Published : 07 Feb 2020 01:37 PM
Last Updated : 07 Feb 2020 01:37 PM
தன் காலணிகளை கழற்ற வைத்ததற்காக, பழங்குடி சிறுவனை நேரில் அழைத்து அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வருத்தம் தெரிவித்தார்.
தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், நீலகிரியில் நேற்று (பிப்.6), தனது காலணிகளை பழங்குடிச் சிறுவனை அழைத்து கழற்றிவிடச் செய்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்தச் சம்பவத்துக்குப் பல்வேறு தலைவர்களும், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனுக்குக் கண்டனத்தைத் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே, தான் அந்தச் சிறுவர்களை தன்னுடைய பேரனாகக் கருதியே காலணிகளை கழற்றிவிடச் சொன்னதாக, அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வருத்தம் தெரிவித்திருந்தார்.
தன்னைக் காலணி கழற்றச் சொன்ன தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பழங்குடிச் சிறுவன் மசினகுடி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இந்நிலையில், இன்று (பிப்.7) காலையில், உதகையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு, பழங்குடி சிறுவன் மற்றும் அவரது குடும்பத்தினரை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நேரில் வரவழைத்தார். அவர்களுடைய சந்திப்பு சுமார் 1 மணிநேரத்திற்கும் மேலாக நீடித்தது.
இந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், தன் பேரனாக நினைத்தே சிறுவனை அவ்வாறு செய்ய சொன்னதாகவும், அதற்கு ஏற்கெனவே மன்னிப்பு தெரிவித்ததாகவும் கூறினார். தற்போது சிறுவனை நேரில் வரவழைத்து, சிறுவனிடமும் அவரது குடும்பத்தினரிடமும் வருத்தம் தெரிவித்ததாக அமைச்சர் தெரிவித்தார்.
இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய சிறுவனின் தாயார், அமைச்சர் வருத்தம் தெரிவித்ததையடுத்து, அவருக்கு எதிரான புகார் மனுவை வாபஸ் பெற உள்ளதாக தெரிவித்தார்.
இந்த சந்திப்பின் போது, மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா உட்பட அதிகாரிகள் பலர் இருந்தனர்.
இதனிடையே, சிறுவனுடன் வந்திருந்த பழங்குடி மக்கள், தங்கள் கிராமத்தில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தர வேண்டும் எனவும், புலிகள் காப்பகத்தில் பழங்குடி மக்களுக்கு வேலை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.
தவறவிடாதீர்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT