Published : 10 Feb 2020 10:15 AM
Last Updated : 10 Feb 2020 10:15 AM
சென்னையில் பெண்கள் அதிகம் கூடும் இடங்களில் ரூ.113 கோடி செலவில் 6,500 சிசிடிவி கேமராக்கள் பொருத்த விரைவில் மின்னணு முறையில் ஒப்பந்தப் புள்ளி அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது.
கொலை, கொள்ளை, வழிப்பறி,பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்களைத் தடுக்க சென்னைகாவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக சென்னை முழுவதும் பொது இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
பொது மக்கள், வியாபாரிகள்,தன்னார்வலர்கள், குடியிருப்புவாசிகள் உள்ளிட்டோருடன் இணைந்து போலீஸாரே இந்த பணியை முன்னெடுத்துச் செல்கின்றனர்.
அதன்படி, சென்னை மாநகர் முழுவதும் இதுவரை சுமார் 2 லட்சத்து 75 ஆயிரத்துக்கும் மேற்பட்டகண்காணிப்பு கேமராக்கள் பொதுஇடங்களில் பொருத்தப்பட்டுள் ளன.
இதன் மூலம் குற்றச் செயல்கள் குறைந்ததோடு, குற்றவாளிகளும் உடனுக்குடன் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
அதன்படி சங்கிலிப் பறிப்புகளும் 615 (2017-ம் ஆண்டு),444 (2018), 307 (2019) படிப்படியாக குறைந்துள்ளது. ஆதாயக் கொலைகளும் 50 சதவீதம் வரை குறைந்துள்ளன.
இதேபோல் பெண்கள் மற்றும்குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்களைத் தடுக்கவும்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள் ளது. சிசிடிவி கண்காணிப்பு கேமரா அதிக அளவில் பொருத்தப்பட்டதற்காக தேசிய அளவிலான ‘ஸ்காச் விருது’ மத்திய மனிதவளத் துறை அமைச்சரால் சென்னைபோலீஸாருக்கு வழங்கப்பட்டுள்ளது என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிர்பயா திட்டத்தில் ரூ.113 கோடி
அதன் ஒரு பகுதியாக பெண்கள்மற்றும் குழந்தைகளின் பாதுகாப்புக்காக நிர்பயா திட்டத்தின்கீழ் 113 கோடி ரூபாய் நிதி சென்னை போலீஸாருக்கு ஒதுக்கப்படுகிறது. இந்தத் தொகை மூலம் பெண்கள் அதிகம் கூடும் இடங்களில் 6,500 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த சென்னை காவல் ஆணையர் முடிவு செய்துள்ளார்.
கண்காணிப்பு கேமரா அமைப்பதற்கான இடம் தேர்வில் ஏற்கெனவே 12 காவல் துணை ஆணையர்கள் ஈடுபட்டுள்ளனர். அடுத்த கட்டமாக சிசிடிவி கேமரா பொருத்தும் ஒப்பந்தத்தை, முறைகேடு இன்றி நடத்த போலீஸ் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதற்காக மின்னணு முறையில் ஒப்பந்தப் புள்ளி அறிவிப்பு (இ டெண்டர்) விரைவில் வெளியிடப்பட உள்ளது. இதை மேற்பார்வை செய்ய தொழில் நுட்பம் நன்கு தெரிந்த போலீஸ் அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னையில் தற்போது கூடுதலாக மேலும் 6,500 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளதால் சென்னையில் மேலும் குற்றங்கள் குறையும். பாதுகாப்பு அதிகரிக்கும் என காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித் துள்ளார்.
குற்றவாளிகளை கண்டுபிடிக்க..
மேலும், அவர் கூறும்போது, “குற்றச் சம்பவங்கள், அசம்பாவிதங்கள், வாகன விபத்துகள் மற்றும் வன்முறை சம்பவங்களின்போது உண்மைத் தன்மையை அறிந்துகொள்வதற்கு சிசிடிவி கேமராக்கள் பெரிதும் உதவுகின்றன. மேலும் குற்றங்கள் நடக்காமல்தடுப்பதற்கும், குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கவும் பெரிதும் உதவுகின்றன.
நிர்பயா திட்டத்தின் கீழ் வழங்கப்பட உள்ள நிதியால் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மட்டும் அல்ல அனைத்து வகையான குற்றங்களையும் மேலும் குறைக்க முடியும். சட்டம் ஒழுங்கைசிறப்பாகப் பேண தொழில்நுட்பத்தின் உதவியும் தேவை. அதை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தி வருகிறோம்” என்றார்.
எங்கு அமைக்கப்படும்?
எழும்பூர், சென்ட்ரல், கோயம்பேடு, தாம்பரம், பாரிமுனை, வண்ணாரப்பேட்டை, தியாகராய நகர் உட்பட மேலும் சில இடங்கள் சிசிடிவி கேமராக்கள் பொருத்த முதல் கட்டமாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
மேலும் பெண்கள் கல்வி பயிலும் பள்ளிகள், கல்லூரிகள், தங்கும் விடுதி உள்ள இடங்களிலும், ரயில், பேருந்து நிலைய நுழைவாயில்களிலும் பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT