Published : 04 Aug 2015 09:35 PM
Last Updated : 04 Aug 2015 09:35 PM
குடிநீருக்காக வனப்பகுதியை விட்டு வெளியேறி ஆபத்தில் சிக்கும் வன விலங்குகளை காப்பாற்றும் விதமாக வனப் பகுதியிலேயே சோலார் மின்சாரம் மூலம் ஆழ்குழாய் கிணறு அமைத்து அவற்றின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்துவருகின்றனர் விழுப்புரம் மாவட்ட வனத்துறையினர்.
கடந்த சில வருடங்களாக கோடையின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையை ஒட்டியுள்ள எடைக்கல், நைனார்பாளையம், சின்னசேலம் உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் 1500 ஏக்கர் பரப்பளவில் உள்ள காப்புக் காட்டில் வசிக்கும் 100-க்கும் மேற்பட்ட மான்கள், மயில்கள், முயல்கள் உள்ளிட்ட வன விலங்குகள் குடிநீரின்றித் தவித்து வந்தன.
இந்த நிலையில் வன விலங்குகளுக்கான குடிநீர் குளம் வறண்டுவிட்ட நிலையில் விலங்குகள் குடிநீரைத் தேடி குடியிருப்புப் பகுதிகளுக்கும், வயல்வெளிப் பகுதிகளுக்குச் செல்லும் போது, மான், மயில் உள்ளிட்டவை விவசாயக் கிணறுகளில் தவறி விழுந்து பலியாகும் சம்பவங்களும் நிகழ்கின்றன.
கடந்த 3 ஆண்டுகளில் 25-க்கும் மேற்பட்ட மான்கள் உயிரிழந்துள்ளன. மேலும் சில மான்கள் நாய்க் கடிக்கு ஆளாகியும், வாகனங்களில் சிக்கியும், வேட்டைக்காரர்களிடம் சிக்கியும் உயிரிழந்துள்ளது.
பாண்டூர் கிராமத்தில் குடிநீரைத் தேடி வந்த 3 வயது புள்ளி மான் ஏழுமலை என்பவரது கிணற்றில் தவறி விழுந்தது. இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் மானை மீட்டு, எடைக்கல் காப்புக் காட்டில் விட்டனர்.
(சின்னசேலம் வனப் பகுதியில் விலங்குகளுக்காக அமைக்கப்பட்டுள்ள சோலார் மின் ஆழ்குழாய் கிணறு | படம்:என்.முருகவேல்)
ஆழ்குழாய் கிணறு
வன விலங்குகளின் குடிநீர் தேவையைப் போக்கும் வகையில் விழுப்புரம் மாவட்ட வனத்துறையினர், சின்னசேலம் வனப் பகுதியில் 12.5 சதுர மீட்டர் பரப்பளவில் 75 செ.மீ ஆழமுடைய குடிநீர் தொட்டி அமைத்து, அந்த தொட்டிக்கு 300 மீட்டர் தொலைவில் சோலார் மின்சாரம் மூலம் ஆழ்குழாய் கிணற்றை அமைத்து, அவற்றை தானியங்கி மூலம் இயங்கும் வகையில் வடிவமைத்து, தினந்தோறும் தொட்டியில் தண்ணீர் இருக்கும் வகையில் பராமரித்து வருகின்றனர்.
இதற்கு நல்ல பலன் கிடைத்திருப்பதாகவும், வனப்பகுதியை விட்டு மான்கள் வெளியில் செல்லாமல் வனப் பகுதிக்குள்ளேயே இருப்பதால் விபத்தில் சிக்கும் மான்களின் எண்ணிக்கை பெருமளவு குறைந்திருப்பதாகவும் வனச் சரக அலுவலர்கள் தெரிவித்தனர்.
குடிநீர் பஞ்சம் ஏற்படாது
இது தொடர்பாக மாவட்ட வன பாதுகாப்பு அலுவலர் ஆனந்திடம் கேட்டபோது, ''காடுகளில் உள்ள குட்டைகள் முற்றிலுமாக சிதைந்துவிட்டது.எனவே, விலங்குகளின் குடிநீர் தேவையைப் போக்கும் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் இயற்கையான சூழலுக்கு ஏற்பட்ட தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. மேலும் வனப் பகுதியில் மின்சார வயர்கள் கொண்டு செல்லப்படக் கூடாது என்பதற்காகவே சோலார் மின் திட்டத்தின் மூலம் ஆழ்குழாய் கிணறு அமைத்து அதன் மூலம் நீர் கொண்டு செல்லப்பட்ட தண்ணீர் நிரப்பப்படுகிறது.
முதுமலை போன்ற காடுகளில் யானை உள்ளிட்ட பெரிய விலங்குகளுக்கு இதுபோன்ற ஆழ்குழாய் அமைக்கப்பட்டிருகிறது. ஆனால், சிறிய வனப்பகுதியில் முதன் முறையாக விழுப்புரம் மாவட்டத்தில் தான் இது செயல்படுத்தப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஏனைய 4 வனப் பகுதிகளிலும் இத்திட்டத்தை செயல்படுத்தவுள்ளோம்.எதிர்பார்த்த அளவைக் காட்டிலும் கூடுதல் பலன் கிடைத்துள்ளது, கோடை காலமானாலும், மழைக்காலமானாலும் வன விலங்குகளுக்கு குடிநீர் பஞ்சம் ஏற்படாது.
உலகில் உள்ள 16 லட்சம் உயிரினங்களில் 75ஆயிரம் உயிரினங்கள் இந்தியாவில் உள்ளன. இவற்றை பாதுகாக்க சூரிய ஒளி, காற்று போன்ற இயற்கை சூழ்நிலைகளை மாசுபடாமல் பாதுகாப்பது அவசியமாகும். அரிய வகை நோய்களுக்கு மருந்தாக வனப்பகுதி திகழ்கிறது. வனத்தில் உள்ள விலங்குகளையும், மரங்களையும் நாம் பாதுகாப்பது ஒவ்வொருவருடைய கடமையாகும்
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 2 முதல் 8-ம் தேதி வரை வன உயிரின வார விழா கொண்டாடப்படுகிறது. வனத்தை பாதுகாப்பதால் இயற்கை வளங்கள் பெருகி சுவாசிப்பதற்கு தூய்மையான காற்று கிடைக்கிறது. அத்துடன் முறையான மழை கிடைக்கிறது. நமக்குத் தேவையான இயற்கை வளங்களைப் பெற வனங்களை பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வினை நாம் ஒவ்வொருவரும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். வனத்தையும் வனவிலங்குகளையும் பாதுகாத்து நமக்கு வேண்டிய இயற்கை வளங்களைப் பெறவேண்டும் எதிர்கல சமுதாயத்தினர் வன பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்'' என்றார் ஆனந்த்.
( சின்னசேலம் வனப்பகுதியில் சுற்றித்திரியும் மான்கள் | படம்: என்.முருகவேல்)
தமிழ்நாட்டிலுள்ள நீலகிரி, ஆனைமலை, பொதிகைமலை போன்ற மலைப் பிரதேசங்கள், புதர் காடுகள், ஏரிகள், நதிகள், கழிமுகங்கள், உப்பங்கழிகள், கடற்கரைகள், சதுப்பு நிலங்கள் போன்ற பல்வேறு விதமான புவியமைப்புகள், எண்ணிலடங்கா உயிரினங்களுக்கு உறைவிடங்களாக அமைந்துள்ளன. மக்கள் வாழும் இடங்களுக்கு அருகிலுள்ள தோட்டங்கள், வயல்வெளிகள், குளங்கள், வெட்ட வெளிகள் போன்றவையும் பல உயிர்களுக்கு வாழிடங்களே
கடந்த ஒரு நூற்றாண்டில் இந்த உறைவிடங்களும், அவற்றில் வாழும் கானுயிர்களும் மனிதர்களின் பொறுப்பற்ற நடவடிக்கைகளால் நாசமாக்கப்பட்டுவரும் நிலையில், விழுப்புரம் மாவட்ட வனத்துறையினரின் புது முயற்சியை மற்ற மாவட்ட வனத்துறையினரும் தொடர்ந்தால் வனம் விலங்குகளை மட்டுமல்ல மனிதனையும் வாழவைக்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT