Published : 07 Feb 2020 05:46 PM
Last Updated : 07 Feb 2020 05:46 PM
திருநெல்வேலி புத்தகத் திருவிழாவில் சாதனை முயற்சியாக 24 மணிநேர தொடர் புத்தக வாசிப்பு நிகழ்வு இன்று 7-வது நாளாக நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ், அதிகாரிகளுடன் அமர்ந்து 1 மணிநேரம் புத்தகம் வாசித்தார்.
பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தக திருவிழாவில் 10 நாட்களும் தொடர்ந்து 24 மணி நேரம் புத்தகம் வாசிப்பு என்னும் சாதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று 7-வது நாளாக நடைபெற்ற இந்த தொடர் வாசிப்பு நிகழ்வில் மாவட்ட ஆட்சியர், அதிகாரிகளுடன் பங்கேற்று புத்தகம் வாசித்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நெல்லை புத்தக திருவிழா கடந்த 1-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த புத்தகத் திருவிழாவில் சாதனை படைப்பதற்காக தொடர் புத்தக வாசிப்பு நிகழ்ச்சி 10 நாட்களும் 24 மணி நேரம் என்று 240 மணி நேரம் நடத்தப்படுகிறது.
ஒரு குழுவுக்கு 3 மணிநேரம் என 80 குழுக்கள் இந்த சாதனையை படைக்க திட்டமிடபட்டுள்ளது. 6-வது நாள் தொடர் புத்தக வாசிப்பில் பங்கேற்ற பாளையங்கோட்டை காதுகேளாதோர் பள்ளி மாணவ, மாணவியர் 10 பேருக்கு தலா ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டது.
புத்தகத் திருவிழாவில் பார்வையாளர்களை ஊக்குவிப்பதற்காக தொடர் போட்டி நடத்தப்பட்டு அதற்கான பரிசுகள் நாள்தோறும் வழங்கப்பட்டு வருகிறது.
இதுவரை திருநெல்வேலி.தூத்துக்குடி,கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட சாகித்ய அகாடமி விருது பெற்றவர்களை அழைத்து கௌரவ படுத்தபடுத்தியுள்ளோம். இதுவரை 3.5 லட்சத்திற்கும் மேலான பார்வையாளர்கள் வந்து புத்தக கண்காட்சியினை பார்வையிட்டுள்ளனர்.
புத்தகத் திருவிழா நடைபெறுவதன் மூலம் பெரியயோர்கள் முதல் பள்ளி மாணவர்களிடம் வாசிக்கும் தன்மையும் புத்தகங்கள் வாங்கும் திறனும் அதிகரித்து உள்ளது என்று ஆட்சியர் தெரிவித்தார்.
மாவட்ட வருவாய் அலுவலர் பூ.முத்துராமலிங்கம், உதவி ஆட்சியர் சிவகுரு பிரபாகரன், துணை ஆட்சியர் அனிதா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT