Published : 09 Feb 2020 02:57 PM
Last Updated : 09 Feb 2020 02:57 PM

எங்களை விமர்சிப்பவர்களையும் சேர்த்து அனைவரையும் பாதுகாக்கத்தான் கையெழுத்து இயக்கம்: ஸ்டாலின் திட்டவட்டம்

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடத்தி வரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “மக்கள் இயக்கமாக மாறிய மாபெரும் கையெழுத்து இயக்கம்!” என்ற தலைப்பில் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:

நாம் எவ்வளவு சரியான பாதையில், முறையாகவும் எச்சரிக்கையாகவும் அளந்து அடியெடுத்து வைத்துச் செல்கிறோம் என்பதை, அரசியல் எதிரிகளின் அலறலில் இருந்தே அறிந்து கொள்ள முடியும். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் மத்திய அரசின் குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசியக் குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகைப் பதிவேடு இவற்றிற்கு எதிராக, தமிழக மக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்துவது என ஜனவரி 24ஆம் நாள் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், பிப்ரவரி 2ஆம் நாள் தொடங்கி பிப்ரவரி 8ஆம் நாள் வரை நாள்தோறும் நடத்தப்பட்ட கையெழுத்து இயக்கம் வெற்றிகரமாக நிறைவேறியிருக்கிறது.

மக்களின் பெரும் ஆர்வத்துடனும் தன்னிச்சையான பங்கேற்புடனும் கையெழுத்து இயக்கம் களிப்புறத்தக்க வெற்றி பெற்றிருப்பதை, நம்மைவிட நமது அரசியல் எதிரிகள் நன்றாக உணர்ந்து விட்டார்கள். மாநில அடிமை அரசில், நேரடி பா.ஜ.க. பிரதிநிதி போலவே செயல்படும் அமைச்சர் ஒருவர், “தி.மு.க. நடத்தும் கையெழுத்து இயக்கத்தை மத்திய அரசு ஏன் தடை செய்யாமல் இருக்கிறது?” என்று வயிற்றெரிச்சலில் பேசியிருக்கிறார். மத்திய பா.ஜ.க அரசில், முன்னாள் மாண்புமிகுவாக இருந்து மக்களிடம் தோல்வி அடைந்த மூத்த தலைவர் ஒருவர், “தி.மு.க. கட்டாயக் கையெழுத்து இயக்கம் நடத்துகிறது” என்று பேசியிருக்கிறார்.

கட்டாயமாகக் கையெழுத்து வாங்குவது, மரியாதை நிமித்தமாக சந்திக்க வந்த ஓய்வு பெற்ற நீதிபதிக்கு கட்டாயமாக பா.ஜ.க. உறுப்பினர் அட்டையைக் கொடுப்பது, மிஸ்டுகால்களை நம்பியே உறுப்பினர் எண்ணிக்கை பற்றி உறக்கத்தில் மனக்கணக்கு போடுவது என செயல்படுகிறவர்களுக்கு, தி.மு.கழகமும் தோழமைக் கட்சிகளும் மேற்கொண்ட கையெழுத்து இயக்கமும், அதற்கு மக்கள் காட்டிய வரவேற்பும் ஆர்வமும் அதிர்ச்சியை ஏற்படுத்தி, இப்படித்தான் புலம்பி ஒப்பாரி வைத்திடச் செய்திடும்.

பன்மைத் தன்மையும், மதச்சார்பின்மையும் ஊறிப்போன இந்தியாவைப் பாதுகாக்கும் அரசியல் சாசனத்திற்கு எதிரான குடியுரிமைத் திருத்தச் சட்டம் உள்ளிட்ட ஆபத்துகளை மக்களிடம் விளக்கி, அவர்களின் சம்மதத்துடனும் முழு மனதுடனும் கையெழுத்துப் பெற வேண்டும் என்பதை கழக நிர்வாகிகளுக்கு விளக்கி, அதுதொடர்பாக அந்தந்த மாவட்ட-ஒன்றிய-பகுதி நிர்வாகிகள் தோழமைக்கட்சியினருடன் ஆலோசனை நடத்திய பிறகே, பிப்ரவரி 2ஆம் நாள் தமிழ்நாடு முழுவதும் கையெழுத்து இயக்கம் தொடங்கியது.

கொளத்தூர் தொகுதியில் கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கி வைக்கும் வாய்ப்பைப் பெற்ற நான், அதுகுறித்து உரையாற்றிய போது, மத்திய நிதியமைச்சர் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் ஏழை, எளிய மக்களுக்கு, தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மைச் சமுதாயத்தைச் சேர்ந்த மக்களின் பொருளாதார முன்னேற்றம் - வேலைவாய்ப்பு குறித்து எதுவும் இல்லை என்பதை விளக்கி, இது கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் செல்வந்தர்களுக்குமான பட்ஜெட் என்பதை எடுத்துரைத்து, நாட்டின் பொருளாதார வீழ்ச்சி, வளர்ச்சிக்கான கூறுகளின் தேக்க நிலைமை,வேலையின்மை ஆகிய பிரச்சினைகளிலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காகவே கொண்டு வரப்பட்டுள்ள கொடுமைதான், குடியுரிமைத் திருத்தச் சட்டம் என்பதை எடுத்துரைத்தேன்.

சிறுபான்மைச் சமுதாயத்தைச் சேர்ந்த இஸ்லாமிய மக்கள், இலங்கையில் இருந்து அகதிகளாக வந்து தமிழகத்தில் தங்கியிருக்கும் தமிழ் மக்கள் ஆகியோருக்கு ஆபத்து விளைவிக்கும் இந்தக் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை தி.மு.கவும் தோழமைக் கட்சியினரும்-பல மாநிலங்களைச் சேர்ந்த கட்சிகளும் எதிர்த்து வாக்களித்த நிலையில், தமிழகத்தை ஆளுகின்ற அடிமை அ.தி.மு.க.வின் மாநிலங்களவை உறுப்பினர்கள் 11 பேரும், அதன் கூட்டணியான பா.ம..கவின் ஓர் உறுப்பினருமாக, 12 பேரின் ஆதரவினால்தான் இந்தக் கொடூர சட்டம் நிறைவேறியது என்பதையும், இல்லையென்றால் இப்படியொரு ஆபத்தான நிலை சிறுபான்மை முஸ்லிம்களுக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் ஏற்பட்டிருக்காது, நாடு முழுவதும் பதற்றமும் போராட்டமும் பரவியிருக்காது எனவும் எடுத்துக்காட்டினேன்.

சி.ஏ.ஏ.வை நாடாளுமன்றத்தில் ஆதரித்த பா.ஜ.க.வின் தோழமைக் கட்சிகள்கூட தற்போது உணர்ந்து அதற்கு எதிராகக் குரல் கொடுப்பதையும், பல மாநிலங்களின் சட்டப் பேரவைகளில், இந்த சட்டத்திற்கு எதிராகத் தீர்மானமே நிறைவேற்றப்பட்டிருப்பதையும், குறிப்பாக அண்டை மாநிலமான கேரளாவில் துணிச்சலாகத் தீர்மானம் நிறைவேற்றியிருக்கும் முதல்வர் பினராயி விஜயனின் உறுதிப்பாட்டையும் விளக்கி, அதுபோல தமிழக சட்டமன்றத்திலும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என நாம் வலியுறுத்தியும், அடிமை அ.தி.மு.க. அரசு அலட்சியப்படுத்தியதால்தான், சிஏஏவுக்கு எதிராக மக்களிடம் ஒரு கோடி கையெழுத்தைப் பெறும் இயக்கம் நடைபெறுகிறது என்பதையும் மக்களிடம் சொன்னேன். எதற்காக இந்த இயக்கம் என்பதை விளக்கிய பிறகே மக்களிடம் கையெழுத்து பெறப்பட்டது. இந்துக்கள்-முஸ்லிம்கள்-கிறிஸ்தவர்கள் எனப் பலரும் மத எல்லைகளைக் கடந்து, இந்தியாவைக் காத்திட வேண்டும் என்ற உண்மையான தேசப்பற்றுடன் கையெழுத்திட்டு ஆதரவு தந்தனர்.

தோழமைக் கட்சித் தலைவர்களும்-கழக நிர்வாகிகளும் தமிழகம் முழுவதும் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்து, அதனை ஒவ்வொரு நாளும் தீவிரப்படுத்தினர். பிப்ரவரி 4ஆம் நாள் காலையில் வழக்கம்போல முரசொலி அலுவலகம் செல்லும் வழியில், தேனாம்பேட்டை எல்டாம்ஸ் சாலைப் பகுதியில் சிஏஏவுக்கு எதிராக கையெழுத்துப் பெறும் பணியில் கழகத் தோழர்கள் ஈடுபட்டிருப்பதைப் பார்த்து, காரை நிறுத்தி இறங்கிச் சென்று அவர்களுடன் அந்த இயக்கத்தில் பங்கேற்றேன். பொதுமக்களிடம் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் பாதிப்புகளை எடுத்துச் சொல்லி நானே நேரில் பலரிடமும் கையெழுத்து வாங்கினேன். நாம் எதிர்பார்த்தது போலவே கையெழுத்து இயக்கம், மக்களின் இயக்கமாக மாறத் தொடங்கியது.

மக்கள் ஆர்வத்துடன் கையெழுத்திட வருகிற நிலையில், முந்தைய நாட்களைவிட கூடுதலான முனைப்புடன் செயல்பட்டு, ஒரு கோடி கையெழுத்து என்ற இலக்கையும் கடந்து, பெரும் எண்ணிக்கையில் கையெழுத்துகள் பதிவாக வேண்டும் என்பதை வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டேன். மதவாத பா.ஜ.க.வின் தேச விரோத செயல்பாட்டையும், ஈழத்தமிழர்களுக்கும் சிறுபான்மை முஸ்லிம்களுக்கும் பச்சைத்துரோகம் செய்த அ.தி.மு.க அரசையும் ஒவ்வொரு கையெழுத்திலும் மக்களே அம்பலப்படுத்துவதைக் காண முடிந்தது.

பிப்ரவரி 5ஆம் நாள் காலை, காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக வின் நகர ஆதிதிராவிடர் நலக்குழு துணை அமைப்பாளரும், ஜெயராமன் - விமலா தம்பதியரின் மகனுமான ஜெயராஜூக்கும், கருணாகரன் - சகிலா அவர்களின் மகள் தமிழரசிக்கும் எனது இல்லத்திலேயே சுயமரியாதை திருமணத்தை நடத்தி வைத்தபோது, மணமக்களிடம் சி.ஏ.ஏ.வுக்கு எதிரான கையெழுத்து இயக்கம் பற்றி எடுத்துரைத்ததும், மாலையும் கழுத்துமாக இருந்த மணமக்களும் அவர்தம் குடும்பத்தினரும் கையெழுத்திட்டது மறக்கவொண்ணா நிகழ்ச்சி .

குடியுரிமைத் திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் முதலில் கிளர்ந்தெழுந்தவர்கள் மாணவர்களும் இளைஞர்களும்தான். அவர்களின் உணர்வலை சற்றும் தணியவுமில்லை தாழவுமில்லை என்பதற்கு எடுத்துக்காட்டாக, சென்னையைச் சேர்ந்த அறிவு என்ற ஆர்வம் மிகுந்த இளைஞர், தனது ‘தெருக்குரல்’ எனும் வாரம் ஒருநாள் நடைபெறும் நிகழ்வு மூலம் ‘சண்டை செய்வோம்’ என்ற தனிமனித “ ராப்” பாடல் மூலமாக, தன்னுடைய எதிர்ப்பை மக்கள் கூடும் இடங்களில் திரளாகப் பதிவு செய்து இருந்தார். செம்மொழிப் பூங்கா அருகே அவர் பாடியதை இணையதளம் வழியாகப் பார்த்து, அவரை அறிவாலயத்திற்கு அழைத்துப் பாராட்டி, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் ஓராண்டு “முரசொலி “ மலரை நினைவுப் பரிசாக வழங்கினேன். அப்போது, இளைஞர் அறிவு, சி.ஏ.ஏ.வுக்கு எதிரான தனது கையொப்பத்தைப் பதிவு செய்தார்.

அதே நாளில், நந்தனம் கல்லூரி மாணவர்கள் பேரார்வத்துடன் திரளாகப் பங்கேற்றுக் கையெழுத்திட்டது மனமகிழ்ச்சி நிறைந்த ஆச்சரியத்தை அளித்தது. அவர்களிடம், குடியுரிமைத் திருத்தச் சட்டம் ரத்து செய்யப்பட வேண்டியதன் அவசியத்தை விளக்க நினைத்த போது, “இதன் ஆபத்துகளை உணர்ந்து தான் நாங்களாகவே கையெழுத்திட முன்வந்துள்ளோம்” என்ற மாணவர்களின் தெளிவும் திடமும் மகிழ்வைத் தந்தது. அதேநேரத்தில், அ.தி.மு.க அரசு ஈழத்தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்குவது என்று பொய் வாக்குறுதி தந்து ஏமாற்றுவதையும், அதில் மயங்கி பிரபலமானவர்களும் ஏதோ காரணத்தினால் ஊடகங்களிடம் தெரிவிப்பதையும் அம்பலப்படுத்தும் வகையில், மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த ராய் அவர்கள் நாடாளுமன்றத்திலேயே ‘அரசியல் சாசனத்தின் பிரிவு 9ன் படி, யாருக்கும் இரட்டைக் குடியுரிமை வழங்க இயலாது" என்று தெரிவித்திருப்பதை சுட்டிக்காட்டி, “ஒன்றரை லட்சம் தமிழர் வாழ்க்கைப் பாதையை ஒற்றை வரியில் முடித்த இந்த மத்திய அரசு யாருக்கானது?” எனக் கேள்வி எழுப்பி இருந்தேன்.

நாளுக்கு நாள் மக்களின் ஆதரவுடன் வளர்ந்த கையெழுத்து இயக்கத்தின் ஐந்தாம் நாளன்று (பிப்ரவரி–6) காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்ட கழகச் செயலாளர் தா.மோ.அன்பரசன் தலைமையில் கோவளம் பேருந்து நிலையம் அருகே குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகத் திரளான மக்கள் பங்கேற்புடன் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. அப்போது சிஏஏவுக்கு ஆதரவாகவும், மாணவர்களைப் போராட்டத்திற்கு தூண்டிவிடுவதாக எதிர்க்கட்சிகள் மீது குற்றம்சாட்டியும் திரு.ரஜினிகாந்த் அவர்கள் பேட்டி அளித்தது பற்றி செய்தியாளர்கள் என்னிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு, “மாணவர்கள் ஆராய்ந்து,சிந்தித்து ஆய்ந்து போராட வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். முதலில் அவர் இந்த சட்டத்திருத்தத்தினால் என்ன மாதிரியான பாதிப்புகள் ஏற்படும் என ஆய்ந்து, ஆராய்ந்து, சிந்தித்து தெளிவு பெற வேண்டும்.. அப்படி இந்த சட்டத்திருத்தத்தினால் என்ன மாதிரியான பாதிப்புகள் ஏற்படும் என்பதை அவர் உணர்ந்தால், ஒருவேளை அவர் கூறிய கருத்தை மாற்றிக் கொள்வார் என நம்புகிறேன்” என்று பதிலளித்தேன். மாணவர்களை அரசியல்கட்சிகள் தூண்டுவதாக திசைதிருப்புவது இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போராட்ட காலத்திலிருந்தே வழக்கம்தான் என்பதையும், அப்போது நடந்ததைப் போல இப்போதும் மாணவர்களின் தெளிவான-உறுதியான போராட்டமே வெல்லும் என்றும் ஏற்கனவே பதிவிட்டிருந்தேன்.

கழக நிர்வாகி இல்லத் திருமணவிழாவில் பங்கேற்பதற்காக பிப்ரவரி 7ஆம் நாளன்று சென்னை ராயபுரம் சென்ற போது, அரசியலுக்கு அப்பாற்பட்ட பொதுமக்கள் பங்கேற்புடன் சிஏஏவுக்கு எதிராக நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தில் பங்கேற்றேன். அங்கும் மக்கள் அதிக ஆர்வத்துடன் கையெழுத்திட்டனர். கையெழுத்து இயக்கத்தின் இறுதிநாளான பிப்ரவரி 8ஆம் நாளன்று, திருவள்ளூர் காமராஜர் சாலையில் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக மக்களிடம் கையெழுத்துப் பெறும் பணியில் ஈடுபட்டபோது, “ஒரு கோடி பேரிடம் கையெழுத்துப் பெறவேண்டும் என்று முடிவு செய்து இந்தப் பணியைத் தொடங்கினோம். மக்களே முன்வந்து ஆதரவு தந்ததால் தற்போதைய கணக்கின்படி 2 கோடி கையெழுத்தைத் தாண்டிவிட்டது.” என மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டேன்.

நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் அவர்கள், 1983ம் ஆண்டு இலங்கைத் தமிழர்களுக்காக தமிழகம் முழுவதும் கையெழுத்து இயக்கம் நடத்தி, ஒரு கோடிக் கையெழுத்துகளைப் பெற்று ஐ.நா. மன்றத்திற்கே அனுப்பி வைத்து, உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த வரலாற்று நிகழ்வை நினைவு கூர்ந்தேன்.

அதேநாள் மாலையில், சென்னை புரசைவாக்கத்தில் சிஏஏவுக்கு எதிராக கலைவடிவத்தில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்திற்கான பிரச்சார நிகழ்வில் கானா பாலா மற்றும் ராப் புகழ் அறிவு ஆகியோருடன் பங்கேற்றேன். சி.ஏ.ஏ, என்.ஆர்.சி, என்.பி.ஆர் இவையெல்லாம் அனைத்துத் தரப்பினருக்குமே எதிரானவை என்பதை விளக்கினேன். இஸ்லாமிய அமைப்பினர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து இந்தச் சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். அப்போது ‘நான் பிறந்த இடம், தேதி அதற்கான சான்றிதழ் இருக்கிறதா என்று எனக்கு தெரியவில்லை. எனக்கே ஆபத்து வரும் போல் இருக்கிறது’ என்று அவர் சொல்லி இருக்கிறார்.

மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்தாலும் அதன் தொடர் நடவடிக்கைகளாலும் முதலமைச்சர் பதவியில் எப்படியாவது நீடிக்க வேண்டும் என்பதற்காக எதையும் அடமானம் வைக்கும் எடப்பாடிக்கே ஆபத்து வரும் நிலை உள்ளது. அவருக்கு மட்டுமல்ல, திடீரென பேட்டி கொடுக்க கூடியவர்களுக்கும் கூட அவர்களின் பெற்றோர் பிறந்த இடமும், தேதியும் சரியாகத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எனவே, நம்மை விமர்சிப்பவர்களையும் சேர்த்து அனைவரையும் பாதுகாக்கத்தான் இந்தக் கையெழுத்து இயக்கத்தை நடத்தினோம். 2 கோடியைத் தாண்டியுள்ள கையெழுத்துகளை இந்தியக் குடியரசுத் தலைவர் அவர்களிடம் அளிக்க இருக்கிறோம். அதன்பிறகும், மத்திய அரசு இதுபற்றிப் பரிசீலிக்கத் தவறினால், அடுத்த கட்டப் போராட்டத்தை முன்னெடுப்போம்.

பிப்ரவரி 14ந் தேதி கூடுகின்ற தமிழ் நாடு அரசின் நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடரிலாவது, சிஏஏவுக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றி, அதிமுக அரசு தனது பாவங்களுக்குக் கழுவாய் தேடிக் கொள்ள வேண்டும் என்பதையும் மக்களிடம் எடுத்துரைத்திருக்கிறேன்.

தமிழ்நாட்டில் எக்காரணம் கொண்டும் தேசிய மக்கள் தொகைப் பதிவேட்டை அ.தி.மு.க அரசு அனுமதிக்கக் கூடாது. பா.ஜ.க அரசின் நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக அடிமை அ.தி.மு.க அரசு இதனை செயல்படுத்த நினைத்தால் மக்களின் கடும் எதிர்ப்புக்கு ஆளாக நேரிடும் என்பதை இப்போதே எச்சரிக்கையுடன் தெரிவிக்கிறேன்.

தோழமைக் கட்சித் தலைவர்களும், கழக நிர்வாகிகளும்-கழகத்தின் நாடாளுமன்ற-சட்டமன்ற உறுப்பினர்களும் அயராமல் உழைத்திட்ட காரணத்தால்தான், கையெழுத்து இயக்கம் மக்கள் இயக்கமாக மாறி, புதிய வரலாற்றைப் படைத்திடும் வண்ணம் 2 கோடிக்கும் அதிகமான கையொப்பங்கள் பதிவாகியுள்ளன. மனமுவந்து முன்வந்து கையெழுத்திட்ட அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

தேர்தல் களமாக இருந்தாலும், கையெழுத்து இயக்கமாக இருந்தாலும், தமிழக மக்கள் தி.மு.கழகத்திற்கு அளித்துவரும் பேராதரவு கண்டு, மத்திய-மாநில ஆட்சியாளர்கள் நடுங்குகின்ற காரணத்தால் தான், இதனைத் தடை செய்ய வேண்டும் என்றும், கட்டாயக் கையெழுத்து என்றும், தங்கள் நிலையைவிட்டு பலபடிகள் கீழே இறங்கி விமர்சனம் செய்கிறார்கள்.

மக்களுக்கு எதிரான-நாட்டை மதரீதியாகத் துண்டாடும் சி.ஏ.ஏ உள்ளிட்டவற்றை எதிர்த்து கழகத்தின் போராட்டம் தொடரும். மக்களின் ஆதரவுடன் - மக்களுக்கு எதிரான எதையும் முறியடித்து - மக்களின் நலன் காப்பதற்குத் தொடர்ந்து பாடுபடுவோம்!

என்று ஸ்டாலின் தன் மடலில் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x