Published : 07 Feb 2020 05:39 PM
Last Updated : 07 Feb 2020 05:39 PM
தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலம் வெளிப்படைத் தன்மையை நிலைநிறுத்தும் நாடுகளின் பட்டியலில் சர்வதேச தரவரிசையில் இந்தியா, 6-வது இடத்தில் இருந்து 7-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இந்தத் தரவரிசையில் ஆச்சரியப்படும் வகையில் ஆப்கானிஸ்தான் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
சர்வதேச அளவில் 128 நாடுகளில் தகவல் அறியும் உரிமைச்சட்டம் செயல்பாட்டில் உள்ளது. முன்னோடி நாடாக ஸ்வீடன், கடந்த 1766-ம் ஆண்டிலே இந்த சட்டத்தை செயல்படுத்தியது. கடைசி நாடாக கனடா கடந்த 2019-ம் ஆண்டு இந்த சட்டத்தை தங்கள் நாட்டில் செயல்படுத்தியுள்ளது. இந்தியாவில் கடந்த 2005-ம் ஆண்டு இந்த சட்டம் நடைமுறையில் உள்ளது.
அரசின் செயல்பாடுகளைப் பொறுத்தவரை மக்கள் வெறும் பார்வையாளராக மட்டும் இல்லாமல் அரசின் நலத்திட்டத்திற்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது என்பதை அறியவும், அரசின் அத்தனை நடவடிக்கைகளையும் ரூ.10 செலுத்தி அரசினை ஆய்வு செய்யவும் இந்த சட்டம் அத்தியாவசியமான ஒன்றாக உள்ளது என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்து.
இந்நிலையில் இந்த சட்டம் அமலில் உள்ள 128 நாடுகளில் இச்சட்டம் எவ்வாறு செயல்படுகிறது என்ற ஆய்வினையும், அதன் அடிப்படையில் அந்த நாடுகளின் வெளிப்படைத் தன்மை மற்றும் தரவரிசைப் பட்டியலையும் ஆண்டுதோறும் கனடாவைச் சேர்ந்த சட்டம் மற்றும் ஜனநாயக மையம் ( Centre For Law Democracy) என்ற அமைப்பு வெளியிடுகிறது.
இந்த அமைப்பின் ஆய்வில் இந்தியா கடந்த ஆண்டு 6-வது இடத்தில் இருந்து இந்த ஆண்டு 7-வது இடத்திற்கு ஒரு படி கீழே இறங்கியுள்ளது.
இந்த தரவரிசைப் பட்டியல் இந்தியாவின் வெளிப்படைத் தன்மை ஒரு படி கீழே இறங்கியுள்ளது என்பதை காட்டுவதாக தகவல் அறியும் உரிமைச்சட்ட ஆர்வலர்கள் ஆதங்கம் அடைந்துள்ளனர்.
இதுகுறித்து மதுரை நெல்பேட்டையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஹக்கிம் கூறியவாது:
"கனடா அமைப்பு மேற்கொண்ட இந்த சர்வதேச ஆய்வில் ஒவ்வொரு நாட்டிற்கும் 150 மதிப்பெண் அளிக்கப்படும். இதில், ஒவ்வொரு அணுகுமுறைக்கும் ஒரு குறிப்பிட்ட மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்படுகிறது. தகவல் பெற அணுகும் உரிமை, தகவல் கோர வாய்ப்பு அளித்தல், விதிவிலக்கு மற்றும் மறுப்புகள், மேல்முறையீடுகள், தடைகள், விளம்பரப்படுத்துதல் ஆகிய அடிபப்டையில் 150 மதிப்பெண்ணுக்கு, 127 மதிப்பெண் இந்தியா பெற்றுள்ளது.
கடந்த காலங்களில் 2011, 2012, 2013 ஆகிய ஆண்டுகளில் தகவல் அளிக்கும் உரிமைச்சட்ட செயல்பாட்டில் இந்தியாவின் வெளிப்படை தன்மை உலக அளவில் 2-வது இடத்தில் இருந்துள்ளது.
2014ல் 3-வது இடத்திலும், 2016ல் 4-வது இடத்திலும், 2017-ல் 5வது இடத்திலும், 2018ல் 6-வது இடத்திலும், 2019ல் 7-வது இடத்திற்கும் இந்தியா தொடர்ச்சியாக பின்னுக்குத் தள்ளப்பட்டது.
கடந்த 10 ஆண்டுகளை ஒப்பிடும்போது இந்தியா இப்பட்டியலில் இறங்கு முகத்தில் உள்ளது. 2019-ம் ஆண்டில் சர்வதேச நாடுகளையே ஆச்சரியப்படுத்தும் வகையில் ஆப்கானிஸ்தான் முதல் இடத்தில் உள்ளது. மெக்ஸிகோ 2-வது இடத்திலும், செர்பியா மூன்றாவது இடத்திலும், இலங்கை 4-வது இடத்திலும், ஸ்லேவேனியா 5-வது இடத்தஇலும், அல்பேனியா 6-வது இடத்திலும் உள்ளன.
முக்கிய சர்வதேச நாடுகள் அமெரிக்கான 72-வது இடத்திலும், இங்கிலாந்து 43-வது இடத்திலம், பாகிஸ்தான் 32-வது இடத்திலும், சீனா 87-வது இடத்திலும் உள்ளன. இந்த ஆய்வை நடத்திய கனடா 58-வது இடத்தில் உள்ளது. தகவல் அறியும் உரிமைச்சட்டம் என்பது ஜனநாயக நாட்டில் வாழும் ஒரு குடிமகனுக்கு தனது உச்சப்பட்ச அதிகாரத்தினை வெளிப்படுத்துவதற்கு மிக சிறந்த ஆயுதமாகும்.
இந்த ஆயுதத்தின் கூர்மை என்பது ஆண்டாண்டிற்கு நடக்கும் இதுபோன்ற ஆய்வின் மூலம் வெளிப்படுகிறது. அவ்வகையில் மற்றநாடுகளை ஒப்பிடும்போது உலக அரங்கில் நாம் 7-வது இடத்தை பிடித்தது சிறப்பு என்றாலும், தொடர்ந்து பின்னடைவே பெறுவதால் வெளிப்படைத் தன்மை குறைவதை அந்த தரவரிசை காட்டுகிறது."
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT