Published : 10 Feb 2020 12:08 PM
Last Updated : 10 Feb 2020 12:08 PM
வரும் பிப்.17-ம் தேதி அன்று மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னையில் நடத்தப்படும் என திமுக தலைமை அறிவித்துள்ளது.
திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், பிப்.17-ம் தேதி அன்று மாலை 5 மணி அளவில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில், திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளதாகவும் அனைத்து மாவட்டச் செயலாளர்களும் தவறாது கலந்துகொள்ளும்படியும் தெரிவித்துள்ளார்.
கூட்டத்திற்கான பொருள் குறித்து அந்த அறிவிப்பில் உட்கட்சித் தேர்தல் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. சமீபத்தில் திமுகவில் கோவை, திருச்சி, சேலம், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மாவட்டச் செயலாளர்கள் மாற்றப்பட்டனர். திருச்சியின் செல்வாக்குமிக்க கே.என்.நேரு முதன்மைச் செயலாளர் பதவிக்கு மாற்றப்பட்டார். புதிய பொறுப்பாளர்களாக மகேஷ் அன்பில் பொய்யாமொழியும், வைரமணியும் நியமிக்கப்பட்டனர்.
இதேபோன்று சேலத்தின் வீரபாண்டி ராஜா மாற்றப்பட்டார். ஊரக உள்ளாட்சித் தேர்தல் எதிரொலியாகவும், வரும் சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்திப்பதற்கும் இத்தகைய மாற்றங்கள் எனக் கூறப்பட்டது. ஆயினும், திமுக உட்கட்சித்தேர்தல் விரைவில் வரவுள்ளது. அதற்கான தயாரிப்புப் பணிகளும் நடக்கின்றன.
மாவட்டத் தலைமை, கீழ்மட்ட கட்சிப் பதவிகளில் தேவையற்ற சர்ச்சை, மனக்கசப்பு உருவாகாமல் தடுக்கும் விதமாக தேர்தலை நடத்தும் விதமாக கட்சித் தலைமை வழிகாட்டுதலுக்கான கூட்டமாக இந்தக் கூட்டம் பார்க்கப்படுகிறது. இதுதவிர தற்போதுள்ள அரசியல் நிலைமை, ரஜினி அரசியல் பிரவேசம், பிரசாந்த் கிஷோருடனான ஒப்பந்தம், திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவின் செயல்பாடு, இளைஞர் அணியுடன் மாவட்டச் செயலாளர்களின் ஒருங்கிணைப்பு போன்ற விஷயங்களும் பேசப்படும் எனத் தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT