்பு வேளாண் மண்டலத்திற்கு உரிய தகுதியான வல்லுநர்களுடன் கலந்தாய்வு செய்ய வேண்டுமென்பது மிகவும் தேவையானது. ஹைட்ரோகார்பன் எடுப்பதற்குத் தடை விதித்தும் சட்டம் இயற்ற வேண்டும். ஏற்கெனவே, மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் மீத்தேன் எடுப்பதற்குத் தடை ஆணை பிறப்பித்தார்கள். அதில் சொல்லப்பட்ட காரணங்கள் அனைத்தும், ஹைட்ரோகார்பனைத் தடை செய்வதற்கும் பொருந்தும். எனவே, அந்த ஆணையை அடிப்படையாக வைத்துப் புதிதாக ஹைட்ரோகார்பன் எடுப்பதற்குத் தடைச் சட்டம் போடுமாறு காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் முதல்வரைக் கேட்டுக் கொள்கிறேன்.
காவிரிப் பாசன மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்துவிட்டு, அதன் ஓரத்தில் கடலூர் பகுதியில் 50,000 கோடி ரூபாயில் அமெரிக்க நிறுவனம் பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலை தொடங்க அனுமதிப்பதும், அதுபற்றி பேச அமைச்சர் ஜெயக்குமார் இன்று டெல்லி செல்வதும் முரண்பாடான செயலாக உள்ளது.
இவ்வளவு பெரிய பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலை, பெருமளவு வேளாண் நிலங்களையும், நிலத்தடி நீரையும், சுற்றுச்சூழலையும் பாழ்படுத்தி விடும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்க இந்த ஆலை பயன்படும் என்று ஒரு வாதம் வைக்கப்படுகிறது. இதுபோன்ற நவீனத் தொழிற்சாலைகளை விட பசுமை சார்ந்த தொழில்கள்தான், அதிகமான வேலைவாய்ப்பைக் கொடுக்கின்றன என்பது நடைமுறை உண்மையாக இருக்கிறது. பன்னாட்டு ஆய்வறிக்கைகளும் இதை உறுதிப்படுத்துகின்றன.
அடுத்து, தமிழ்நாட்டில் ஏற்கெனவே உள்ள இந்திய அரசின் பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலைகளிலும், மற்ற தொழிற்சாலைகளிலும் மிகப்பெரும்பான்மையாக வடநாட்டுக்காரர்களைத்தான் வேலையில் சேர்க்கிறார்கள். சொந்த மண்ணிலேயே தமிழர்களைப் புறக்கணிக்கிறார்கள். ஏற்கெனவே உள்ள எண்ணூர், நரிமணம், பனங்குடி ஆகிய இடங்களில் உள்ள பெட்ரோலிய ஆலைகளில் வடமாநிலத்தவரே பெரும்பான்மையாக வேலை பார்க்கிறார்கள். தமிழர்கள் மிகமிகக் குறைந்த எண்ணிக்கையில் உள்ளார்கள்.
எனவே, காவிரிப் பாசன மாவட்டங்களைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து சட்டம் இயற்றுவதுடன், ஹைட்ரோகார்பனையும் தடை செய்து சட்டம் இயற்ற வேண்டும் என்றும், கடலூர் பகுதியில் 50,000 கோடி ரூபாயில் அமெரிக்க நிறுவனம் பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலை தொடங்குவதற்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கக் கூடாது என்றும் காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் தமிழ்நாடு முதல்வரைக் கேட்டுக் கொள்கிறேன்.
காவிரிப் படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்திட வலியுறுத்தியும், ஹைட்ரோகார்பன் திட்டத்தை அனுமதிக்கக் கூடாது என்று கோரியும், மக்கள் திரள் போராட்டம் நடத்தியவர்கள் மீது ஏராளமான வழக்குகள் பிணை மறுப்புப் பிரிவுகளில் போடப்பட்டுள்ளன. பல கட்டங்களில் பலரை சிறையிலும் அடைத்தார்கள். பேராசிரியர் த.ஜெயராமன் உள்ளிட்ட அனைவர் மீதும் போடப்பட்ட இவ்வழக்குகள் அனைத்தையும் இச்சூழ்நிலையில் தமிழ்நாடு முதல்வர் கைவிட ஆணையிட வேண்டும்" என பெ.மணியரசன் வலியுறுத்தியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment