Published : 07 Feb 2020 04:43 PM
Last Updated : 07 Feb 2020 04:43 PM
புதுச்சேரியில் வளர்ச்சியைக் கெடுத்துவிட்டனர். இது மூடுவிழா அரசு என்று என்.ஆர்.காங்கிரஸ் நிறுவனரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரங்கசாமி புதுச்சேரி அரசைக் குற்றம் சாட்டியுள்ளார்.
என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் 10-ம் ஆண்டு தொடக்க விழா இன்று (பிப்.7) கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு புதுச்சேரி ரெட்டியார்பாளையத்தில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கட்சித் தலைவர் ரங்கசாமி கலந்து கொண்டு கொடியேற்றி, இனிப்புகளை வழங்கினார்.
பின்னர் அவர் பேசியதாவது:
"புதுச்சேரியில் தற்போது காங்கிரஸ்- திமுக கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. கூட்டணிக் கட்சியினரே மோசமான ஆட்சி நடைபெறுவதாக அடிக்கடி மேடைகளில் வெளிப்படுத்தி வருகின்றனர். அதுபோல் ஆளும் கட்சி எம்எல்ஏக்களும் விமர்சனம் செய்து வருகின்றனர். ஒரு எம்எல்ஏ, ஆட்சியின் ஊழல் பட்டியலை ஆளுநரிடம் கொடுத்துள்ளார். மக்கள் எப்போது நல்லாட்சி வரும் என்று நினைக்கின்றனர்.
தேர்தல் வாக்குறுதி எதையும் தற்போதைய ஆட்சியில் நிறைவேற்றப்படவில்லை. இதைத் தெரிவித்தால், மத்திய அரசு ஒத்துழைப்பு தரவில்லை, ஆளுநர் தடுக்கின்றார், எதிர்க்கட்சி தடுக்கின்றது என்று தினமும் ஏதாவது ஒரு பாட்டை முதல்வர் பாடுவார். புதுச்சேரியை வீணாக்கிவிட்டனர். வளர்ச்சியைக் கெடுத்துவிட்டனர். அரசு மருத்துவமனைகளில் மருந்து இல்லை என்று எப்போதாவது எழுதி வைத்துள்ளனரா? இந்த ஆட்சியில் எழுதி வைத்துள்ளனர். கல்விக் கட்டண நிதி தரவில்லை. விவசாயத்தில் ஒன்றுமே செய்யவில்லை. கூட்டுறவு நிறுவனங்கள் அனைத்தையும் மூடி வருகின்றனர். இது மூடுவிழா அரசு.
முதல்வருக்கு புதுச்சேரி மக்களைப்பற்றி கவலையில்லை. தேசிய அரசியலைப் பேசி புதுச்சேரியை வீணாக்கி வருகிறார். வருவாய் இல்லை என்று வரியை உயர்த்துகிறார். வருவாய்க்காக கேசினோ சூதாட்டத்தைக் கொண்டுவர முயல்வதை வன்மையாகக் கண்டிக்கிறோம். லாட்டரியால் எத்தனையோ குடும்பங்கள் அழிந்தன. தற்போது ஒரு சிலரின் நன்மைக்காக லாட்டரியையும், கேசினோ சூதாட்டத்தையும் கொண்டுவர முயல்கின்றனர்.
துணைநிலை ஆளுநரால் தூக்கம் இல்லை என்று முதல்வர் கூறுகிறார். இதற்கு ஆளும் திறமை இல்லாததுதான் காரணம். தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி வளர்ச்சியைக் கொண்டு வருவதுதான் திறமை. ஆளுநர் தடுத்தால் அதிகாரம் கேட்டு வழக்கு, அரிசி போட முடியவில்லை என்றால் வழக்கு என்று எதற்கெடுத்தாலும் வழக்கு என்றால் ஆட்சியாளர்களுக்கு உள்ள திறமைதான் என்ன?
2011-ல் ஆட்சிக்கு வந்தோம், அடுத்து 2021-ல் தேர்தல் வரவுள்ளது. அப்போதும் நாம் ஆட்சி அமைக்க வேண்டும். வரும் சட்டப்பேரவைத் தேர்தலை நோக்கிப் பணியாற்ற வேண்டும். 2021-ம் ஆண்டு தேர்தலில் புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும்".
இவ்வாறு ரங்கசாமி பேசினார்.
தவறவிடாதீர்
டிஎன்பிஎஸ்சி முறைகேடு: 'பப்ளிக் சர்வீஸ் கரப்ஷன்' என்றுதான் சொல்ல வேண்டும்; ஸ்டாலின் விமர்சனம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT