Published : 10 Feb 2020 03:28 PM
Last Updated : 10 Feb 2020 03:28 PM
குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வர இயலாது என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமிக்கு, துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஆலோசனை தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளார்.
புதுச்சேரியில் வரும் 12-ம் தேதி கூடவுள்ள சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் கொண்டு வர புதுச்சேரி அரசு திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், நியமன எம்எல்ஏக்களாக நியமிக்கப்பட்டுள்ள பாஜகவைச் சேர்ந்த சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகியோர் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியைச் சந்தித்து குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக தீர்மானத்தை நிறைவேற்றக் கூடாது என்று வலியுறுத்தி இன்று (பிப்.10) மனு தந்தனர். இது தொடர்பாக ஏற்கெனவே சபாநாயகர் அலுவலகத்திலும் அவர்கள் மனு தந்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து துணைநிலை ஆளுநர் கிரண்பேடி புதுவை முதல்வர் நாராயணசாமிக்கு இன்று மதியம் இது தொடர்பாக கடிதம் அனுப்பியுள்ளார்.
அதன்விவரம்:
"மத்திய அரசால் நியமிக்கப்பட்ட நியமன எம்எல்ஏக்கள் என்னைச் சந்தித்து மனு தந்தனர். அதில் புதுச்சேரியை ஆளும் அரசு வரும் 12-ம் தேதி சட்டப்பேரவையில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற உள்ளதாகத் தெரிவித்தனர். அத்துடன் சபாநாயகரிடம் குடியுரிமைத் திருத்தச் சட்டம் தொடர்பாக விவாதம், தீர்மானத்திற்கு அனுமதிக்கக்கூடாது. இது இந்திய அரசின் யூனியன் பிரதேச சட்டப்படி சட்டப்பேரவை அதிகாரத்துக்கு மேம்பட்டது என்று குறிப்பிட்டனர்.
இவ்விஷயம் தொடர்பாக சில விவரங்களை தங்கள் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமைச் சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அரசாணையாகவும் குடியரசுத் தலைவர் ஒப்புதலுடன் வெளியிடப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் இச்சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்டது புதுச்சேரிக்கும் பொருந்தும். யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் எவ்வித அடிப்படையிலும் இவ்விஷயத்தில் கேள்வி எழுப்ப இயலாது.
புதுச்சேரி சட்டப்பேரவையின் அதிகாரத்தின் அடிப்படையில் இச்சட்டத் திருத்தம் தொடர்பாக விவாதம் செய்வது நாடாளுமன்றத்துக்கு எதிரானது. அத்துடன் உச்ச நீதிமன்றத்தின் கீழ் இவ்விஷயம் உள்ளது.
புதுச்சேரி சட்டப்பேரவை விதிகளின் கீழ் நாட்டின் எப்பகுதியிலும் உள்ள நீதிமன்றத்தில் இருக்கும் விஷயத்தை தீர்மானமாகவோ, விவாதிக்கவோ அனுமதிக்க இயலாது என்று உள்ளது".
இவ்வாறு கிரண்பேடி குறிப்பிட்டுள்ளார்.
தவறவிடாதீர்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT