Published : 10 Feb 2020 01:51 PM
Last Updated : 10 Feb 2020 01:51 PM

தமிழக அரசின் தொழில் கொள்கை என்ன? - கே.எஸ்.அழகிரி கேள்வி

கே.எஸ்.அழகிரி: கோப்புப்படம்

சென்னை

காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள 25 லட்சம் விவசாயத் தொழிலாளர்களைக் காப்பாற்றுவதற்கு தமிழக அரசு என்ன திட்டம் வைத்திருக்கிறது என, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக, கே.எஸ்.அழகிரி இன்று (பிப்.10) வெளியிட்ட அறிக்கையில், "ஹைட்ரோகார்பன், மீத்தேன் திட்டங்களால் விவசாயம் பாதிக்கப்பட்டுவதைத் தடுக்க காவிரி டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்திருப்பதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வரவேற்கிறேன்.

ஏற்கெனவே, காவிரி டெல்டா பகுதிகளில் ஹைட்ரோகார்பன், மீத்தேன் போன்ற திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு ஓஎன்ஜிசி மற்றும் வேதாந்தா போன்ற தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மத்திய பாஜக அரசு அனுமதி அளித்திருக்கிறது.

கடந்த ஜனவரி 16-ம் தேதி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்துகிற வகையில் மத்திய பாஜக அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. இந்த அறிவிப்பை வெளியிடுவதற்கு முன் தமிழக அரசையோ, அதில் சம்பந்தப்பட்டவர்களின் கருத்தையோ கேட்காமல் இந்த அறிவிப்பு வெளிவந்திருக்கிறது. இது கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது. தமிழக மக்களின் உரிமைகளைப் பறிக்கிற செயலாகும்.

மத்திய அரசின் அறிவிப்பின்படி, சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு செய்வது குறித்து அறிவிக்கையில் திருத்தம் கொண்டு வந்து மத்திய அரசு தனியார் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுத்துகிற திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் குறித்த முன் அனுமதியோ, பொதுமக்கள் கலந்தாய்வோ தேவையில்லை என்று அதில் கூறப்பட்டிருந்தது.

அதை எதிர்த்து தமிழக முதல்வர் மத்திய அரசுக்குக் கடிதம் எழுதினார். இதுபோன்ற தமிழகத்தைப் பாதிக்கின்ற மத்திய பாஜக அரசின் முடிவுகளுக்கு எதிராக கடிதம் எழுதுவதோடு தமது கடமை முடிந்துவிட்டதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கருதுகிறார். இதை விட தமிழக மக்களை ஏமாற்றுகிற வேலை வேறு எதுவும் இருக்க முடியாது.

தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் இத்தகைய அறிவிப்பை வெளியிடுகிற துணிவை எப்படிப் பெற்றது? மத்திய பாஜக அரசோடு அனைத்து நிலைகளிலும் நெருக்கமான உறவை வைத்திருக்கிற அதிமுக அரசு, இத்தகைய உதாசீனங்களுக்கு உட்படுவதற்கு என்ன காரணம் ?

இதன் மூலம் தமிழக உரிமைகள் தாரை வார்க்கப்படுவதற்கு அதிமுக அரசுதான் பொறுப்பாகும். இத்தகைய தமிழக விரோதப் போக்கு காரணமாக மக்களிடையே எழுந்துள்ள கடும் சீற்றத்தை திசை திருப்புவதற்காகத்தான் காவிரி டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றப்படும் என்கிற அறிவிப்பை வெளியிட வேண்டிய நிர்பந்தம் தமிழக முதல்வருக்கு ஏற்பட்டிருக்கிறது.

உண்மையிலேயே முதல்வருக்கு இந்த அறிவிப்பில் ஈடுபாடு இருக்குமேயானால், இதுகுறித்து தமிழக சட்டப்பேரவையில் இப்பிரச்சினை குறித்து விவாதித்து தீர்மானம் நிறைவேற்றி, மத்திய அரசுக்கு அனுப்பியிருக்க வேண்டும். ஆனால், இப்பிரச்சினை வரும் போதெல்லாம் தமிழக அரசு அனுமதியின்றி ஹைட்ரோகார்பன் திட்டம் அமல்படுத்தப்பட மாட்டாது என்று பதில் கூறி தட்டிக்கழித்து வந்தது. ஆனால், மத்திய பாஜக அரசு, தமிழக அரசுக்குத் தெரியாமலேயே அறிவிக்கை வெளியிட்டது.

காவிரி டெல்டா பகுதிகளைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கிற அதே நேரத்தில், தமிழக அரசின் தொழிற் கொள்கை என்ன என்பது எவருக்கும் தெரியாத, அறிந்து கொள்ள முடியாத, புரியாத புதிராகவே உள்ளது. தமிழகத்தில் எந்தத் தொழிலைச் செய்யலாம், எந்தத் தொழிலைச் செய்யக் கூடாது என்பதில் தெளிவான பார்வையும் இல்லை, தெளிவான அனுகுமுறையும் இல்லை.

பொதுவாக, தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சிக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கிற தொழில் திட்டங்களை எதிர்ப்பதை எவரும் தவறு என்று சொல்ல முடியாது. ஆனால், எந்தத் தொழில் மக்களைப் பாதிக்காது என்பதை தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும்.

காவிரி டெல்டாவைப் பொறுத்தவரை விவசாயத்தை மட்டுமே சார்ந்திருக்க முடியாது. விவசாயத்தோடு சம்மந்தப்பட்ட தொழில்களை ஊக்கப்படுத்தி, காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள 25 லட்சம் விவசாயத் தொழிலாளர்களை காப்பாற்றுவதற்கு தமிழக அரசு என்ன திட்டம் வைத்திருக்கிறது?

எனவே, காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்த அதேநேரத்தில், ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பொறியியல் பட்டதாரிகள் படித்துவிட்டு, வேலைவாய்ப்பு கோரி நிற்கிறார்கள். அத்தகைய இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கு தமிழக அரசு எத்தகைய தொழில் கொள்கையை கொண்டிருக்கிறது என்பதை உடனடியாக அறிவிக்க வேண்டும்.

தமிழகத்தில் உள்ள தொழில் முனைவோர், வல்லுநர்கள் ஆகியோரை அழைத்து ஆரோக்கியமான தொழில் வளர்ச்சிக்கான சூழலை உருவாக்குகிற வகையில் தமிழக தொழில் கொள்கையை அறிவிக்க உடனடி நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்" என கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.

தவறவிடாதீர்

மீத்தேன் திட்டத்தால் விவசாயம் பாதிக்கப்படுவதை தடுக்க காவிரி டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றப்படும்: தலைவாசலில் சர்வதேச கால்நடை பூங்காவுக்கு அடிக்கல் நாட்டி முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x