Published : 08 Feb 2020 07:21 AM
Last Updated : 08 Feb 2020 07:21 AM

குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு: தந்தைக்கு 40 ஆண்டு சிறை

பெற்ற குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த குற்றத்துக்காக போக்சோ சட்டத்தில் கைதான தந்தைக்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஈரோடு மகளிர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்த கருமாண்டிசெல்லிபாளையத்தைச் சேர்ந்தவர் குருநாதன் (48). கட்டிடத் தொழிலாளி. இவரது முதல் மனைவி இறந்த நிலையில், 2-வது திருமணம் செய்து கொண்டுள்ளார். இவரது மனைவி தனியார் மருத்துவமனையில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர்களுக்கு 7 மற்றும் 8 வயதில் இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.

தனது மனைவி வேலைக்குச் சென்றிருந்தபோது, தனது இரு மகள்களுக்கும் குருநாதன் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து அவரது மனைவி ஈரோடு மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து போலீஸார் குருநாதனைக் கைது செய்தனர். கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்த சம்பவம் நடந்தது.

ஈரோடு மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் இந்த வழக்கு விசாரணை நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, குருநாதனுக்கு தலா 20 ஆண்டுகள் வீதம் 40 ஆண்டு சிறைதண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார். தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, பாதிக்கப்பட்ட சிறுமிகள் இருவருக்கும் தலா ரூ.2 லட்சம் வீதம் இழப்பீடு வழங்கவும் அரசுக்கு பரிந்துரை செய்து தீர்ப்பளித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x