Published : 19 Aug 2015 09:39 AM
Last Updated : 19 Aug 2015 09:39 AM

மகா துவார வாசலில் மயன் குறியீடு: கங்கைகொண்ட சோழபுரம் ஆலயத்தில் கண்டுபிடிப்பு

கங்கைகொண்ட சோழபுரத்தில் ஸ்ரீபிரகதீஸ்வரர் ஆலயம் எழுப்பப்பட்டதற்கு ஆதாரமான மயன் குறியீடு அதன் மகாதுவார வாசலில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தஞ்சை தலைநகரை கங்கைகொண்ட சோழபுரத்துக்கு மாற்றிய ராஜேந்திர சோழன், தஞ்சையைப் போலவே அதேசமயம் தமிழ் கட்டிடக்கலை மரபுப்படி கங்கை கொண்ட சோழபுரத்திலும் பிரகதீஸ்வரர் ஆலயத்தை எழுப்பினான். வழக்கமாக கோயில்களில் நான்கு பக்க விமானம்தான் இருக்கும் ஆனால், இந்தக் கோயிலில் தமிழ் மரபுப்படி எட்டு பக்கங்களைக் கொண்ட விமானத்தை அமைத்தான் ராஜேந்திரன்.

கோயிலின் கிழக்கு பக்கம் உள்ள மகா துவாரத்தில் (பெரிய நுழைவு வாயில்) இரண்டு பக்கமும் இரண்டு தூண்கள் மட்டுமே நிற்கின்றன. முன்பு இதன் வழியாகத்தான் கோயிலின் உட்பகுதிக்கு செல்ல வேண்டும். தற்போது வழி அடைக்கப்பட்டுள்ள இந்த வாயிலின் படியில்தான் மயன் குறியீடு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ‘தி இந்து’விடம் பேசிய வரலாற்று ஆர்வலரும் கங்கைகொண்ட சோழபுரம் மேம்பாட்டுக் குழுமத்தின் தலைவருமான பொறியாளர் கோமகன், “துவாரகாபுரியை வடிவமைத்துக் கொடுத்த மயன்தான் நமக்கு ஆதி தச்சர். மயன் சாஸ்திரம்தான் நாம் பயன்படுத்தும் கட்டுமான சாஸ்திரம்.

பொதுவாக நாங்கள் ஒரு கட்டுமானத்தை கட்ட ஆரம்பிப்பதற்கு முன்பு ஆதாரக் குறியீடு ஒன்றை ஏற்படுத்துவோம். ‘பெஞ்ச் மார்க்’ என்று சொல்லப்படும் அதுதான் மயன் குறியீடு. அந்த குறியீடுதான் ஒட்டுமொத்தக் கட்டுமானத்துக்கும் ஆதார அளவீடாக இருக்கும்.

கங்கை கொண்ட சோழபுரம் கோயிலின் வாசல் படியில் குறிக்கப்பட்டுள்ள மயன் குறியீட்டை ஆதாரமாகக் கொண்டுதான் ஒட்டு மொத்த கோயிலும் வடிவமைக்கப் பட்டுள்ளது. மகா துவார படியானது இரண்டு கல் துண்டுகளால் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் இரண்டு முனைகளிலும் மயன் குறியீடு உள்ளது. இந்தக் குறியீடுகள் இரண்டுக்கும் மையத்தை குறித்தால், கோயில் வாசலிலிருந்து உள்ளே உள்ள கர்ப்பகிரகம் வரை ஒரே நேர்கோட்டில் வருகிறது.

இன்னொரு ஆச்சரியம் என்னவென்றால் மயன் குறியீட்டின் மையத்தில் திசைமானியை வைத்தால், கோயில் மிகச் சரியாக கிழக்கு மேற்கில் அமைந்திருப்பதை துல்லியமாக காட்டுகிறது. கர்ப்பகிரகத்தில் மின்காந்த அலைகள் சமமாக இருக்க வேண்டும்.

இந்தக் கோயிலில் அதை மிகச் சரியாக அமைத்துள்ளனர். நாம் இப்போது பயன்படுத்தும் அளவீடுகள் மற்றும் காந்தப்புல கருவிகளைப் போல ஏதோ ஒரு கருவியையோ தொழில்நுட்பத்தையோ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பயன்படுத்தி உள்ளனர்’’ என்று ஆச்சரியத்தை வெளிப்படுத்தினார்.

அவர் மேலும் கூறுகையில், பாஜக எம்.பி. தருண் விஜய் இங்கு வந்திருந்தபோது மயன் குறியீடு பற்றிச் சொன்னேன். பார்த்து பிரம்மித்த அவர், எவ்வளவு முக்கியமான விஷயம் இது. இதை கவனிக்காமல் விட்டிருக்கிறோமே.

இப்படியே அழிந்து விடாமல் இருக்க இந்த இடத்தைத் தகடு அடித்துப் பாதுகாத்து வையுங்கள்’ என்று சொன்னார். நம் முன்னோர்கள் இன்னும் என்னென்ன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி இருக்கிறார்கள் என்பதையும் நாம் முழுமையாக அறிந்துகொள்ள வேண்டிய தருணம் இது’’ என்றும் சொன்னார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x