Published : 10 Feb 2020 07:54 AM
Last Updated : 10 Feb 2020 07:54 AM

‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் ‘பெண் இன்று’ இணைப்பிதழ் சார்பில் சேலத்தில் மகளிர் திருவிழா: பெண்கள் சட்டம் குறித்து விழிப்புணர்வு பெறுவது அவசியம் - சேலம் மத்திய சட்டக் கல்லூரி உதவி பேராசிரியர் கருத்து

சேலம் அம்மாப்பேட்டை ஸ்ரீ சக்தி கைலாஷ் மகளிர் கல்லூரி வளாகத்தில் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் ‘பெண் இன்று’ இணைப்பிதழ் சார்பில் நடைபெற்ற மகளிர் திருவிழாவை, சேலம் மத்திய சட்டக் கல்லூரி உதவி பேராசிரியர் சத்திய பிரியா, சேலம் அரசு கலைக் கல்லூரி ஆங்கில பேராசிரியர் முனைவர் வி.அன்பரசி ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.

சேலம்

‘ஒவ்வொரு பெண்ணும் சட்டம் சார்ந்த அறிவு பெறுவது காலத்தின் கட்டாயம். எனவே, பெண்கள் சட்டம் குறித்த விழிப்புணர்வு பெறுவது அவசியம்,’ என சேலத்தில் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் ‘பெண் இன்று’ இணைப்பிதழ் சார்பில், சேலம் அம்மாப் பேட்டை  சக்தி கைலாஷ் மகளிர் கல்லூரி வளாகத்தில் நேற்று நடைபெற்ற மகளிர் திருவிழாவில் சேலம் மத்திய சட்டக் கல்லூரி உதவி பேராசிரியர் சத்தியபிரியா பேசினார்.

அவர் நிகழ்ச்சியில் பேசியதாவது:

சமுதாயத்தில் பெண்கள் அன்றாடம் பல்வேறு பிரச்சினை களை சந்தித்து வருகின்றனர். குடும்பம், வெளியிடம், பணி புரியும் இடங்கள் என ஒவ்வொரு இடத்திலும், ஒவ்வொரு வயதுக் கான பிரச்சினைகளை பெண்கள் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்று தெரிவிக்கக் கூடாது என்ற அளவுக்கு சட்டம் உள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் 10 மில்லியன் பெண் சிசு கொலை நடந்தேறியுள்ளது. இந்த எண்ணிக்கை தற்போது குறைந்தாலும், அங்கொன்றும், இங்கொன்றுமாய் பெண் சிசு கொலை நடக்கத்தான் செய்கிறது. இதுபோன்ற சூழலில், ஒவ்வொரு பெண்ணும் சட்டம் சார்ந்த அறிவு பெறுவது காலத்தின் கட்டாயம். எனவே, பெண்கள் சட்டம் குறித்த விழிப்புணர்வு பெறுவது அவசியம்.

குழந்தை தொழிலாளர், குழந்தை திருமணம், ஈவ்-டீசிங், பாலியல் வன்முறை, வரதட்சணை கொடுமை என பெண்கள் அதிகப்படியான இடர்பாடுகளுக்கு உள்ளாகி அவதியுற்று வருகின்றனர். பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர் களுக்கு தண்டனையும், அபராதமும் அளிக்க சட்டம் தயாராகவே இருக்கிறது. எனவே, பெண்கள் தொடர்பான பிரச்சினைகளை கலந்தாலோசனை செய்து, அதற்கான சட்டங்கள் குறித்து அறிந்து, சட்டத்தின் மூலம் தீர்வு பெறலாம். குற்றங்கள் அதிகரிக்க அதிகரிக்க, சட்டங்களும் அதிகப் படுத்தப்படுகிறது. பெண்கள் சட்டம் குறித்த விழிப்புணர்வு மூலம் சட்டப் பாதுகாப்பை பெற்று, தன்னம்பிக்கையுடன் வாழ்க்கை யில் வெற்றி நடை போடலாம்.

இவ்வாறு அவர் பேசினார்.

சேலம் அரசு கலைக் கல்லூரி ஆங்கிலப் பேராசிரியர் முனைவர் வி.அன்பரசி பேசும்போது, ‘‘சுய பலம், சுய சக்தி, சுய நம்பிக்கை மூலம் பெண்ணினம் இயங்கிக் கொண்டிருக்கிறது. ‘பெண் இன்று’ இணைப்பிதழில் ‘உலகம் இவள் வசம்’ என்றுள்ளது. இன்று மட்டுமல்ல, என்றுமே உலகம் பெண்களின் வசம்தான். பெண்கள் எண்ணங்களை பலமாக்கி, செயலுக்கு வடிவம் கொடுப்பதன் மூலம் எளிதாய் வெற்றியை தன் வசமாக்கிக் கொள்ளலாம். ‘கற்பு’ என்பது பெண்கள் உடல் சார்ந்த விஷயமல்ல. பெண்கள் மன உறுதி குலையாமல், தன்னம்பிக்கையுடன் இருப்பதே கற்பு என்பதை உணர வேண்டும்.

ஒரு குடும்பத்தில் மன உறுதி கொண்ட பெண் இருந்தால், அக்குடும்பத்தினர் பாக்கியசாலிகள். ஏனெனில், மன உறுதி கொண்ட பெண்கள் தன்னலம் பாரா தியாகத்துடன் குடும்பத்தை வழிநடத்தி செல்லக்கூடியவர்கள். மன நலம் நன்றாக இருக்க வேண்டும் என்றால், பெண்கள் உடல் நலத்தை ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ள வேண்டும். உடலும், மனமும் சிறந்து விளங்கும் போது, இல்வாழ்க்கை சிறப்புறும். நேர்மறையான சிந்தனைகளால் சுய சிந்தனை பெருகி, சமுதாயத்தில் பெண்கள் தலைநிமிர்ந்து வெற்றி நடை போடலாம்’’ என்றார்.

விழாவில், திரளாக வந்திருந்த வாசகிகளை உற்சாகப்படுத்தும் விதமாக சேலம் துர்கா நடனக் குழுவினரின் வண்ணமயமான பாரம்பரியக் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. மதிய உணவு இடை வேளைக்கு பிறகு, வாசகிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, உடனுக்குடன் ஏராளமான பரிசுகள் வழங்கப்பட்டன.

மகளிர் திருவிழாவை ‘இந்து தமிழ் திசை’ நாளிதழுடன் லலிதா ஜூவல்லரி, பொன்வண்டு டிடர்ஜென்ட், பிரஸ்டீஜ் குக்வேர், பூமர் லெக்கின்ஸ், டிஸ்கவுண்ட் சோப், சாஸ்தா வெட் கிரைண்டர்ஸ், அம்மு ஸ்பெஷல் இட்லி தோசை மாவு, எஸ்கேஎம் பூர்ணா ஆயில், விஎஸ்சி குரூப் ஆப் கம்பெனி, ரத்தோர் நைட்டீஸ், ஏவிடி டீ, அமைப்பு சாரா தொழிலாளர்கள் கூட்டுறவு சங்கம்,  சக்தி கைலாஷ் மகளிர் கல்லூரி, பாலிமர் சேனல் ஆகியவை இணைந்து வழங்கின.

நிகழ்ச்சிகளை சின்னத் திரை நிகழ்ச்சி தொகுப்பாளினி தேவி கிருபா தொகுத்து வழங்கினார்.

மகளிர் திருவிழா நிகழ்ச்சி வரும் மார்ச் 8-ம் தேதி (ஞாயிறு) காலை 10 மணிக்கு சேலம் பாலிமர் உள்ளூர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x